தீர்ப்புக்கு முன்னும் பின்னும் சென்னை…

[wysija_form id=”1″]

http://tamilagamtimes.com/?post_type=product

‘அஞ்சுவது யாதொன்றுமில்லை… அஞ்ச வருவதும் இல்லை’ அப்பர் எழுதிய இந்த வரிகள் ஜெயலலிதாவுக்கு ரொம்பப் பிடிக்கும். ”எல்.டி.டி.இ இயக்கத்தை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறீர்களே… உங்களுக்கு உயிர்மீது பயமில்லையா?” என முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது கோட்டையில் நடந்த பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, கொஞ்சமும் யோசிக்காமல் வந்து விழுந்தன, ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை… அஞ்ச வருவதும் இல்லை’. அப்படிப்பட்ட ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புத் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அஞ்சித்தான் போனார்.  இறுதி கிளைமாக்ஸுக்கு முன்பு அரங்கேறிய காட்சிகள் இங்கே…

சனிக்கிழமை!

செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு என முதலில் அறிவிக்கப்பட்ட தினம் சனிக்கிழமை. நீதிமன்றத் தீர்ப்பைப் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றவேண்டும் என்கிற முடிவை ஜெயலலிதா எடுத்ததற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது பாதுகாப்பு விஷயம்தான். ஆனால், அதைத் தாண்டி தீர்ப்பு நாள் சனிக்கிழமையாக இருக்கக் கூடாது என்கிற ‘அஜென்டா’வும் அதில் இருந்தது. தீர்ப்பை 27-ம் தேதிக்கு குன்ஹா மாற்றியபோது, அன்றும் சனிக்கிழமைதான். உடனே, சனிக்கிழமையைத் தவிர்த்து வேறு கிழமைக்கு மாற்றச் சொல்லி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் ஜெ. தரப்பு வழக்கறிஞர். ஆனால், அதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. கரி நாள் என்பதால் சனிக்கிழமை அன்று எந்தக் காரியத்தையும் ஜெயலலிதா செய்யமாட்டார். தீர்ப்புத் தேதி சனிக்கிழமை என்பதால், அதற்காக விசேஷ பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டன. இரண்டு தினங்களுக்கு முன்பு மஹாலி அமாவாசை தினத்தில் சிறப்பு யாகம் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது.

ராகு காலம் தொடங்குவதற்கு முன்பு பெங்களூரு கிளம்பினார் ஜெயலலிதா. ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்ட நேரமோ எமகண்டத்தில்.

போயஸ் கார்டன்!

அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு பூஜை அறைக்குப் போன ஜெயலலிதா அங்கே ரொம்ப நேரம் ஆழ்ந்த வேண்டுதலில் இருந்திருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து அவர் கிளம்புவதற்கு முன்பே கோயில் குருக்கள் சிலர், பூஜை செய்த பொருட்களுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு கார்டன் போர்ட்டிகோவுக்கு வந்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டன் போர்ட்டிகோவை மறைத்திருக்கும் சுவரின்மீது மார்பிள் கல் ஒன்று பதிக்கப்பட்டிருக்கும். அந்தக் கல்லில் வரையப்பட்டிருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்து, வணங்கிவிட்டுத்தான் காரில் ஏறினார் ஜெயலலிதா. காரில் அவர் ஸீட்டுக்கு எதிரே ஒட்டப்பட்டிருந்த பிள்ளையார்பட்டி விநாயகர் ஸ்டிக்கரை தொட்டு வணங்கிவிட்டு டிரைவரைப் பார்க்க.. கார் கிளம்பியது. அதைப் படம் பிடிக்கக் காத்திருந்த மீடியா கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணக்கம் வைத்தார். ‘நீதி வெல்லும்’ என வாசகங்கள் தாங்கிய பேனர்களை ஏந்தி நின்ற தொண்டர்களை உற்றுப்பார்த்தபடியே போனார் ஜெயலலிதா. அவர் கிளம்பிப் போனபோது வானில் இருந்து சிறு தூறல்கள் வந்து விழுந்தன. கோட்டூர்புரம் வந்தபோது வரசித்தி விநாயகர் கோயிலில் காரில் இருந்தபடியே வழிபட்டார். காலையில் கிளம்பி பெங்களூரு போய்ச் சேரும் வரையில் விநாயகர் வழிபாடுதான் அதிகமாக இருந்தது. டி.என் 09 6167, டி.என் 09 5969, டி.என் 09 6869 ஆகிய பதிவு எண்கள் கொண்ட மூன்று கார்களை ஜெயலலிதா வைத்திருக்கிறார். இதில் அதிகம் பயன்படுத்துவது டி.என். 09 6167 பதிவு எண் கொண்ட காரைத்தான். அந்த கார் முந்தைய தினமே பெங்களூருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. அதாவது கோர்ட்டில் நுழையும்போது அந்த காரைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. கார்டனில் இருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு டி.என் 09 5969 என்ற எண் கொண்ட காரில் புறப்பட்டுச் சென்றார்.

