‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை!…

எல்லாவற்றுக்கும் கர்மவினையையும், தலையெழுத்தையும் காரணம் சொல் வது சோம்பலின் அடையாளம்; முயற்சிக்கத் தயங்குபவனே கர்மவினையைக் காரணம் சொல்வான் என்கிறான் நண்பன் ஒருவன். எனில், கர்ம வினை என்பதெல்லாம் வெறும் கற்பனையா?

முதல் கண்ணோட்டம்

விருப்பப்படி செயலில் இறங்குவது ‘முயற்சி’. நிர்பந்தமாக செயலில் இறங்கவைப்பது ‘கர்மவினை’. முயற்சி நமக்குக் கட்டுப்பட்டது. கர்மவினை நம்மைக் கட்டுப்படுத்துவது. ஒன்றில் சுதந்திரம் உண்டு; மற்றொன்றில் இல்லை.

? ஒருவிஷயத்தைச் செயல்படுத்துவது நாம்தான் எனும்போது, சுதந்திரம் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஊருக்குப் போக வேண்டும் என்று விருப்பம். ரயிலிலும் போகலாம்; பேருந்திலும் போகலாம்; காரிலும் போகலாம். அல்லது, போகாமலும் இருக்கலாம். இந்த முயற்சியில் முழுச் சுதந்திரம் இருக்கும். மேலதிகாரியின் தொந்தரவு எல்லையை மீறிவிட்டது. வேலையை ராஜினாமா செய்துவிடுகிறான். அதன் எதிர்விளைவு, அவனைத் துயரத்தில் ஆழ்த்தியது. இங்கு அவனது விருப்பத்துக்கு எதிராகவே செயல்பாடு நிகழ்ந்தது. வேலையைத் துறக்க அவனுக்கு விருப்பம் இல்லை. ஆக, விருப்பத்தோடு செயல்படுவது முயற்சி; விருப்பத்துக்கு மாறாகச் செயல்படவைப்பது கர்மவினை. செயல்பட்ட பிறகே அது கர்மவினை என்று தெரியும். நமது சுதந்திரமான முயற்சி பறிக்கப்பட்டு, கர்மவினை வென்றுவிடும். கர்மவினையானது முன்னெச்சரிக்கையாகச் செயல்பட இடம் தராது. ஆறாவது அறிவும், ஆராயும் திறனும், சுதந்திரமாகச் செயல்படும் திறமையும் இருந்தும், அவை அத்தனையையும் முடக்கிவைத்து, கர்மவினை தனது செயல்பாட்டில் வெற்றி கண்டுவிடும்.

? கர்மவினை என்று எதைச் சொல்கிறீர்கள்? முதலில், இதற்கு விளக்கம் தாருங்கள்?!

முற்பிறவிகளில் நமது முயற்சியால் சேமித்த பாவபுண்ணியங்கள் அல்லது நல்லதுகெட்டதுகளே கர்மவினை. நல்ல கர்மவினைகள் நல்ல பலன்களையும், கெட்ட கர்மவினைகள் கெடுதலையும் திணித்துவிடும். வெளியிலிருந்து எந்தச் சக்தியும் நம்மைத் தாக்க வில்லை. முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் சேமித்த செயல்பாடுகளே கர்மவினையாக மாறி, துயரத்தையும் மகிழ்ச்சியையும் உணரவைக்கின்றன.

கண்ணால் பார்க்கும் விஷயங்களும், செயல்புலன்களின் செயல்பாடுகளும் மனதில் பதிந்துவிடும். மனதின் கட்டளையில் செயல் புலன்கள் இயங்கும். அதன் செயல்பாடுகள் மனதில் பதிந்துவிடும். காட்சிகள் மட்டும்தான் மனதில் பதியும் என்றில்லை; செயல்களும் பதியும். கறைபட்ட கை, அரவணைத்த கை, ஆட்கொண்ட கை என்றெல்லாம் சொல்வது உண்டு. மனமானது செயல்பாட்டைப் பதியவைப்பதால்தான் இந்த மதிப்பீடுகள் தோன்றுகின்றன. துயரம் அல்லது மகிழ்ச்சியை உணரும் காலம் வரும்போது, கர்மவினை செயல்பட்டு வெற்றி கண்டுவிடுகிறது.

