தாராளமயமாக்கப்பட்ட சாராயக் விற்பனைக் கொள்கை – உயிர் காக்கும் இலவச மருத்துவ திட்டங்கள்

என்ன பொருத்தம் ? இது எந்த ஜனநாயக கொள்கையை சேர்ந்தது என நம் தலைவர்கள் விளக்கத் தயாரா ? நம் இரத்தத்தை விஷமாக்கும் இரசாயனக் கலவை விற்பனையை நாம் தேர்ந்தெடுத்த நம் அரசாங்கமே செய்யும்; நம் ஆரோக்யம் இழந்து உயிர் துறக்கும் நிலை வந்தால் அதற்கும் உயிர் காக்கும் இலவச மருத்துவம் இவர்களே செய்வார்களாம். (இந்த திட்டத்திற்கு யார் பெயர் வைப்பது என்ற தெருச் சண்டை வேறு நடக்கிறது)

எந்த இறையாண்மை கொள்கை இவர்களை இப்படி சிந்திக்க வைத்தது ? சாராய விற்பனையில் சாதனை புள்ளி விபரங்களை கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் இந்த அரசாங்கமே வெளியிடுகிறது.

நலிந்த உடலும் – உற்பத்தி திறன் இல்லாத மூளையும் கொண்ட மக்களை இவர்கள் தங்கள் வாக்கு வங்கிகளாக தயாரிக்கும் அரசியல் கட்சிகளின் தந்திரம்தான் இந்த சாராய விற்பனை கொள்கை. வாக்கு வங்கி ஒன்றே உங்கள் இலக்கு என்றால் மது குடிப்பவர்களுக்கு வரி விலக்கு அளியுங்கள். மது குடிப்பவர்களின் வாக்குகளாவது உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் இன்றைக்கு அவர்கள் மிகப் பெரிய வாக்கு வங்கி.

இது தனிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரம் அல்ல. மதுவின் கேடுகளை உணர்த்தும் விழிப்புணர்வு ஆரம்பம்.

மதுவுக்கு எதிரான கருத்து களத்தில் இணைந்து கரம் கொடுங்கள்…  தொடர்ந்து போராடுவோம்…