தமிழகத்தை கண்காணிக்கும் மத்திய அரசு!

[wysija_form id=”1″]

http://tamilagamtimes.com/?post_type=product

”ஜெயலலிதா கொஞ்சமும் எதிர்பாராத தீர்ப்பு இது. அந்த அளவுக்கு அவருக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார்கள் சிலர். மத்தியில் முக்கியமான அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இந்த தைரியத்தைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். எல்லோரும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் என்று நினைப்பார்கள். அவர் அல்ல. சென்னை வந்து ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகே, அவரை மோடி அழைத்து அறிவுரை சொல்லிவிட்டார். ‘இனிமேல் அவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்’ என்று. அதனால் ரவிசங்கர் பிரசாத் இதில் தலையிடவில்லை. நான் சொல்வது கர்நாடகாவுக்கும் நெருக்கமானவர். ‘அந்த மாநிலத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் அந்த மாநிலத்தில் அனைத்தும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்று அவர் சொன்னாராம். ‘உறவினர்கள் மூலமாக முடித்தாகிவிட்டது’ என்று நம்பிக்கை கொடுத்துள்ளார் அவர். அதனை நம்பி இருக்கிறார்கள் இவர்கள். அதனால்தான், ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் சென்றுள்ளார்கள். ஜெயலலிதாவுக்கான மருந்துகள்கூட எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை. ‘மூன்று மணிக்கு வந்துவிடுவோம், வந்து சாப்பிட்டுக் கொள்வோம்’ என்று கார்டனிலும் சொல்லப்பட்டு உள்ளது. எதற்கும் இருக்கட்டும் என்று சப்பாத்தியும் தயிர் சாதமும் மட்டும் கொண்டு சென்றிருக்கிறார்கள்!”

”அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்துள்ளதா?”

”அதனை நினைத்து இப்போது புலம்பியபடி இருக்கிறார்கள்! இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸும் பி.ஜே.பி-யும்தான் காரணம் என்று அ.தி.மு.க வட்டாரம் கோபத்தில் இருக்கிறது. ‘அங்கே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. சோனியாவை விமர்சித்ததால் அவர்களது கோபம் அம்மா மீது உள்ளது. பி.ஜே.பி-க்கும் அம்மாவுக்கும் ஒத்துப் போகவில்லை. சென்னை வந்து ஐ.டி.சி ஹோட்டலில் தங்கி இருந்த மோடி, எப்படியாவது அம்மாவை சந்திக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அம்மா அதற்கு உடன்படவில்லை. தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருந்தார். இந்தக் கோபம் மோடிக்கு இருக்கிறது. இவர்கள் இருவருமே அரசியல் ரீதியாக அம்மாவை விரும்பவில்லை. அதனால்தான் முடிந்த அளவுக்கு இடைஞ்சல் செய்தார்கள்’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் அ.திமு.க-வில்!”

”ஓஹோ!”

”அதற்கான ஆபரேஷனை இப்போதே பி.ஜே.பி தொடங்கிவிட்டது என்று சொல்கிறார்கள். ‘சொத்துக் குவிப்பு வழக்கின் மூலமாக அ.தி.மு.க-வும் ஸ்பெக்ட்ரம் வழக்கு மூலமாக தி.மு.க-வும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. அதனை நாம் பயன்படுத்திக்​கொள்ள வேண்டும்’ என்று அமித் ஷா சொல்லி வருகிறாராம். இதன் முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத் துறையின் உயர் அதிகாரியை மாற்ற முடிவு செய்திருக்கிறாராம். தனக்கு வேண்டப்பட்ட வடநாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரை பொலிடிக்கல் இன்டலிஜென்ஸை மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கும் வகையில் தமிழகத்துக்கு விரைவில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறாராம். அதனால்தான் தமிழகத்தில் நடந்த வன்முறைக் காட்சிகள் பற்றி மத்திய அரசு உடனடியாக ரியாக்ஷன் காட்டியது என்றும் சொல்கிறார்கள்!”

”என்ன செய்தது மத்திய அரசு?”

