திருமணரெசிப்பிக்கள்

பருப்பு

தேவையானவை:
துவரம்பருப்பு – அரைகப்
மஞ்சள்தூள் – கால்டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

தாளிக்க:
கடுகு – அரைடீஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – ஒருடீஸ்பூன்

unnamed

செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பருப்பில் ஊற்றிக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

 

சாம்பார்

தேவையானவை:
முருங்கைக்காய் – ஒன்று
கத்திரிக்காய் – 2
சின்னவெங்காயம் – 10
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வேகவைத்ததுவரம்பருப்பு – ஒருகப்
புளி – சிறியநெல்லிக்காய்அளவு
சாம்பார்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம் – தலாகால்டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு

unnamed (1)

செய்முறை:
புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி முதலியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும். வேக வைத்த துவரம்பருப்பில் நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வேகவிடவும். காய்கள் நன்கு வெந்தவுடன் சாம்பார்த்தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். சிறிது கொத்த மல்லித்தழை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

ரசம்

தேவையானவை:
பருப்புத்தண்ணீர் – ஒருகப்
புளி – சிறியநெல்லிக்காய்அளவு
மஞ்சள்தூள் – கால்டீஸ்பூன்
ரசப்பொடி – 2 டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
பூண்டுப்பல் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையானஅளவு

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ஒருடீஸ்பூன்
சீரகம், மிளகு – கால்டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
காய்ந்தமிளகாய் – 2

unnamed (2)

செய்முறை:
புளியை சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். அத்துடன் பருப்புத் தண்ணீர், மஞ்சள்தூள், ரசப்பொடி, மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி, தட்டியபூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். தக்காளியைக் கையால் மசித்துவிடவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். ரசம் கொதித்து நுரைவரத் தொடங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

மிளகுக்குழம்பு

தேவையானவை:
புளி – சிறியஎலுமிச்சையளவு
உப்பு – தேவையானஅளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு

அரைக்க:
எண்ணெய் – சிறிதளவு
மிளகு – 2 டீஸ்பூன்
மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 2
துவரம்பருப்பு – ஒருடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒருடீஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரைடீஸ்பூன்
வெந்தயம் – அரைடீஸ்பூன்
பெருங்காயம் – அரைடீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

unnamed (3)

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு எண்ணெயில் நன்றாக  மணம் வரும்வரை வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது முதலியவற்றைச் சேர்த்து நன்குகலந்து கொதிக்கவிடவும் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்துவரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு:
இந்தக்குழம்பு ஒரு வாரத்துக்கு நன்றாக இருக்கும். தேவையென்றால், தாளிக்கும் போது தோலுரித்த
10 பூண்டுப்பல் சேர்த்துக் கொள்ளலாம்.

மோர்க்குழம்பு

தேவையானவை:
நறுக்கியபூசணிக்காய் – ஒருகப்
கெட்டியானமோர் – 3 கப்
மஞ்சள்தூள் – கால்டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

அரைக்க:
தேங்காய் – அரைகப்
பச்சைமிளகாய் – 5
துவரம்பருப்பு – ஒருடீஸ்பூன்
சீரகம் – ஒருடீஸ்பூன்
பச்சரிசி – அரைடீஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் – ஒருடீஸ்பூன்
கடுகு – அரைடீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
காய்ந்தமிளகாய் – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

unnamed (4)

செய்முறை:
பூசணிக்காயை தோல்நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் துவரம்பருப்பு, அரிசியை சிறிதுநேரம் ஊறவைத்து தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேகவைத்துள்ள பூசணிக்காயில் ஊற்றிக் கொதிக்கவிடவும். மோருடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி, கொதிக்கும் காய்கறியில் ஊற்றவும். பிறகு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, கொதிக்கும் குழம்பில் ஊற்றி இறக்கவும். கடைசியாக சிறிது கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

கோஸ்பொரியல்

தேவையானவை:
முட்டைகோஸ் – 200 கிராம்
பெரியவெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – ஒன்று
துருவியதேங்காய்  – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலாகால்டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

unnamed (5)

செய்முறை:
முட்டைகோஸ், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், இதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து நன்கு கிளறி வாணலியை ஒரு மூடியால் மூடவும். அடுப்பைக் குறைத்து வைத்து, மூடியைத்திறந்து வேகும்வரை இடைஇடையே கிளறிவிடவும். நன்கு வெந்தவுடன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:
தேவையென்றால், பாதியாக வேகவைத்த துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை தேங்காய் சேர்க்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். முட்டை கோஸை சிறிது தண்ணீரில் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்தும் பொரியல் செய்யலாம்.