? அப்படியானால், வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் காரணம் இல்லையா?

நம்மில் பலரும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்! கர்மவினை மகிழ்ச்சியைத் திணித்து உணர வைக்கும்போது, அது நமது பெருமையால் விளைந்ததாக எண்ணுவோம்; கர்மவினை ஞாபகத்துக்கு வராது. துயரம் தாக்கும்போதுதான் கர்மவினை ஞாபகத்துக்கு வரும். கர்மவினை சுயநலத்தை வலுப்படுத்தும். சுயநலம், ஆராய இடம் அளிக்காமல் செயல்பட்டு விடும். கர்மவினை சுயநலம் வாயிலாக வென்று விடும். நாமே சுயநலத்தை ஏற்று, கர்மவினையின் பலனில் சிக்கிக்கொள்வது உண்டு! கர்மவினையைப் பரிகாரத்தாலோ, எதிர்த்துப் போராடியோ வெல்ல இயலாது. மனதில் பற்றிக் கொண்டிருக்கும் கர்மவினையின் வாசனையைக் கரைத்துவிட வேண்டும். அது அழிந்தால், துயரம் தோன்ற வழி இல்லை. மனதில் தோய்ந்த மாசை மனதின் செயல்பாட்டால் அகற்ற வேண்டும். வேறு நம்பிக்கையான கருவிகள் எதுவும் இல்லை.

? சரி, கர்மவினையே எல்லாவற்றுக்கும் காரணம் என்று வைத்துக்கொள்வோம். அதை வெற்றிகொள்ள வழி இல்லையா?

மனதின் மாசை அகற்றித் தூய்மையாக்கப் பல வழிமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள் நம் முனிவர்கள். ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம், வேதாந்தம், மீமாம்சை போன்ற ஆறு தரிசனங்கள் மாசை அகற்றும் நடைமுறையை விளக்குகின்றன.  ஆனால், இன்றைய சூழலில் அவற்றை உள்வாங்கி நடைமுறைக்குக் கொண்டுவரும் தகுதி படைத்தவர்கள் அரிதாகிவிட்டார்கள். பிரபஞ்சத்தில் தென்படும் பொருள்களின் மீதான ஈர்ப்பும், முற்பிறவியில் நாம் சேமித்த கர்மவினையும் நம்மை வலுக்கட்டாயமாகத் துயரத்தில் சிக்கவைத்து அலைக்கழிக்கின்றன. துயரத்தில் இருந்து வெளிவர எல்லோருக்கும் தகுந்த எளிதான செயல்முறையை அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

‘நமசிவாய’ என்றோ, ‘நமோ நாராயணாய’ என்றோ மனம் அடிக்கடி அசைபோட வேண்டும். அப்போது, மற்ற அலுவல்களில் இருந்து விடுபட்டு, அசைபோடுவதில் மனம் ஒன்றிவிடும். திரும்பத் திரும்ப அசைபோடும் போது, மனதில் பற்றிய மாசும் அகன்றுவிடும்; துயரமும் தலைதூக்காது. அதிகாலையில் நீராடி, நெற்றித்திலகம் இட்டு, பத்மாசனத்தில் அமர்ந்து, இந்த இரு மந்திரங்களில் ஒன்றை அசைபோட வேண்டும். அலைபாயும் மனம் அசையாமல் இருக்க, தினமும் செயல்பட வேண்டும். மனம் இதில் ஒடுங்கிவிட்டால், கர்மவினையின் உத்தரவுக்கு இணங்காது. காலப்போக்கில் அசைபோட்டு அசைபோட்டு மனம் தூய்மை பெறும்போது, கர்மவினையின் வாசனை முழுமையாக மறைந்துவிடும். அப்போது, மகிழ்ச்சியை நெருடல் இல்லாமல் உணரலாம். மனம் மந்திரத்தில் ஒடுங்கும் வேளையில் பிரபஞ்ச பொருள்களிலும் ஈர்ப்பு ஏற்படாது. மந்திரத்தின் பிடியிலிருந்து மனம் வெளிவராமல் இருப்பதால், வெளி ஈர்ப்புகள் அதை பாதிக்காது.

