டாட்டூ… யோசிக்க வேண்டிய விஷயங்கள்!

[wysija_form id=”1″]

ல்லூரி மாணவர்களை கவர்ந்திழுக்கும் மேலை நாட்டுக் கலாச்சாரத்தில், அழகுக்காக உடலில் ‘டாட்டூ’ வரைந்து கொள்வதுதான் இன்றைய டிரெண்ட். ஆண், பெண் என இரு பாலரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த டாட்டூக்களை உடலில் குத்திக் கொள்வதற்கு முன்பு யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. இது பற்றி, டாட்டூ வரைப்பவர்கள் சிலரிடம் பேசியதிலிருந்து கிடைத்த தகவல்கள் இங்கே.

‘‘நிறைய பேர் ஸ்டைலுக்காக குத்த வாராங்க. அவங்க யாருக்கும் இதோட வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை. இதை முதன் முதலில் புரட்சிக்காகத்தான் பயன்படுத்தினார்கள். அப்போ, டாட்டூ குத்தினவங்க எல்லாம் புரட்சிக்காரங்கனு சொல்லுவாங்க. இப்போ அது ஃபேஷன்ல ஆயிடுச்சு. பலருக்கும் இதோட விபரீதம் தெரியறதில்லை.

சமீபத்துல ஒரு பெண் ‘நான் லவ்ல இருந்தப்ப என் பாய் ஃபிரண்டோட பெயரை டாட்டூ குத்திக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே லவ் பிரேக் ஆயிடுச்சு. இப்ப எங்க வீட்டுல மாப்பிள்ளைப் பார்த்துட்டு இருக்காங்க. அதனால இந்த டாட்டூவை அழிச்சிடுங்க’னு சொன்னா. ஆனா, அந்தப் பெண் குத்தியிருந்தது, அழிக்கவே முடியாத நிரந்தர டாட்டூ. இதை அழிக்க முடியாது. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவர்கிட்ட பொறுமையா எடுத்துச் சொல்லி புரிய வைங்க. வேற வழியில்லைனு சொல்லி அனுப்பி வைச்சோம்.

சிலர் நாங்க காட்டுற டிசைன் பிடிச்சுப்போய் அதையே குத்திக்குவாங்க, சிலர் புது டிசைன்தான் வேணும்னு அடம்பிடிப்பாங்க. சிலரோ, அவங்களுக்குப் பிடிச்ச பிரபலம் வரைஞ்சிருந்ததை வரைய சொல்லுவாங்க. சிலர் இந்த டாட்டூ வரைஞ்ச நேரம், என் பிசினஸ் படுத்திடுச்சு. அதிர்ஷ்டம் இல்லை… அழிச்சிடுங்’கனு சொல்லுவாங்க.

இப்ப பெண்களுக்குனு புதுசா சில விஷயங்கள் வந்துருக்கு. லிப்ஸ்டிக் பதிலா, உதட்டுல டாட்டூ வரைஞ்சுக்கலாம். ஒரு முறை வரைஞ்சிட்டா, நிரந்தரமா அப்படியே இருக்கும். லிப்ஸ்டிக் போட்டுக்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே மாதிரி ஐ லைனருக்கும் ஒரு ‘மை’ வந்திருக்கு. அப்படியே கண்ணுல நிரந்தரமா இருக்கும்.

ஆனா, சிலரோட தோலில் இந்த டாட்டூ மை பட்டால் அலர்ஜியாகிடும். அதனால அவரவர் தோலின் தன்மைக்கு ஏத்த மாதிரி தேர்ந்தேடுத்துக் கொள்வது ரொம்ப முக்கியம். காய்கறி, பழங்களிருந்து தயாரிக்கிற மை வகைத்தான் நல்லது. அது சருமத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. பார்க்கவும் அழகாயிருக்கும். கலர் டாட்டூ பெரும்பாலும் யாரும் போட்டுக்க விரும்பறதில்லை.

டாட்டூ குத்தனும்னு ஆசைப்படுறவங்களுக்கு நாங்க சொல்றது ஒண்ணே… ஒண்ணுதான். உங்களுக்குப் பிடிச்சிருந்தா மட்டும் டாட்டூ வரைஞ்சுக்குங்க. உங்க நண்பர் குத்தியிருக்கார். அதனால நானும் குத்திக்கனும்னு வராதீங்க. முதல் முறைக் குத்தும்போது அழிக்ககூடிய டாட்டூக்களைக் குத்திக்குங்க. ஏன்னா காலம் முழுக்கப் பிடிக்காத ஒண்ணை உடம்புல சுமந்துட்டு இருக்க முடியாது பாருங்க!
[wysija_form id=”1″]