ஏர்போர்ட்!

ஜெயலலிதாவோடு காரில் ஒன்றாக சசிகலா பலமுறை போயிருக்கிறார். ஆனால் சசிகலா, இளவரசியோடு சேர்ந்து மூவருமாக காரில் ஒன்றாகப் போனது கிடையாது. அப்படியே ஒன்றாகக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றாலும் இன்னொரு காரில்தான் இளவரசி தனியாக சென்றிருக்கிறார். ஆனால், சிவப்பு விளக்கு காரில் மூன்றுபேரும் ஒன்றாகத்தான் பெங்களூருக்குக் கிளம்பிப் போனார்கள். ஜெயலலிதா வழக்கமாகப் பயன்படுத்தும் ணீக்ஷீக்ஷீஷீஷ் ணீவீக்ஷீநீக்ஷீணீயீt sணீறீமீs ணீஸீபீ நீலீணீக்ஷீtமீக்ஷீs ஜீஸ்t றீtபீ நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்பெஷல் விமானத்தில் போய் பெங்களூரில் இறங்கினார். தீர்ப்பு வெளியான பிறகு போயஸ் கார்டனில் கூட்டம் கூட்டமாக பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். இதில் சி.ஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி போன்றவர்கள் கண்ணீரோடு சோகமாக உட்கார்ந்திருந்தனர்.

அ.தி.மு.க அலுவலகம்!

தேர்தல் ரிசல்ட்டுக்காகக் காத்திருப்​பது​போல அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் காலையிலேயே திரண்டு இருந்தார்கள் கட்சியினர். பட்டாசுகள், இனிப்புகள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருந்தன. 11 மணிக்குத் தீர்ப்பு தெரியாத நிலையிலேயே ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு’ என்ற ரேஞ்சில் லட்டு விநியோகம் நடத்தி, பட்டாசுகளைக் கொளுத்திக் கொண்டாடினார்கள். ”தீர்ப்பு வந்திடுச்சு. அம்மா வெளியே வந்துட்டாங்க” என கோரஸாக சவுண்டுவிட, அங்கு இருந்தவர்கள் உண்மை என நம்பி சில நிமிடங்களுக்கு ஆட்டம், பாட்டம் சந்தோஷத்தைக் கொட்டித் தீர்த்தனர். தீர்ப்புப் பற்றி தகவல்கள் வரத் தொடங்கியபோது கருணாநிதிமீது கோபமாகக் கொந்தளித்தார்கள். தீர்ப்பு குறித்து தெரிவதற்குமுன்பே ஜெயலலிதாவுக்குத் தண்டனை உறுதி என்பதை கட்சிக்காரர்கள் சிலரே தீர்மானித்திருந்தார்கள். அதனால்தானோ என்னவோ, ‘நீதிதேவதை வழங்குவது என்றென்றும் வெற்றிக் கொடி. மக்கள் பணம் ரூ.2 லட்சம் கோடியைச் சுருட்டிய கருணாநிதிக்கு நீதிதேவதை வழங்குவது என்றென்றும் செருப்படி’ என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் திடீரென்று தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டன. அதில் ஒரு பக்கம் ஜெயலலிதாவின் படமும் இன்னொரு பக்கம் கருணாநிதியின் படமும் இருந்தன. அந்த போஸ்டர்களை வாங்கிய தொண்டர்கள் கருணாநிதி படத்தின்மீது செருப்புகளைக் கொண்டு அடித்து ஆத்திரம் காட்டினார்கள். இன்னும் சிலர் தீ வைத்து போஸ்டர்களைக் கொளுத்தினார்கள். ”அம்மா மேல செருப்பு படாம அடிடா… அம்மா படத்தைத் தனியாக எடுத்துவிட்டு கருணாநிதி படத்தைக் கொளுத்துடா’ எனப் பதறினார்கள்.