இப்படி, இரு மந்திரங்களில் ஒன்றை தினமும் அசைபோட்டு பழக்கப்பட்டால், மனம் நம் விருப்பப்படி செயல்பட ஆரம்பித்துவிடும்; நேர்வழியில் செல்லும். அதனால் மகிழ்ச்சி கிட்டும். இதை ஒதுக்கிவிட்டு ஜோதிடம், பூஜைபுனஸ்காரங்கள், தான தர்மங்கள், மகான்களின் வழிபாடு, தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றைச் செய்வதால் மட்டுமே, மனதின் மாசை முழுவதுமாகத் துடைக்க முடியாது. நாம் செயல்பட்டுதான் அதை அகற்ற இயலும். நமக்கு பதிலாக வேறுயார் செயல்பட்டாலும், அது நம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்; உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். நம்மை நாம்தான் முன்னேற்றிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது கண்ணோட்டம்

மனதைச் சுதந்திரமாக விடுவதுதான் மகிழ்ச்சிக்கு ஆதாரம் அதைத் திசைதிருப்பி வேறொன்றில் இணையவைப்பது வீண். மனிதன் பிரபஞ்சத்தில் தென்படும் பொருள்களை நுகர்ந்து மகிழவே பிறந்திருக்கிறான். அதற்காகவே இயற்கை அவனுக்கு அறிவுப் புலன்களைத் தந்து அருளியிருக்கிறது; அவற்றை அடையச் செயல்புலன்களையும் சேர்த்து அருளியிருக்கிறது. நடப்பவன் தடுக்கி விழவே செய்வான். எதிலும் இடையூறு தென்படவே செய்யும். எனவே, வீண் கற்பனைகள் தேவையில்லை.

? எனில், நம்மை மீறி நிகழும் விஷயங்களுக்கு எல்லாம் காரணம் என்ன?

நம்மை மீறி எதுவும் நடப்பது இல்லை. இன்பம்துன்பம், இருட்டுவெளிச்சம் இவை மாறி மாறி வருபவை. பகல் இருந்தால் இரவும் உண்டு. இயற்கையின் நியதியை மாற்ற இயலாது. வெயிலில் நடப்பவனுக்கு நிழலின் அருமை தெரியும். துயரத்தை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சியின் பெருமை புரியும். பசித்தவனுக்கு எந்த உணவும் ருசியாக இருக்கும். பசிக்காதவனுக்கு சுவையான உணவும் கசக்கும். பிரசவ வேதனை அனுபவித்தவளுக்குக் குழந்தையின் அருமை தெரியும். காதலித்தவளை பலவித இடையூறுகளைச் சந்தித்துதான் கைப்பிடிக்கிறான் காதலன். உழைத்தால்தான் ஊதியம் கிடைக்கும். வேலை செய்வது கஷ்டம்தான். ஆனாலும், கிடைக்கும் ஊதியத்தை நினைத்துக் கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்வோம். ஈசனருள் இன்பத்தைத் தரும் என்று எண்ணி, கடினமான தவத்தை ஏற்போம். அதுபோல்,  இன்பத்தைச் சுவைக்கலாம் என்ற நம்பிக்கை, துயரத்தைத் தாங்கிக்கொள்ளும்.

? சரி! வெற்றிகளும் நன்மைகளும் உங்களால் விளைந்தது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், தடைகளும் துன்பங்களும் வரும்போது மட்டும் அதற்கான காரணத்தை வெளியில் தேடுகிறீர்களே, ஏன்?

இன்பத்தைச் சுவைத்து மகிழ்ந்தவனுக்குச் சிறு துன்பமும் பொறுக்க முடியாத வேதனையை அளிக்கும். துன்பத்தில் தோய்ந்தவனுக்குச் சிறு இன்பமும் அளவிட முடியாத ஆனந்தத்தைத் தரும். அமுதமும் விஷமும் ஓரிடத்திலிருந்து வந்தவை. விஷம் வந்த பிறகுதான் அமுதத்தை அடைந்தார்கள். குத்துவிளக்கின் அடியில் இருட்டும் இருக்கும். பகை பயத்தை உண்டு பண்ணும்; நட்பு பயத்தை விலக்கும். இப்படி, படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களிலும் இரண்டையும் இணைத்துவைத்திருக்கிறது இயற்கை. மனிதனும் பயத்தில் இன்பத்தை இழக்கிறான்; நட்பில் இன்பத்தை உணர்கிறான். இரண்டும் அவன் மனதில் உருவாகிறது. வேண்டியதைப் பெறுவதில் கஷ்டம் இருக்கும். பெற்றதைச் சுவைக்கவிடாமல் பயம் தடுக்கும். இதை அறிந்துதான் அத்தனை இறை வடிவங்களும் அபய ஹஸ்தத்தையும், வரத ஹஸ்தத்தையும் காட்டிக்கொண்டு, பக்தனை அழைக்கின்றன. விருப்பத்தைப் பெறவும் கடவுளை வேண்டுகிறான்; பகைவனை அழிக்கவும்  கடவுளை நாடுகிறான். படைப்பில் அத்தனைப் பொருளிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும்.