செளசெளகூட்டு

தேவையானவை:
பொடியாகநறுக்கியசெளசெள – 2 கப்
சின்னவெங்காயம் – 4
பாசிப்பருப்பு – கால்கப்
மஞ்சள்தூள் – சிறிதளவு

அரைக்க:
துருவியதேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
சீரகம் – ஒருடீஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் – ஒருடீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு –
தலாஒருடீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

unnamed (6)

செய்முறை:
நறுக்கிய செள செள, பாசிப்பருப்பு, (பாசிப்பருப்பை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து வேகவைத்துள்ள செளசெளவில் சேர்த்து உப்புபோட்டு கொதிக்கவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் கூட்டில் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:
பாசிப்பருப்புக்கு பதில் கடலைப்பருப்பும் சேர்க்கலாம், அல்லது இரண்டையும் பாதிபாதி அளவு சேர்க்கலாம்.

அவியல்

தேவையானவை:
முருங்கைக்காய் – ஒன்று
கத்திரிக்காய் – 2
வாழைக்காய் – சிறிதளவு
அவரைக்காய் – 4
புடலங்காய் – சிறிதளவு
கேரட் – ஒன்று
உருளைக்கிழங்கு – ஒன்று
பூசணிக்காய் – சிறிதளவு
சேனைக்கிழங்கு – சிறிதளவு
தயிர் – ஒருகப்
உப்பு – தேவையானஅளவு
தேங்காய்எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க:
தேங்காய் – அரைகப்
பச்சைமிளகாய் – 4
சீரகம் – 2 டீஸ்பூன்

unnamed (7)

செய்முறை:
கொடுத்துள்ள காய்களில் தோல்நீக்க வேண்டியவற்றை தோல்நீக்கி, எல்லாவற்றையும் ஒரேஅளவுள்ள நீளதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய காய்களை ஒருபாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்புசேர்த்து வேகவிடவும். காய்கள் நன்றாக வெந்தவுடன், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து காயுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கடைந்து கொதிக்கும் அவியலில் ஊற்றவும். ஒரு வாணலியில், தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி இதில் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அவியலில் ஊற்றி இறக்கவும்.

குறிப்பு:
தேவையென்றால், கடுகும்சேர்த்துத்தாளிக்கலாம்.

உருளைக்கிழங்குமசாலா

தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால்கிலோ
பெரியவெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
சாம்பார்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலாஒருடீஸ்பூன்
சீரகம் – சிறிதளவு

unnamed (8)

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, சதுரதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, இதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளிசேர்த்துவதக்கவும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியவுடன் உருளைக்கிழங்கு, சாம்பார்த்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியை ஒரு மூடியால் மூடி, அடுப்பைக் குறைத்து வைத்து வேகவிடவும். தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

கேரட்தயிர்பச்சடி

தேவையானவை:
துருவியகேரட் – ஒருகப்
புளிப்பில்லாததயிர் – அரைகப்
பச்சைமிளகாய் – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையானஅளவு

தாளிக்க:
எண்ணெய் – ஒருடீஸ்பூன்
கடுகு – அரைடீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு

unnamed (9)

செய்முறை:
பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் துருவியகேரட், பச்சைமிளகாய், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து தயிர் பச்சடியில் ஊற்றவும்.

மசால்வடை

தேவையானவை:
பெரியவெங்காயம் – ஒன்று
கொத்தமல்லித்தழை – அரைகப்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத்தேவையானஅளவு

அரைக்க:
கடலைப்பருப்பு – ஒருகப்
காய்ந்தமிளகாய் – 5
சோம்பு – ஒருடீஸ்பூன்
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒருதுண்டு
உப்பு – தேவையானஅளவு

unnamed (10)

செய்முறை:
கடலைப்பருப்பை நன்கு கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். ஊறிய கடலைப்பருப்பில் 2 டீஸ்பூன் அளவு எடுத்து வைத்துக்கொள்ளவும். மீதம் இருக்கும் கடலைப்பருப்புடன் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த மாவுடன் நறுக்கியவற்றைக் கலந்து, எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் ஊறியகடலைப்பருப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். மாவை சிறுசிறுவடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
புதினா இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். காய்ந்த மிளகாய்க்கு பதில் பச்சைமிளகாயும் சேர்த்துக் கொள்ளலாம்.