கொஞ்சநேரத்தில் ஆட்​டோவில் கருணாநிதி உருவ​பொம்மையாக வந்து இறங்​கினார். மஞ்சள் துண்டு போர்த்தி நிஜ கருணாநிதியாகவே அந்த உருவ​பொம்மையைக் கொண்டு வந்தார்கள். தீர்ப்பு வெளியானதுமே உருவபொம்மையை எரித்து கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர். அதுதான் கலவ​ரத்தின் தொடக்கப்புள்ளி. உடனே கொதித்தெழுந்தது கூட்டம். அருகில் இருந்த கடைகளை அடைக்கச்சொல்லி கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கினார்கள். அதற்குள் ஒரு கூட்டம், ”இங்க போராட்டம் பண்ணி பயனில்லை. அம்மாவைக் குற்றவாளின்னு சொல்லவச்ச கருணாநிதி வீட்டு முன்னாடி எதிர்ப்பைக் காட்டணும்’ என நிதானத்தில் இல்லாதவர்கள் சவுண்டு கொடுக்க… கூட்டம் கோபாலபுரத்தில் லேண்டு ஆனது.

கோபாலபுரம்

எதையும் எதிர்பார்த்து காக்கிகளை நம்பாமல் கோபாலபுரத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வளையத்தைப் போட்டு வைத்திருந்தார்கள் உடன்பிறப்புகள். அந்த வளையத்தைத் தாண்டி ரத்தத்தின் ரத்தங்கள் எல்லை தாண்ட முயன்று கொண்டிருந்தனர். இந்த அல்லாட்டத்தில் காக்கிகள் படாத பாடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து  கட்சிக்காரர்கள் இங்கு வந்து சேர்ந்தார்கள். அதோடு மற்ற பகுதிகளில் இருந்து வந்தவர்களும் கோபாலபுரத்தைச் சுற்றி வளைக்கப் போராடினார்கள். கம்பு, கட்டை, தடி எனக் கைகளில் கிடைத்ததை எல்லாம் ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு புறப்பட்டது படை. எதிரி நாட்டை நோக்கித் துவம்சம் செய்யப் புறப்பட்டுப் போனதுபோல வீராவேசத்துடன் கிளம்பினார்கள். கருணாநிதி வீட்டு முன் இருந்த தி.மு.க தொண்டர்​களும் எதற்கும் தயாராகவே இருந்தார்கள். அருகில் கட்டட வேலை நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து கற்களையும் கருணாநிதி வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலில் இருந்து கட்டைகளையும் உபயமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இரண்டு பக்கங்களிலிருந்தும் கற்கள் சர்…சர்… எனப் பறந்து வந்து விழத் தொடங்கின. இதில் தி.மு.க தொண்டர் ஸ்ரீதரின் தலைமீது கல் விழுந்து காயம் ஏற்பட்டது. இத்தனை களேபரங்களையும் வழக்கம்போல வேடிக்கை பார்த்தது போலீஸ்.