குணமும் தோஷமும் கலந்துதான் பொருள் உருவாகும். உண்மையும் பொய்யும் கலந்துதான் பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்ததுதான் வணிகம் (ஸத்யநிருதேச வாணிஜ்யம்). மாம்பழத்தைச் சுவைக்கும் வேளையில் இனிப்பு உணரப்பட்டாலும், கொட்டையை எட்டும்போது சுவை மாறிவிடும். ஒரு வகையில், துயரத்தின் அனுபவம்தான் மகிழ்ச்சி யின் தரத்தை உயர்த்துகிறது. மகிழ்ச்சியின் முழுமையை எட்ட துயரம் ஒத்துழைக்கும். துயரத்தை அடியோடு அழிக்க இயலாது. அதற்காக பகீரத பிரயத்னம் ஏற்பது அறிவீனம்.

? கடவுள் நாமாவை தினமும் சொல்வது, உங்களுக்கு பகீரத பிரயத்னமா?

இன்றைய நாளில், அன்றாட அலுவல்களை நிறைவு செய்யவே நேரம் போதவில்லை. தரமான கல்வி கற்க வேண்டும். நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும். பொருளாதாரத்தில் சரிவு ஏற்படாமல் இருக்க ஊதியம் உயர்ந்துகொண்டே போக வேண்டும். மனதுக்குப் பிடித்தமான வேலை அமையவேண்டும். மகிழ்ச்சியளிக்கும் மனைவி வேண்டும். குதூகலிக்கக் குழந்தைகள் வேண்டும். நேரத்துக்கு உதவ உறவினர்கள் வேண்டும். அவசர காலத்தைச் சமாளிக்க சேமிப்பு வேண்டும். நாம் மறைந்த பிறகு குடும்பம் கஷ்டப்படாமல் இருக்கச் சொத்து சுகம் சேர்த்து வைக்க வேண்டும். உடம்பைச் சுகாதாரத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனையையும் நிறைவு செய்ய நமது வாழ்நாள் போதுமானதாக இல்லை.

இந்த நிலையில், காலையில் எழுந்து நீராடி, கடவுளை ஆரா தனை செய்து, மனதைக் கட்டுப்படுத்தி, துன்பத்தை அழிக்க முயற்சிக்கச் சொல்லும் பரிந்துரை ஏற்கத்தக்கது அல்ல. முழு மூச்சோடு குடும்ப விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் மனதை எந்த வகையிலும் திருப்பிவிட இயலாது. பிடிவாதமாக இறங்கினால், குடும்ப வாழ்க்கையும் சின்னா பின்னமாகும். மனதும் அடங்காது. மரத்தின் இடையில் சொருகிய ஆப்பைப் பிடிங்கிய குரங்கின் கதையாக மாறிவிடும். வாழ்க்கைக்குத் தேவையான அலுவல்களின் விஸ்தாரத்துக்கு சிந்தனைதான் அளவுகோல். நமது சிந்தனைக்கு எட்டாத எந்த அலுவலையும் நாம் சந்திக்கப் போவதில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வார்கள். நமது சிந்தனை சரியான பாதையைக் காட்டித் தரும். நமது பயணம் இடையூறின்றி நிறைவு பெறும்.

? ஆக, முன்னோர்களின் வழிகாட்டுதல்கள் எல்லாம் வீண் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள்; அப்படித்தானே?