மாங்காய்ஊறுகாய்

தேவையானவை:
புளிப்புமாங்காய் – 400 கிராம்
கடுகு – 40 கிராம்
காய்ந்தமிளகாய் – 40 கிராம்
நல்லெண்ணெய் – 100 மில்லி
உப்பு – 40 கிராம்
வெந்தயம் – ஒருடேபிள்ஸ்பூன்

unnamed (11)

செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி, ஈரம் போக துடைத்து விரும்பிய அளவு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் வாணலியில் காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் முதலியவற்றை வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய மாங்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, இதில் அரைத்தபொடி, நல்லெண்ணெய், உப்பு கலந்து நன்கு பிசிறவும். பிசிறிய ஊறுகாயை ஒரு ஜாடியில் சேர்த்து இரண்டு அல்லது மூன்றுநாட்கள் வெயிலில் வைக்கவும். நன்கு ஊறியவுடன் தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு:
நல்லெண்ணெய்  இன்னும் கூட அதிகமாக ஊற்றிக்கொள்ளலாம். ஊறுகாயை எடுத்துப் பரிமாறும் போது ஈரமில்லாத ஸ்பூனை உபயோகப்படுத்தவும்.

பால்பாயசம்

தேவையானவை:
பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
பால் – 4 கப்
சர்க்கரை – கால்கப்
குங்குமப்பூ – சிறிதளவு
முந்திரி – 10
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – 10
ஏலக்காய்த்தூள் – அரைடீஸ்பூன்

unnamed (12)

செய்முறை:
வாணலியில் நெய்விட்டு முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை) ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதே வாணலியில் அரிசியை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியை பாலில் கலந்து ஒரு குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ வேகவைத்துக் கொள்ளவும். அரிசி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கரையும்வரை கிளறவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை), ஏலக்காய்த்தூள், குங்குமப்பூசேர்த்து இறக்கவும். அரிசியை வேகவைக்கும்போது அடுப்பைக் குறைத்து வைத்து வேக வைக்கவும்.

கேரட்அல்வா

தேவையானவை:
துருவியகேரட் – 2 கப் (அரைகிலோ)
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
மில்க்மெய்ட் – அரைகப் (200 கிராம்)
முந்திரி – 10
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – 10
ஏலக்காய்த்தூள் – கால்டீஸ்பூன்
சர்க்கரை – 6 டேபிள்ஸ்பூன்
பால் – 100 மில்லி

unnamed (13)

செய்முறை:
கேரட்டை தோல் சீவி நைசாகத் துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு உருகியதும் முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை) சேர்த்து வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதே நெய்யில் கேரட்டைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கேரட் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். பிறகு மில்க் மெய்ட், பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கேரட் நன்கு வெந்து சுருண்டு வரும் சமயம் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (உலர்திராட்சை)  மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பிரெட்டிரை குலோப்ஜாமூன்

தேவையானவை:
பிரெட்ஸ்லைஸ் – 4
பால் – 100 மில்லி
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத்தேவையானஅளவு

சுகர்சிரப்புக்கு:
சர்க்கரை – அரைகப்
தண்ணீர் – அரைகப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
ரோஸ்எசென்ஸ் – கால்டீஸ்பூன்

unnamed (14)

செய்முறை:
பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நீக்கிவிட்டு, நடுவில் உள்ள பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பிரெட்டை பாலில் நனைத்துப் பிழிந்து கொள்ளவும். பிழிந்த பிரெட்டை கட்டிகள் இல்லாமல், மிருதுவான மாவாகப் பிசைந்து கொள்ளவும். அழுத்திப் பிசையக் கூடாது. அழுத்திப் பிசைந்தால் குலோப்ஜாமூன் கட்டியாகிவிடும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். அடுப்பை மிதமானதீயில் வைத்து பொரிக்கவும். இல்லையென்றால், குலோப்ஜாமூன் வெளியே கருகி விடும். உள்ளே வேகாது. சுகர் சிரப்புக்கு தேவையான சர்க்கரையை ஒருபாத்திரத்தில் சேர்த்து தண்ணீர், ஏலக்காய்த்தூள், ரோஸ் எசென்ஸ் சேர்த்து பிசுக்கு பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பொரித்து வைத்துள்ள குலோப்ஜாமூன்களை சர்க்கரைப்பாகில் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். இரண்டு மணி நேரம் கழித்து, குலோப்ஜாமூன்களை வெளியே எடுத்து, சர்க்கரையில்புரட்டி வைக்கவும். இந்த குலோப்ஜாமூன்கள் இரண்டு நாட்கள் வரை கெடாது.