தீபிகா படுகோனுக்கு என்னதான் ஆச்சு?

[wysija_form id=”1″]

எப்பவும் சர்ச்சை என்றாலே முன்னுக்கு நிற்பவர் மல்லிகா ஷெராவத் தான். அவர் தான் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவார். ஆனால் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக மீடியாக்களின் பார்வைகளில் அதிகம் சிக்கியவர் தீபிகா படுகோன்.

ராம்-லீலா படம் வெளி வந்தாலும் வந்தது நல்ல ஆரம்பமாக கைது வாரண்டே வந்தது தீபிகாவுக்கு. ராம்-லீலா என பெயர் வைத்து விட்டு இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கின்றனர் என படக்குழுவினருக்கு எதிராக தொடரப்பட்ட இவ்வழக்கில் படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, படத்தில் நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன், படத்தின் இணை தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆகியோரை கைது செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ஒரு வழியாக வழக்கு முடிந்து ஏகப்பட்ட இம்சைகளுக்கு பிறகு படம் வெளியானது.

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ஒரு கூல் ட்ரிங்ஸ் விளம்பரத்தில் ‘என் கழுத்துல என்ன பாக்கறீங்க?’ என கேட்பார். அதில் எத்தனை சூட்சமங்கள் இருக்கிறது என யாருக்கு தெரியும். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் காணாமல் போயிருந்தது. தீபிகாவின் டாட்டூ. RK என அவர் கழுத்தின் பின் பகுதியில் இருந்த டாட்டூ மாயமாகி இருந்தது. RK என்பது ரன்பீர் கபூர் என பலரும் கிசுகிசுக்களை கொளுத்திப் போட்டு வந்த நிலையில், இந்த விளம்பரத்தில் டாட்டூ இல்லாமல் இருக்க, ஒருவேளை அழித்து விட்டாரா?, இல்லை பேன் கேக் மேக் அப் செய்துள்ளாரா? இல்லை எடிட்டிங்கா என பலரும் மண்டையை பிய்த்துக் கொள்ள, தற்போது ‘ஃபைண்டிங் ஃபேனி’ படத்தின் ப்ரோமோஷனுக்காக ரன்வீன் சிங்குடன் திருமணம் என பூகம்பம் கிளப்பி அதற்கு மேக்கிங் வேறு எடுத்து வெளியிட பாலிவுட் பாயில் கொதிநிலைக்கு ஆளாகியுள்ளது.

’ஃபைண்டிங் ஃபேனி’ படத்தின் ஹீரோ அர்ஜுன் கபூர். ஆனால், அதற்கும் ரன்வீருக்கும் என்னய்யா சம்மந்தம்? என்ற கேள்விக்கே பதில் கிடைக்காத நிலையில், அதே ‘ஃபைண்டிங் ஃபேனி’ படத்தின் சக்ஸஸ் பார்ட்டியில் படத்தின் ஹீரோ அர்ஜுன் கபூர் பொது இடத்தில் வைத்து தீபிகாவை முத்தமிட, அதை சற்றே பொறாமை கண்களுடன் ரன்வீர் பார்க்க, சொல்லவா வேண்டும்… சர்ச்சை கிளம்ப?

இந்த படத்திற்கு ‘ஃபைண்டிங் சர்ச்சை’ என்று கூட பெயர் வைத்திருக்கலாம் போல. இதே படத்தின் டிரெய்லரில் ஒரு இடத்தில் தீபிகா, ஹீரோவிடம் ‘ஐ அம் வெர்ஜின்’ என்ற வார்த்தையை சொல்லுவார் .  சென்சார் தரப்பு, அந்த வார்த்தையை எடுக்கும் படி கூறியுள்ளது. ஆனால், இயக்குனரோ முடியாது என பஞ்சாயத்து செய்ய, படத்திற்கு விழுந்தது யு/ஏ சர்டிபிகேட். படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகளை கூட கண்டுகொள்ளவில்லையாம் சென்சார். (ஒரு வார்த்தை-ஓஹோனு ப்ரோமோஷன்).

இந்த பிரச்னை நடந்து வரும் நிலையில், அப்பாடி தீபிகா எஸ்கேப் என நினைத்த போதுதான் அந்த பகீர் போட்டோவை ஒரு பிரபல பத்திரிகை தீபிகாவின் ‘க்ளீவேஜ் ஷோ’ என கமெண்ட் அடித்து டுவிட்டரில்  வெளியிட்டது. அதே டுவிட்டரில் கொந்தளித்தார் தீபிகா.

“ஆமாம் நான் பெண், அதனால் மார்பகங்கள் இருக்கின்றன, அதனால் க்ளீவேஜ் இருக்கிறது, இதனால் உங்களுக்கென்ன பிரச்னை”

“பெண்ணுக்கு மரியாதை கொடுப்பது எப்படி என்பது தெரியாமல், பெண்ணுரிமை குறித்து பேசாதீர்கள்”

“இந்தியாவின் முன்னணி செய்தி பத்திரிகைக்கு இது தான் செய்தியா?”

என தாறுமாறாக கேள்வி எழுப்ப, தமிழ் நாட்டில் குஷ்பு முதல், பாலிவுட்டின் ஷாருக்கான், ப்ரியங்கா சோப்ரா, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்களும் அவருக்கு ஆதரவு கரம் நீட்ட, கூகுள் தேடல் தளத்தில் ஒரே நாளில் தீபிகா செம ஹாட் மச்சியானார். தீபிகாவிற்கு ரசிகர்களும் ஆதரவு தர, அந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தை உடனே நீக்கியது சம்மந்தப்பட்ட பத்திரிகை.

இந்த பிரச்னைகளே இன்னும் போய் கொண்டிருக்கையில், இந்தி படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ‘எனது குடும்பத்தை காப்பாற்றவே விபசாரத்தில் ஈடுபட்டேன்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இவருக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார் தீபிகா.

”சுவேதா செய்ததில் தவறு ஒன்றுமில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற அவருக்கு வேறு வழியில்லாத நிலையில், இதுதான் ஒரே வழி என்கிறபோது அவரால் என்ன செய்ய முடியும்? இதை சுட்டிக்காட்டி சுவேதாவை பற்றி இழிவாக பேசுவதை தவிர்த்து அவருக்கு எல்லோரும் ஆதரவு காட்ட முன் வர வேண்டும்” என்றார். இது பற்றி சில ஹீரோயின்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் கருத்து கூறாமல் நழுவிவிட்ட நிலையில் இதே பிரச்னைக்கு நம்மூர் குஷ்புவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ”விபசாரத்தில் ஈடுபட்டதாக சுவேதா மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார் அவருடன் பிடிபட்ட தொழில் அதிபரை தப்ப விட்டது ஏன்?” என்று சூடாக கேட்டுள்ளார்.

பேசாம இந்த வருடத்தின் சர்ச்சை நாயகினு தீபிகாவுக்கு ஒரு அவார்டு கொடுக்க ஏன் பரிசீலனை பண்ணக் கூடாது?!

[wysija_form id=”1″]