மனதின் மாசை அகற்றுவதற்காக முன்னோர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லையே? முனிவர்களும் கட்டுப்பாட்டை இழந்தவர்களாகத் தானே இருந்தார்கள்! தவத்தில் அமர்ந்த விஸ்வாமித்திரர் மேனகையைக் கண்டதும் தவத்தை முறித்துக்கொண்டார் பராசரர் மத்ஸ்யகந்தியால் மனவலிமையை இழந்தார். ஆக, மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல. அப்படியே நாம் முயற்சித்தாலும்,  மனதைக் கட்டுப்படுத்த இயலாது. இது தற்காலத்துக்கு உதவாத பரிந்துரை மட்டும் அல்ல; துயர் தொடாத வாழ்க்கையை அது ஈட்டித்தரவும் முடியாது. இன்பமும் துன்பமும் வந்து போய்க்கொண்டு தான் இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி, சூழலுக்கு ஏற்பச் செயல்பட்டு வாழ்க்கைப் பயணத்தை செம்மையாக்கிக் கொள்வதே சிறப்பு! தேவையில்லாத பழைமை வாதம் காலத்துக்கு ஒத்துவராது.

மூன்றாவது கண்ணோட்டம்

இயற்கை அதிசயங்களை உதாரணம் காட்டி, மனக்கட்டுப்பாட்டை ஏளனம் செய்வது சரியல்ல. கட்டுப்பாடு இல்லாத மனம், கர்மவினையின் தாக்கத்தால் துவண்டு போய், வாழ்க்கையை நரகமாக்கிவிடும். ஆறாவது அறிவில் ஆராய்ந்த தகவல்கள் யாவும் கர்மவினையின் முன் பொய்யாகிவிடும். சுயநலத்துடன் இணைந்த நமது சிந்தனையில் உருவாகும் காலக் கணிப்புகள், கர்மவினையின் இடையூறால் பொய்த்துவிடும்.

? சுய சிந்தனையும் செயல்பாடுகளும் இல்லையெனில், மனித இனம் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

அப்படியான சுயசிந்தனை களுக்கும் செயல்பாடுகளுக்கும் கார ணம் கர்மவினையே என்பதுதான் எங்களது நிலைப்பாடு. நமது விருப்பப்படி சிந்தனை எழும். கர்மவினை நம்மை அடக்கி, தனது செயலை நடைமுறைப்படுத்திவிடும். பலரது வருங்கால வரைபடங்கள் (ஜாதகம்) நடைமுறைக்கு வராமல் மறைந்து விடுவதையும் காண்கிறோம். நாம் விழித்திருந்தாலும், உள் மனதில் பற்றியிருக்கும் மாசுகளின் (கர்மவினை) தூண்டுதல், நம்மை வேறு வழியில் இழுத்துச் சென்றுவிடும். முயற்சியின்றி அதிர்ஷ்டத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் உண்டு. ஒருவனது விபரீதமான செயல்பாடுகள் தண்டனைக்கு உகந்ததாக இருந்தும், அவனது அதிர்ஷ்டம் (கர்மவினை) வெகுமதியளித்து விடுகிறது. அதேநேரம், நீதி, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கையாண்டு தூய வாழ்க் கையை ஏற்றவன் (துரதிர்ஷ்ட கர்ம வினையால்) பொல்லாப்பைச் சந்தித்துப் பெருமையை இழக்கிறான்.

ஆராய்ந்து தேர்ந்தெடுத்த அழகான மனைவி அகால மரணத் தில் மறைந்து ஆறாத் துயரத்தை ஏற்கிறாள். பொதுநலத் தொண் டில் பெருமிதம் காணும் பற்றற்ற துறவி, தனது துரதிர்ஷ்டத்தால் (கர்மவினை) வீண் பழியைச் சுமந்து வெம்பிப் போகிறார். போற்றலுக்குப் பெயர் போன துறவி தூற்றலுக்கு இலக்காகிறார். தனது அறிவாற்றலால் பாமர மக்கள் மனதை ஈர்த்துத் திசை திருப்பி, அமைதி நிலவிய சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அதைப் பார்த்து மகிழ்பவன் (தனது அதிர்ஷ்டத்தால் கர்மவினை) மக்கள் தலைவனாகப் பெருமைப்படுத்தப் படுகிறான். படித்துப் பட்டம் பெற்று, அறிவு முதிர்ச்சியில் சமுதாய நலனின் அக்கறை காட்டும் பண்பாளர் (தனது துரதிருஷ்டம் கர்மவினை) குடத்தில் வைத்த விளக்காக, சமுதாயத்தின் கண்ணில் படாமல் போகிறார். நுனிப்புல் மேய்ந்தவன் தகுதி இல்லாவிட்டாலும் (தனது அதிர்ஷ்டத்தால் கர்மவினையால்) உயர்ந்த விருதைப் பெற்று, மக்களின் அங்கீகாரம் பெற்று விளங்குகிறான். இன்னும் சிலர் உண்டு. ஆறாவது அறிவும், அலசி ஆராயும் திறனும், பண்பும், ஒழுக்கமும் இருந்தும் சராசரி மனிதர்களின் சொல்வளத்தில் ஈர்க்கப்பட்டு, கர்மவினையின் தூண்டுதலால் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியமைத்து, துயரத்தில் ஆழ்ந்து தவிப்பார்கள்.