”தீர்ப்பை நீதிபதி முழுமையாக அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல இடங்களில் வன்முறை தொடங்கிவிட்டது. ஆனால், எந்த இடத்திலும் போலீஸ் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அ.தி.மு.க-வினரிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தார்கள். இதனைப் பார்த்த சுப்பிரமணியன் சுவாமி, ‘தமிழகத்தில் வன்முறை அதிகமாகி வருகிறது. அதனைத் தடுக்க போலீஸ் இல்லை. எனவே, தமிழகத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்’ என்று சொன்னார். மத்திய உள்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புகளைக் கண்காணிக்கும் இணைச் செயலாளர்களில் ஒருவர் தமிழக அதிகாரிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியதாக உள்துறை வட்டாரங்களில் சொல்லப்பட்டது. இவர் தமிழக தலைமைச் செயலாளரையோ அல்லது தமிழக உள்துறைச் செயலாளரையோ நேரடியாகத் தொடர்புகொண்டதாகத் தெரியவில்லை. ஆளுநர் மாளிகையிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள். சில மாவட்டங்​களில் உள்ள கலெக்டர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு மத்திய உள்துறை இணைச் செயலாளர் பேசியதாக இந்தத் தகவல்கள் கூறுகின்றன. மாவட்ட கலெக்டர்களிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும்படி இவர் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்லப்​படுகிறது.”

”அந்த அளவுக்கு நிலைமை போனதா?”

”தமிழக நிலவரம் குறித்து கடந்த 27-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. ‘தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அந்த மாநில அரசு உதவி கோரினால் அதற்கு உதவலாம்’ என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தமிழக அரசுக்கும் அனுப்பி வைத்தார்கள். இதனால் கவர்னர், டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர்கள் ஆகியோரை அழைத்து அறிவுரைகள் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் போலீஸார் சில இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஓரளவு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது வரை மத்திய அரசு அதிகாரிகள் அதுபற்றி விசாரித்தபடியே இருந்தார்கள்!”

”ம்!”

”தற்போதுள்ள சட்டம் – ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-யான ராமானுஜத்துக்கு நவம்பர் 4-ம் தேதியுடன் பதவி நீடிப்பு முடிகிறது. அவரை அனுப்பிவிட்டு, தமிழக கவர்னர் ஆசிபெற்ற சேகர் ஐ.பி.எஸ்-ஸை புதிய டி.ஜி.பி-யாக நியமிக்கவும் மத்திய அரசு நினைக்கிறது.”

”ஏனாம்?”

”டி.ஜி.பி-யான ராமானுஜத்தை மத்திய அரசுக்குப் பிடிக்கவில்லை. இதற்கு முன்பு, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும் சரி… தற்போதைய ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யும் சரி… ராமானுஜத்தை வீட்டுக்கு  அனுப்பிவிட நினைக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவருக்கு சாதகமாக என்னென்ன வகையில் ராமானுஜம் நடந்துகொண்டார் என்பது குறித்து ரகசிய சர்வே, உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் தற்போது நடக்கிறது. அந்த ரிப்போர்ட் கவர்னருக்குப் போகுமாம். அவர் வழியாக மத்திய உள்துறைக்குப் போய் அங்கிருந்து மாநில அரசுக்கு பிரஷர் வரப் போகிறதாம்.”

”சேகர் எப்படி?”

”தற்போதைய டி.ஜி.பி லிஸ்டில் பார்த்தால், சீனியாரிட்டியில் நான்காவதாக சேகர் இருக்கிறார். அர்ச்சனாவுக்கு வாய்ப்பில்லை. அடுத்து வரும் முத்துக்கருப்பனும், அனூப் ஜெய்ஸ்வாலும் அடுத்தடுத்து ஓய்வுபெற இருக்கிறார்கள். சேகருக்கு மட்டும்தான் 2016-ம் ஆண்டு மே வரை பதவிக் காலம் இருக்கிறது. அதனால், இவருக்கு சான்ஸ் கிடைக்கலாம் என்கிறார்கள்.”

”ராமானுஜம் விஷயத்தில் ரகசிய சர்வே நடப்பதாக சொன்னீரே?”