அறிவாலயம்

அறிவாலயத்திலும் தயாராக இருந்தார்கள் தி.மு.க தொண்டர்கள். அ.தி.மு.க கொடியோடு பைக்கில் வந்த சிலர் அறிவாலயத்தில் நின்று கோஷம் போட, உள்ளே இருந்து பறந்துவந்த நாற்காலிகள் ரோட்டில் வந்து விழுந்தன. அ.தி.மு.க கரைப் போட்ட துண்டை தலையில் கட்டிய ஒருவர் அலம்பல் செய்ய… அவரைப் பத்திரமாக அனுப்பி வைத்தது போலீஸ்.

ஜெயா டி.வி!

காலையில் ஜெயா மூவிஸ் சேனலில் ரஜினி, சிவாஜி நடித்த ‘விடுதலை’ படம் ஓடிக் கொண்டிருந்தது. திட்டமிட்டே இந்தப் படத்தைத் தேர்வுசெய்து ஒளிபரப்பினார்களா எனக் கட்சிக்காரர்களுக்கே குழப்பமாகத்தான் இருந்தது. ஜெயா டி.வி-யில் ‘விடுதலை’ முடிந்தபோது பெங்களூரில் ஜெயலலிதாவுக்குத் ‘தண்டனை’ கிடைத்திருந்தது. சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக எந்தச் செய்தியையும் இதுவரை ஜெயா டி.வி ஒளிபரப்பியது கிடையாது. அதைத் தீர்ப்பு தினத்திலும் கடைப்பிடித்தார்கள். தலைப்புச் செய்திகளில் முதலிடம் பிடித்திருந்தது இடப்பாடி நகராட்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு என்ற செய்திதான். ‘அமைதியான அ.தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களும்(!) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை அடைத்து மக்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். பெண்கள் பலரும் கண்ணீர் வடித்தனர்’ என ஜெயா டி.வி-யில் ஃபாத்திமா பாபு செய்தி வாசித்துக்கொண்டு இருந்தார். அடுத்தநாள் ஜெயா மூவிஸில் காலையில் ‘துளசி’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு காட்சி. ”ஏன் பிள்ளைகள் அழுதுக்கிட்டு இருக்கு” என நடிகர் வாகை சந்திரசேகர் கேட்க, பெண் ஒருவர், ”அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் இறந்துவிட்டார். அதற்காக கடைகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்கள். பால் வாங்க முடியவில்லை” எனச் சொல்கிறார். ”ரஷ்யாவில் பிரதமரே இறந்துவிட்டால் அரைமணி நேரம்தான் இரங்கல் செய்வார்கள். அதன்பிறகு வேலை பார்க்கப் போய்விடுவார்கள். இங்கேதான் அரசியல்வாதிகள் பெயரில் அராஜகம் செய்கிறார்கள்” என வாகை சந்திரசேகர் சொல்லிக்​கொண்டிருந்தார்.

காங்கிரஸும் காவிரியும்!

”காவிரி விஷயத்தில் ஜெயலலிதா காட்டிய முனைப்புகள் காரணமாக நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு. அதில் பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் அடைத்தார்கள். இப்படி நடந்ததன் மூலம் தன் காவிரிப் பகையை கர்நாடக காங்கிரஸ் தீர்த்துக்கொண்டது” என்றும் இந்தத் தொண்டர்கள் சொல்லி வந்தார்கள்!

கேபினெட் மீட்டிங்!

23-ம் தேதி திடீரென்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என ஒரு விஷயம் வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டால் அது ஜெயலலிதாவின் இமேஜுக்குச் சரிவை உண்டாக்கும். அதைப் போக்க அதிரடியாக எதையாவது செய்தால்தான் முடியும். காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்புக்கூட வரலாம் என்று கோட்டையில் பேச்சு அடிபடுகிறது. ஜெயலலிதாவுக்கு அனுதாபத்தை இது தேடித் தருவதுடன் தீர்ப்பின் வெப்பத்தைத் தணிக்க இந்த அறிவிப்புப் பயன்படலாம்.