செடிகளை வளர்த்தால் நோய்களை விரட்டலாம்!

‘அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் இருக்கும் அறையில் செடிகள் இருந்தால், அவர்கள் வெகு சீக்கிரமே குணமடைவார்கள்’ என்கின்றனர் கன்சாஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்.

நோய்களை விரட்டி, ஆரோக்கியத்தைக் காப்பதில் செடிகளுக்கு முக்கியப் பங்குண்டு. ரத்த அழுத்தம், குறைந்த இதயத் துடிப்பு, சோர்வு, பதற்றம், தேவையற்ற சிந்தனைகள், தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு, வைரல் ஃபீவர், மன அழுத்தம், மன சோர்வு போன்ற நோய்களைக் குணமாக்க செடிகள் உதவுகின்றன. அதிக வெளிச்சத்தைப் பார்த்துச் சோர்வடைந்த கண்களுக்குப் பச்சை நிறம் புத்துணர்வை அளிக்கவல்லது.

செடிகளை வளர்ப்பதால் வீட்டின் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன் ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் தடையின்றி எளிமையான சுவாசத்தைச் சுவாசிக்க உதவி புரியும். ஒவ்வொரு செடியும் 97 சதவிகிதம் ஈரத்தன்மையை வெளியிடுவதால், சளி, தொண்டையில் தொற்று, வறட்டு இருமல், வறண்ட சருமம் போன்ற பிரச்னைகள் வராது. அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருந்தால் கூடச் சீக்கிரமே குணமாகிவிடும்.

வீட்டை அலங்கரிக்கும் செடிகள்

*  பீஸ் லில்லி மற்றும் அக்லோனிமா: அனைத்து செடிகளுமே பொதுவாகவே காற்றைச் சுத்தப்படுத்தும். அதில் முதல் இடத்தில் இருப்பவை அக்லோனிமா செடி. உட்புறக் காற்றை அதிகரிக்கக் கூடியவை.

  • அந்தூரியம்: உட்புறம் வளர்க்கும் செடிகளிலே நான்கு நிறத்தில் பூக்கக் கூடிய செடி இது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு நிறத்தில் (பர்புள், டார்க் ரெட், ஆரஞ்ச், வொயிட்) பூக்கும்.

  • ஆர்சிட்: இதில் பூக்கும் பூ, 40 நாட்கள் வரை இருக்கும். பிறகு உதிர்ந்தவுடன் தண்டை கட் செய்து, 2-3 மாதத்துக்குச் சூரிய ஒளி படும்படி வைத்தால் மீண்டும் பூ பூக்கத் தொடங்கும். அவற்றை உட்புறத்தில் வைத்துக் கொள்ளலாம். இந்தச் செடிகள் வொயிட், பின்க், பர்பிள் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

  • க்ளோரோபைடம்: கிப்ட்டாகக் கொடுக்கலாம். இதன் வெள்ளை மற்றும் பச்சை நிற இலைகள் கண்களைக் கவரும். க்ளாஸ் பவுல், மது கோப்பை, தேங்காய் ஓடு போன்றவற்றில் வளர்க்கலாம். சிறிய அளவிலான செடி என்றாலும் பார்க்க அழகாக இருக்கும்.

  • மணிப்ளான்ட்: வீட்டினுள் வளர்க்கலாம். கொடி போலப் படர, நடுவில் மாஸ் ஸ்டிக் வைத்தால் அவற்றைச் சுற்றி சுற்றி படர்ந்து வீட்டையே அழகாக்கிடும்.

  • போன்சாய் மரங்கள்: ஒரு பெரிய மரத்தை சின்னத் தொட்டியில் சுருக்கி விடலாம். அதே சின்ன மரத்தை வெளியில் பெரிய இடத்தில் வைத்தால் அது மரமாக வளரும்.

பால்கனி மற்றும் மாடியை அழகாக்கும் செடிகள்

  • லெமன் க்ராஸ்: இது கொசுகளை வீட்டில் அனுமதிக்காது. இதன் இலையைக் கசக்கி சுவாசித்தால் எலுமிச்சை வாசம் வீசும். இந்த நறுமணம் கொசுகளை வீட்டிலிருந்து விரட்டி அடிக்கும். மேலும், இந்த இலையை வெந்நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வயிறு உப்பசம் குணமாகும்.
  • மிண்ட் துளசி: கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஹால்சோ, மிண்ட் சிவிங் கம் சாப்பிட்டால் எப்படியிருக்குமோ அத்தகைய சுவையை இந்தச் செடியின் இலைகள் தரும். சளி, இருமல் பிரச்னைகளுக்குச் சிறந்த நிவாரணி.

  • கற்றாழை: இந்தச் செடியின் உள்ளிருக்கும் சதை பகுதியை முகத்தில் பூசி வர பருக்கள், வடுக்கள் மறைந்து முகம் பிரகாசிக்கும். மோருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து குடித்தால் கர்ப்பப்பை பிரச்னைகள் தீரும்.

  • ஆல் ஸ்பைசஸ்: இந்தச் செடி வீட்டில் இருந்தால் சமையலுக்கு, மசாலா பொருட்கள் வாங்க வேண்டிய அவசிம் இருக்காது. பட்டை, ஏலம், பிரிஞ்சி இலை, அன்னாசி பூ போன்ற அனைத்து பொருட்களின் நறுமணத்தை இந்தச் செடியின் இலைகளே தந்துவிடும். இதன் இலைகளைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

  • சிறியாநங்கை: இந்தச் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள் வராது. இதன் இலையை வைத்து கிரீன் டீ போட்டுக் குடிக்கலாம். உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.

செடிகள் வெறும் அழகியல் தொடர்பான பொருளல்ல… நம் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மாற்றும் வல்லமை பெற்றவை. செடிகளை வீட்டில் அனுமதித்தால் மன அமைதிக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.