தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள்!”

கொழும்பு: “அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள்!” என வவுனியாவைச் சேர்ந்த தமிழ் பெண் சசிதரன் யதிந்தினி கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு – கோட்டையில் உறவினர்கள், அரசியல்வாதிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ் பெண் சசிதரன் யதிந்தினி கண்ணீர் மல்க கூறுகையில், “எமது அம்மா சசிதரன் தங்கமலர் (53). அப்பா சசிதரன். உள்ளூரில் கூலி வேலைக்குச் செல்ல முடியாதென்பதால் கத்தாரில் உள்ளார்.

நான் குடும்பத்தில் கடைசிப்பிள்ளை. எமது குடும்பம் வவுனியாவில் உள்ளது. வீடு ஒன்றை வாடகைக்கு வழங்கியதால் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கூறி அம்மாவை 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதி கொண்டு சென்றனர்.

எனது சகோதரர்கள் இருவருக்கும், சகோதரிக்கும் திருமணம் ஆகிவிட்டது.  நான் அக்காவின் வீட்டில் உள்ளேன். எனது அப்பா தற்போது விபத்தில் சிக்கியுள்ளபோதும், அவர் நாட்டிற்கு வந்தால் கைது செய்யப்படுவார் எனக் கூறுகின்றார்கள். ஆகவே அவர் கத்தாரிலேயே உள்ளார்.

எனது அம்மாவை விடுதலை செய்வதற்காக எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டோம். ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லை. விசாரணை செய்வதாக கூறுகின்றார்கள். இன்று அம்மாவும் இல்லாது அப்பாவும் இல்லாது தனியாக கஷ்டங்களுக்குள் உள்ளாகிக் கொண்டிருக்கின்றேன்.

அக்காவுடன் தற்போது இருந்தாலும் அவருக்கும்  இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆகவே எத்தனை நாளைக்கு எனது அம்மாவை பிரிந்து இருப்பது? அம்மா வருவார் வருவார் என்று எதிர்பாத்து களைத்துப்போய்விட்டோம். அவரின் விடுதலைக்காக நடைபெறும் அனைத்து விடயங்களிலும் பங்கெடுக்கின்றோம். இன்னமும் எத்தனை நாளைக்கு நான் அம்மாவுக்காக ஏங்குவது. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள்” என்று கதறி அழுதார்.