சென்னை…மழைக்கால நரகம்!

டந்த சில வருடங்களாகவே பெரும் கோடையை அனுபவித்த நமக்கு, இந்த வருட மழைக்காலம் ஆறுதல். மழையை வெவ்வேறு கோணங்களில் நாம் அணுகி வருகிறோம். சின்னச் சின்னதாய் சில துளிகள் சிதறி விழுந்தாலே ஃபேஸ்புக்கில் கவிதை எழுதத் தோன்றிவிடுகிறது.

மழை ரசனைக்குரிய ஒன்று அவ்வளவுதான். சென்னை நடைபாதையில் செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கும், வீடற்று நகர வீதிகளே வசிப்பிடங்களாக வாழ்வோருக்கும் மழை ‘இம்சை’.

விவசாயிகளுக்கு மழை இன்பமா துன்பமா என்பது வெள்ளாமையின் மீது படர்ந்து நிற்கும் தண்ணீரைப் பொருத்தது. மழையே இல்லை என்றால் வெள்ளாமை இல்லை. அதிகம் பெய்யும் மழையால் வெள்ளாமை நாசம் என்பதுதான் கடந்த பல ஆண்டுகளாக நம் விவசாயச் சமூகங்கள் சந்தித்து வரும் நெருக்கடி. அதிக மழை, அதிக வெப்பம், அதிக குளிர் என காலம் தப்பி எல்லாமே அதிகமாகிக் கொண்டே போகிறது.

ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் அதை தேக்கி வைத்து முறையாக பயன்படுத்த ஏராளமான கண்மாய்களும், குளங்களும் தமிழக நீர்பாசன முறைமையில் இருந்தது. அதை அழித்ததன் விளைவுதான் மழை வெள்ளம் தேங்க இடமின்றி ஊரை நாசமாக்குகிறது. இதெல்லாம் நகரத்திற்கு வெளியே உள்ள நிலைமை. சென்னை…? அது நமது தலை நகரம் அல்லவா?

கடந்த 17-ம் தேதியில் இருந்து வடகிழக்கு பருமழை பெய்து வருகிறது. இந்த மழையை எதிர்கொள்ளும் திராணி சென்னை நகருக்கோ அதை நிர்வகிக்கும் சென்னை மாநகராட்சிக்கோ இல்லை. அமைச்சர் வளர்மதியும், மேயர் சைதை துரைசாமியும் கணுக்கால் அளவு தண்ணீரில் நடந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டதாக புகைப்படங்கள் வெளிவந்தன. ஆனால் சாதாரண மிஸ்டர் பொதுசனங்களின் அவதி மோசமாக இருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பாஸ்போர்ட் அலுவலகத்தின் எதிரே உள்ள பிரதான சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பாதசாரிகள் நிற்பதற்கே இடமில்லை. சாலையில் வாகனங்கள்,  சாலை ஓரத்தில் ஒரு ஆள் உயரத்திற்கு குழி. கழிவுநீர் கால்வாய்க்கான குழியாகவோ அல்லது தொலைபேசி துறை, இன்டர்நெட் காரர்களோ தோண்டிருக்க வேண்டும். பல மாதங்களாக மூடப்படாமல் கிடந்த அந்த குழியில் நடுவயதைக் கடந்த பெண்மணி விழுந்து கிடந்தார். அவருடைய அலுவலகத்தில் வேலை பார்த்த சிலர் வந்து அவருக்கு கைகொடுத்து தூக்கி விட்டனர். சற்று நேரம் கழித்து நெருக்கடியான டிராஃபிக் சூழலில் முந்திச் செல்ல முயன்ற இரு சக்கர வாகனம் ஒன்று, ஓட்டியவரோடு அந்த குழிக்குள் விழ அவரது வாகனம் மொத்தமாக தண்ணீருக்குள் மூழ்கியது. இடி, மின்னல், மழை… என வீட்டுக்கு அவசரமாக செல்ல முயலும் சென்னைவாசி உருப்படியாக வீடு போய் சேர்வதே அதிசயம் என்றாகி விட்டது.

அரசுத்துறைகள், திட்டங்கள் என்னும் பெயரில் சென்னை நகரை குதறி எடுத்திருக்கிறார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் எதோ ஒரு பணிக்காக சாலையை ஆள் உயரத்திற்கு தோண்டியிருக்கிறார்கள். ஒரு குழியை மூடுவதற்கு முன்பே இன்னொரு பக்கம் தோண்டுகிறார்கள். தோண்டி தோண்டி எந்தப் பக்கம் திரும்பினாலும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இந்த மழையில் குணசேகரன் என்பவர் இப்படி ஒரு குழிக்குள் விழுந்து இறந்தும் போயிருக்கிறார். மழை மட்டுமல்ல…விபத்துகளும் இதனால் அதிகம். இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடப்பது தமிழகத்தில். அதிலும் சென்னைக்குதான் முதல் இடம்.

சென்னையில் மட்டும் ஏன் இத்தனை விபத்துகள் என்றால், இப்படி தோண்டப்படும் குழிகளும் வளர்ச்சித் திட்டங்களுக்காக நகரம் கையாளப்படும் விதமும்தான் காரணம். வாகன நெருக்கடிகளைக் குறைக்க 10-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டன. அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு எதிரே முன்னர் வாகன நெருக்கடி அதிகம் இருந்தது. தி.நகர் உஸ்மான் சாலை லிபர்ட்டி பாலத்தோடு இணையும் சந்திப்பில் வாகன நெருக்கடி இருந்தது. பாலங்கள் மூலம் அந்த இடங்களில் வாகன நெருக்கடி இல்லை. ஆனால் அந்த நெருக்கடி இன்னொரு இடத்திற்கு இடம் மாறியிருக்கிறது. வாகன நெருக்கடி குறையவில்லை. போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய போலீசாரோ பல நேரங்களில் ஜார்ஜ் கோட்டை செல்லும் வழியை சரி செய்வதிலோ அல்லது போயஸ் கார்டன் சாலையிலோதான் நிற்கின்றனர்.

ஆக சென்னை மழைக்காலங்களில் நரகம் ஆகி விடுகிறது. இதை சரி செய்ய வேண்டிய மாநகராட்சியோ அம்மா புராணம் பாடுவதிலேயே கவனமாக இருக்கிறது.