”ஜெயலலிதா அரசில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அப்போது நடந்ததை மத்திய அரசு விசாரிப்பது தனிக்கதை. தி.மு.க ஆட்சி நடந்தபோது, முக்கியப் பதவிகளில் இருந்த ராமானுஜம் தொடர்புடைய சில ஃப்ளாஷ்-பேக்கை உயர் போலீஸ் அதிகாரிகள் இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.”

”என்ன அது?”

”தி.மு.க ஆட்சியில் உளவுத் துறையிடம் ஒரு தகவல் கேட்கப்பட்டதாம். ‘ஜெயலலிதா வீட்டில் ரெய்டு செய்யலாமா… எதிர்பார்த்த அளவுக்கு சிக்குமா அல்லது தோல்வியில் முடியுமா?’ என்பதுதான் அந்தத் தகவல்! தீர விசாரித்து உளவுத் துறை கிரீன் சிக்னல் காட்டியதும்தான் ரெய்டு நடந்ததாம். ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதாம். அதே ஆட்சியில், விஜிலென்ஸ் துறையில் ஜெயலலிதா மீதான வழக்கு மிகவும் ‘வீக்’காக இருப்பதாகச் சொல்லி, அதை பலப்படுத்த தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாம். வழக்கின் முதுகெலும்பாக அமைந்ததே இந்த ஆவணங்கள்தானாம்! ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குடன் லண்டன் ஹோட்டல் வழக்கும் இருந்தது. அந்த வழக்குகளைப் பிரித்து சொத்துக் குவிப்பு வழக்கை மட்டும் நடத்தினால் துரிதமாக ஜெயலலிதாவுக்கு தண்டனை விரைவில் கிடைக்கும் என்று ஆலோசனை சொல்லப்பட்டதாம். அதன்படியே, சொத்துக் குவிப்பு வழக்கு தனியானதாம். இதை எல்லாம் தற்போது நினைவுப்படுத்தும் போலீஸ் அதிகாரிகள், ‘முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நேரத்தில், உளவுத் துறை, விஜிலென்ஸ் துறையில் இருந்த அதிகாரிகளில் ராமானுஜமும் ஒருவர். அவர் எந்த அளவுக்கு ஆர்வமாக இருந்தார் என்பது தெரிந்த விஷயம். ஆனால், ஆட்சி மாறியதும், ஜெயலலிதாவிடமும் ராமானுஜம் நம்பிக்கையைப் பெற்று முக்கியப் பதவியில் உட்கார்ந்துவிட்டார்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!”

”இவர்களின் நோக்கம் என்னவாம்?”

”பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை ஓட்டத்தின் போக்கு பற்றி சரியான தகவல் ஏனோ முதல்வருக்கு எட்டவில்லை என்று ஜெயலலிதா ஆதரவு போலீஸ் அதிகாரிகள் நினைக்கிறார்கள். அவர்கள்தான் இதனையும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!”

”சிறை தகவல்களைச் சொல்லும்!”

”சிறைக்குள் சென்றபின், ஜெயலலிதாவின் உடல்நிலை சற்று மோசமானதாம். இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் சிறைத் துறையிடம் மருத்துவ வசதி கேட்கப்பட்டது. உடனடியாக சிறைத் துறை பெங்களூரு காவல் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு, ஜெய்தேவ் மருத்துவமனை மற்றும் அம்பேத்கர் ரிஸர்ச் சென்டர் என்ற இரண்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பில் அப்போலோ மருத்துவமனை கேட்கப்பட்டது. ஆனால், இந்த மூன்று கோரிக்கைகளையும் பெங்களூரு காவல் துறை ஆணையர் எம்.என்.ரெட்டி மறுத்துவிட்டார். ஏனென்றால், அரசு மருத்துவமனையில் வைத்தால், அதிகமாக விசிட்டர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வருவார்கள். வருபவர்கள் அனைவரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என்று வி.ஐ.பி-க்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. உரிய பாதுகாப்பையும் வழங்க முடியாது. எனவே, அதை மறுத்துவிட்டார்.”

”பலத்த கெடுபிடிதான் போலும்!”

”சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்​களில் ஜெயலலிதாவுக்கு மட்டும் சில சிறப்புச் சலுகைகள் கிடைக்கும். தங்கும் அறை, மருத்துவ வசதிகளில் அந்தச் சலுகைகள் கிடைக்கும். ஆனால், உடை விஷயங்களைப் பொறுத்தவரை யாருக்கும் எந்தச் சலுகையும் கொடுக்கப்​படாது. இதுவரை சிறை நிர்வாகமே அவர்களுக்கு வெள்ளைச் சீருடை கொடுக்கவில்லையாம். அதனால், அவர்கள் மூவரும் சென்னையில் இருந்த கொண்டு வந்த உடைகளைத்தான் அணிந்துள்ளனர். சீக்கிரமே அவர்களுக்குச் சீருடை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

”சுதாகரன் எப்படியிருக்கிறார்?”

”தீர்ப்புக்கு மறுநாள் அதிகாலை தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சுதாகரன் சிறைக்குள் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மனஅழுத்தம் காரணமாகவும் இரவு சரியாக தூக்கம் இல்லாததாலும் உடல் பாதிக்கப்பட்டுள்ளது. ஓய்வெடுத்தால் போதுமானது என்று சொன்னார்கள். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. சசிகலா பற்றி ஒரு தகவல்… சர்க்கரை நோய்க்காக இன்சுலின் இன்ஜக்ஷனை அவர் வழக்கமாக எடுத்துக்கொள்வாராம். சிறைக்குள் அடைக்கப்பட்டதும், ‘இன்சுலின் இன்ஜக்ஷன் வேண்டும். அதை நான் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டாராம். அதற்கு ஜெயில் வார்டனோ, ‘ஸாரி மேடம்… இன்ஜக்ஷன் கூர்மையாக இருக்கும். கூர்மையான பொருட்களை ஜெயிலுக்குள் கொண்டுவர அனுமதி இல்லை. உங்களுக்கு எந்த நேரத்தில் என்ன இன்ஜக்ஷன் போட வேண்டும் என்று சொல்லுங்கள். இங்கே இருக்கும் மருத்துவர்களே வந்து உங்களுக்குப் போடுவார்கள்!” என்று சொல்லிவிட்டார்களாம்.”

”கோர்ட்டிலேயே உட்கார சிரமப்பட்டார்​களாமே?”

”தீர்ப்பு வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் இருந்து இரண்டு ஸ்பெஷல் குஷன் நாற்காலிகள், ஜெயலலிதாவும் சசிகலாவும் அமர்வதற்கு பரப்பன அக்ரஹாராவுக்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால், நீதிமன்ற ஊழியர்கள் அதை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, வேறுவழியின்றி நீதிமன்றம் ஒதுக்கித்தந்த நான்கு ‘எஸ்’ டைப் வயர் சேர்களில்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அமர்ந்தனர்.”

”ஜெயலலிதாவை சுதாகரன் சந்தித்தாரா?”

”நீதிமன்றத்தில் வரிசையாகப் போடப்பட்டு இருந்த நாற்காலிகளில் நான்காவது நாற்காலியில் சுதாகரன் அமர்ந்தார். ஆனால், சுதாகரனை ஒரு முறை புருவத்தை நெறித்து முறைத்த ஜெயலலிதா, கண்களாலேயே அவரைப் பின்னால் போய் அமரச் சொன்னார். இதையடுத்து தன்னுடைய நாற்காலியை பின் வரிசையில் போட்டு அமர்ந்திருந்தார் சுதாகரன். ஆனால், நீதிபதி வந்ததும், ”ஏ4 எங்கே?” என்றார். பின்னால் இருந்து சுதாகரன் எழுந்துநின்று நீதிபதியைப் பார்த்து வணங்கியதும், ”முன்னால் வந்து ஏ1, ஏ2, ஏ3, ஏ4 என்ற ஆர்டரில் உட்காருங்கள்” என்றார். இதையடுத்து பின்னால்போன சுதாகரன் முன்னால் வந்து ஜெயலலிதா வரிசையிலேயே அமர்ந்தார். அதன் பிறகு அவர் பக்கமாக இவர் திரும்பவில்லை!” .