‘செல்பி மோகம்’ மன நோய்…எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள்!

ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும், ஷேர்களும் வாங்குவதை ஸ்மார்ட் போன் வாசிகள் பெருமையாகக் கருதுகிறார்கள். இந்தப் பெருமைக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கும் உண்மைகள் அதிரவைப்பதாக உள்ளது.

செல்பிக்கு சாதாரண பிரஜைகள் முதற்கொண்டு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அடிமையாகிவிட்ட நிலையை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டின் பழைமையான பாலத்திலிருந்து தொங்கியபடி `செல்பி` எடுக்க ஆசைப்பட்ட இளம் மருத்துவ மாணவி ரேச்சல்,பாலத்திலிருந்து விழுந்து உடல் நொறுங்கி பரிதாபமாக பலியானார். அதே போல இங்கிலாந்து நாட்டின்,  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்  கெரீத் ஜோன்ஸ், 90 அடி உயரமான  மலையுச்சியில் நின்றபடி `செல்பி` எடுக்க முயன்று, மலையுச்சியில் இருந்து விழுந்து இறந்தார்.

அண்மையில், ரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் துப்பாக்கியை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக டிரிக்கரை அழுத்தியதால் துப்பாக்கி குண்டு தலையில் பட்டு பரிதாபமாகப்  பலியானார்.

இந்த சம்பவம் செல்பி எடுக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும் செல்பி எடுப்பது குறைந்தபாடில்லை. இவை எல்லாம் உலக நிகழ்வுகள். நமது தமிழ் நாட்டிலும் ஒரு `செல்பி` சோக சம்பவம் நடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். 27 வயதான கூலித் தொழிலாளி. செல்பி எடுத்துக்கொள்ளும் அதீத ஆர்வம் கொண்டவர். கடந்த மார்ச் மாதம் அவர் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் மீது நாகப்பாம்பு ஊர்ந்து விளையாடியுள்ளது. அதனையறிந்த சந்திரகுமார் கொடும் நஞ்சு கொண்ட நாகப்பாம்பை கையில் பிடித்துக்கொண்டு செல்பி எடுத்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அந்த நேரத்தில் சந்திரகுமார் உடலில் பல இடங்களில் நாகப்பாம்பு கொத்தி, கொடிய விஷத்தை இறக்கியுள்ளது. இதனால் வாயில் நுரை தள்ளி அங்கேயே சந்திரகுமார் இறந்தார்.

இப்படி நிறைய சம்பவங்கள் அடிக்கடி நிகழத்தான் செய்கின்றன.ஆனால் செல்பி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் செல்பிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இப்படி செல்பி மோகம் பிடித்து அலைவது ஒரு வித மன நோய் என்று அதிர்ச்சி தருகிறார்கள் அமெரிக்க மனநல மருத்துவர்கள். அதே நேரத்தில் அதிலிருந்து விடுபடவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

ஒருகட்டத்தில் மொபைல் போன் மூலமும், கேமிரா மூலமும் தன்னைத் தானே, ‘செல்பி’ படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் அதைப் பதிவேற்றம் செய்வது, இளைஞர்களிடம் பொழுது போக்காக இருந்தது. இது தற்போது, அவர்களின் `முழுநேர பணி` யாகவே  மாறிவிட்டது. இது புதுவகையான மனநோய்தான்
என்று கண்டறிந்துள்ள  அமெரிக்க மனநல மருத்துவர்கள், இதை மூன்று வகையாகவும் பிரித்து
உள்ளனர்.

1. தினமும் மூன்று முறை, ‘செல்பி’ படம் எடுப்பது; அதை சமூக வலைதளங்களில் பதிவிடாதது ஆரம்ப மன நிலை.
2. தினமும் மூன்று முறை படம் எடுத்து, அதை சமூக வலை தளங்களில் தவறாமல் பதிவிடுவது  இரண்டாம் நிலை.

3. எப்போதும் எதைப் பார்த்தாலும்  ‘செல்பி’ படம் எடுத்து உடனுக்குடன் சமூக வலைதளங்களுக்கு அனுப்புவதை  அன்றாட செயலாகக் கருதுவது மூன்றாவது நிலை.

இதுதான் ‘செல்பி’ மோகம் முற்றி, மன நோயாளியாக  மாறும் நிலை என்று எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அதனால் செல்பி மோகத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு ஸ்மார்ட் போன் வாசிகளை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இதற்கென பிரத்யேக மருத்துவமும்  ‘ஒபாமா கேர்’ என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் செல்பி பிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விஷேசம் என்னவென்றால்  அமெரிக்க அதிபர் ஒபாமாவும், நமது இந்திய பிரதமர் மோடியை போல செல்பி பிரியரே..!