? அப்படிச் சொல்லிவிட முடியாது. ‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை!

பீஷ்மரும் விதுரரும் இருந்தும், அவர்களின் நல்லுரைகளுக்குச் செவிசாய்க்காமல், கர்மவினையின் தூண்டுதலால் சகுனியின் வார்த்தையை ஏற்று, தனது வாழ்வை மாய்த்துக் கொண்டான் துரியோதனன். வீரனாக இருந்தும் அபிமன்யுவை கர்மவினை போரில் சாய்து விட்டது. கடவுளாக இருந்தும்கூட, கிருஷ்ணனும் ஜராஸந்தனை எதிர்க்கப் பயந்து பீமனை நாட வேண்டி வந்தது. திறமை இருந்தும் சீதையைக் கோட்டை விட்டார் ராமர். அரசுரிமையைப் பறிகொடுத்துக் கானகம் சென்றார் யுதிஷ்டிரர். ஊனம் இருந்தும் (பார்வையற்றவன்), அரசுரிமை இழக்கப்பட்டும் திருதராஷ்டர் அரச போகத்தைச் சுவைத்து மகிழ்ந்தார். பாண்டவர் சந்திப்பில் இழுக்கைச் சந்தித்த கர்ணனின் மனமானது,  இழுக்கை அழிப்பதற்காக துஷ்டனின் (துரியோதனன்) நட்பை நாடி அல்பாயுஸ்ஸில் இணையவைத்தது; தேளுக்குப் பயந்து பாம்பிடம் மாட்டிக்கொண்டான். ஸத்யவதியின் வாக்கை நிறைவேற்ற முற்பட்டும் இயலாமல், இயற்கை எய்தினார் பீஷ்மர்.

இவர்கள் அத்தனைபேரும் சுய சிந்தனையில் முயற்சி எடுத்தவர்கள். அத்தனையையும் முடக்கி, கர்மவினையானது அவர்களைத் திசைதிருப்பி அடிபணியவைத்தது. உலக சுகங்களிலிருந்து விடுபட்ட துறவியே இன்னலைச் சந்தித்து விட்டில்பூச்சி போல் மடியும்போது, சராசரி மனிதர்கள் எப்படி விடுபட இயலும்? ‘இன்பதுன்பங்களின் கலப்படம் வாழ்க்கை. இரண்டை யும் ஏற்றுத்தான் வாழ வேண்டும்’ என்ற தத்துவ விளக்கம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், திட்டம் போட்டு மனம் செயல்படுவது உண்டு. உள் மனம் துன்பத்தைச் சந்திக்காமல் இன்பத்தை அடைய விரும்பும். வாழ்வில் முன்னேற முயற்சி செய்து தோல்வியுற்றவன், மேற்சொன்ன தத்துவத்தை போர்வையாகப் பயன்படுத்துவான். பிரபஞ்சம் இன்ப துன்பம் கலந்தது, குண தோஷங்களின் உறைவிடம் என்றெல்லாம் இருந்தாலும், தங்களது அறிவின் முதிர்ச்சியில் தோஷத்தை விலக்கி, குணத்தை ஏற்க வேண்டும். இல்லையெனில், ஆறாவது அறிவு வீணாகிவிடும்.

? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. யதார்த்த நிகழ்காலத்தைச் சிந்திக் காமல், புராணத்தை உதாரணம் காட்டுவது ஏன்?

நம் முயற்சியை கர்மவினை அழிக்கலாம் என்று உணர்ந்து, எச்சரிக்கையோடு அந்த மாசை அகற்றும் முயற்சியில் இறங்க வேண்டும் என்பதற் கான உதாரணங்கள், மேற்சொன்ன புராணத் தகவல்கள்.

வேத ஒலி (நமசிவாயா, நமோ நாராயணாய) மாசை அகற்றிவிடும். ‘அக்னிதேவன் தோன்றினான்; அவனோடு மாசும் ஒட்டிக் கொண்டிருந்தது. தேவர்களுக்கு உணவளிப்பவன் அவன். அவனது மாசு, உணவிலும் கலந்தால் சுகாதாரம் கெட்டுவிடும் என்று எண்ணி, தேவர்கள் அவனுடைய மாசுக்களை அகற்ற முற்பட்டார்கள். அவனிடம் நெய்யைச் சேர்த்தார் கள். அந்த மாசு நெய்யில் பற்றிக்கொண்டது. அதை, வேள்வியில் சேர்த்தார்கள். அதனால் வேள்வியில் ஒடுங்கிவிட்டது. அதிலிருந்து மாசு அகல தட்சணையில் சேர்த்தார்கள்; மாசு அதில் பற்றிக் கொண்டது. தட்சணை வேதம் ஓதுபவனிடம் அளிக்கப்பட்டது. இப்போது மாசு அவனைப் பற்றிக்கொண்டது. அவன், தான் படித்த வேதத்திடம் (ஒலி) ஒப்படைத்தான். வேத ஒலியைத் திரும்பத் திரும்பச் சொன்னபோது, ஒலியின் பெருமையில் மாசு முற்றிலும் மறைந்துவிட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு (அக்னிம் வைஜாதம் பாம்மாஜக்ரஹ. ஸ்வாத்யாயேனா பஹதபாப்மா). வேத ஒலியின் சேர்க்கையில் சுற்றுச்சூழலின் மாசு அகன்று விடுகிறது என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். பண்டைய நாளில் வேத ஒலி தடைப்படாமல் ஒலிக்க, கோயில்களை நிறுவிய தகவல்கள் உண்டு.

உலக அதிசயங்களை வரையறுக்க மனித சிந்தனையால் இயலாது.  மனதில் பதிந்த கர்மவினையின் மாசை அகற்றினால்தான் மகிழ்ச்சியைச் சுவைக்க இயலும். இல்லையெனில், அதன் விளையாட்டில் சிக்கி, அறிவு இருந்தும் பிறப்பின் பெருமையை இழந்து தவிப்போம். செயற்கையான படைப்பை ஏற்றாலும், ரோபோவை வைத்து மனிதனைக் கொச்சைப்படுத்தினாலும், எல்லாமும் விளை யாட்டாக முடிவடையுமே ஒழிய, கடவுளின் லீலா விநோதங்களாக உயர்வு பெறாது. நம்மை, நமது திறமையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வேதத்தின் அறிவுரையை ஏற்று மனக்கட்டுப்பாட்டில் இறங்கினால், துன்பம் தொடாத இன்பத்தைச் சுவைக்கலாம். மனதின் மாசு அகலாமல் மாமனிதன் ஆக இயலாது. காகம் நீராடினால் கொக்காக மாறாது. விழித்துக்கொள்ள வேண்டும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை…

ஒருவன், தகுதியில் நிறைவு பெற்ற பிறகு, வழிகாட்டியாக மாறலாம். தன்னையே உயர்த்திக்கொள்ள இயலாதவன் பிறரை உயர்த்த முற்படுவது சிறுபிள்ளைத்தனம். உடலும் உள்ளமும் வளர்ந்தாலும் சரியான போக்கை ஏற்காத வரையில் வெற்றி எட்டாது. மந்திரங்களை ஏற்று மனதின் மாசை அகற்றினால், கர்மவினையின் கட்டுப்பாடு அகன்றுவிடும். தடங்கல் இல்லாத இன்பத்தைச் சுவைத்து மகிழலாம். கர்மவினை இல்லை என்று சொல்வது சிந்தனையற்றவனின் கணிப்பு.