தொழில் கடன் யாரிடமிருந்து?

றிய அளவில் சொந்தமாக தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சொந்தமாகத் தொழில் செய்பவர்களிடம் தொடர்ச்சியாக அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பணவரத்து இருக்கும். தினமும் பணவரத்து இருக்கும் தொழிலை செய்பவர்கள்கூட பணப் பிரச்னையால் பெரும் அவதிப்படுவதைப் பல சமயங்களில் பார்த்திருப்போம்.  நிதி நெருக்கடி இல்லாமல் தொழிலை நடத்துவது, தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், அதனால் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிப்படையாமல் நடத்திச் செல்வது எப்படி என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.

தொழில் கடன் யாரிடமிருந்து?

‘‘தொழிலுக்குத் தேவைப்படும் நிதியைக் கடனாக வாங்குகிறீர்களா அல்லது கையிலிருக்கும் சேமிப்பை வைத்து தொழில் துவங்குகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். தேவையான பணத்தில் ஒரு பகுதியை கடன் வாங்குகிறீர்கள் எனில், அது எந்த வகையான கடன் என்பதை முடிவு செய்வது முக்கியம். அதாவது, வங்கி அல்லது வட்டிக் கடை அல்லது தெரிந்தவர்களிடம் வாங்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்து, அந்தக் கடனுக்கான வட்டி விகிதம் என்ன என்பதை யும் முடிவு செய்வது நல்லது.

வட்டி விகிதம்!

தொழில் துவங்குவதற்காகக் கடன் வாங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால், அந்தக் கடனை வங்கியில் வாங்குவது சிறப்பாக இருக்கும். வங்கிக் கடனுக்குத்தான் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். தவிர்க்க முடியாத காரணங்களினால் அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கிவிட்டீர்கள் எனில் அதற்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்த வேண்டும். வட்டியை போல அசல் தொகையை விரைவாக அடைத்துவிடுவது நல்லது.

கடன் சதவிகிதம்!

கடன் இல்லாமல் தொழில் நடத்துவது சிரமம்தான். தொழிலில் கடன் என்பது எப்போதும் இருந்துகொண்டே  இருக்கும். கடனுக்கான சதவிகிதத்தை உங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. அதாவது, உங்கள் தொழில் மூலதனத்துக்குச் சமமான அளவில் கடன் வைத்துக் கொள்ளலாம். இதைவிட அதிகமாகும்போது கடன் வாங்குவதற்கு பலமுறை யோசிப்பது நல்லது.

நிலையான செலவுகள்!

தொழிலில் லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் நிலையான செலவுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதாவது, ஊழியர்களின் சம்பளம், மின்சாரக் கட்டணம், வாடகை, மூலப்பொருட்கள் வாங்குவது, தினசரி செலவு, வரி ஆகிய செலவுகள் எப்போதுமே இருக்கும். இந்தச் செலவு களுக்கான தொகையை கையில் வைத்திருப்பது முக்கியம். இவற்றைச் சமாளிக்க புதிதாகக் கடன் வாங்கக்கூடாது. எனவே, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலவாகும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு,  குறைந்தது ஆறு மாத காலத்துக்குத் தேவையான தொகையை வைத்திருப்பது  நல்லது.

லாபம் கிடைக்கும்போது!

லாபம் கிடைக்கும்போது அதை உடனடியாகச் சொத்தாக மாற்ற நினைக்கக் கூடாது. எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது, அதனுடைய சதவிகிதம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்தது அவசரமாகத் திரும்பச் செலுத்த வேண்டிய கடன் அல்லது அதிக வட்டிக்கு வாங்கிய கடன் ஆகியவற்றை உடனடியாகத் திரும்பச் செலுத்த வேண்டும்.

அடுத்து, நிலையான செலவு களுக்கான தொகையைத் தனியாக ஒதுக்கவேண்டும். மீதமிருக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை உங்களுக்காக எடுத்துக்கொண்டு, மீதத் தொகையை நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

எந்த வகை முதலீடு?

முதலீடு என்பது அசையா சொத்தாக மட்டும் இருக்கக் கூடாது. அது உற்பத்தி சார்ந்த விஷயமாகவும் இருக்க வேண்டும். அதாவது, பொருளாதாரம் நன்றாக வளர்ச்சி அடைந்துவரும் சமயங்களில் அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் விற்பனையும் அதிகரிக்கும் என்ற சமயத்தில் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவது, கூடுதலாகத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவது போன்றவற்றைச் செய்யலாம். இது தொழிலை வளர்ச்சி அடைய செய்யும். அதாவது, உற்பத்தி அதிகரித்து அதிக விற்பனை நடக்கும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். அதேசமயத்தில் தொழிலின் மதிப்பும் அதிகரிக்கும்.

இயந்திரங்கள் வாங்கும்போது!

தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் எனில் புதிதாக இயந்திரம் வாங்குவது அவசிய மானதாக இருக்கும். புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்யப்போகிறோமா அல்லது உள்நாட்டிலேயே வாங்கப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மேலும், சில இயந்திரங்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் தேவை எனில் அந்த இயந்திரங்களை வாடகை அல்லது லீஸுக்கு எடுக்கப் போகிறோமா என்பதை முடிவு செய்வது நல்லது. தேவையின் அடிப்படையில் இயந்திரங்களை வாங்குவதா அல்லது வாடகைக்கு எடுப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இயந்திரங்களை புதிதாக வாங்கும்போது எவ்வளவு செலவாகும், அதே வாடகைக்கு எடுக்கும்போது எவ்வளவு செலவாகும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் எது சிறந்தது என்பதை முடிவு செய்வது நல்லது.

இன்ஷூரன்ஸ்!

தொழில் செய்பவர்கள் தங்களுக்கும் தங்கள் தொழிலுக்கும் என தனித்தனியாக இன்ஷூரன்ஸ் எடு்ப்பது நல்லது. அதாவது, தொழிலில் எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் (தீ, வெள்ளப் பெருக்கு, பூகம்பம், அதிக மின்சார வரத்தால் ஏற்படும் பாதிப்பு) நிகழும்போது அதிலிருந்து காத்துக்கொள்ள இன்ஷூரன்ஸ் உதவும். மேலும், தொழிற்சாலையில் உள்ள விலை உயர்ந்த இயந்திரங்களுக்குத் தனித்தனியாக இன்ஷூரன்ஸ் எடுப்பதும் அவசியம்.  தொழிலாளர்களுக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் எடுப்பது  முக்கியம். ஏதாவது அசம்பாவிதம் நிகழும் சமயங்களில் இழப்பீடு பெற வசதியாக இருக்கும். இல்லையெனில் உங்களின் லாபத்தில் ஒருபகுதி குறைய வாய்ப்புள்ளது.

அவசர கால நிதி!

குடும்பத்தைப் போலவே, நிறுவனங்களுக்கும் அவசரத் தேவைகள் இருக்கும். எனவே, அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை எடுத்து வைப்பது அவசியம். நிறுவனத்தில் லாபம் குறையும்போது அல்லது வேறு அவசரத் தேவைகளுக்கு அதை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவைப் போல 10 மடங்கு தொகையை எடுத்து வைப்பது நல்லது.

தினசரி செலவுகள்!

தொழிலில் தினமும் ஏற்படும் வரவு மற்றும் செலவு குறித்து எழுதி வைப்பது முக்கியம். இதன் அடிப்படையில்  என்னென்ன செலவுகள் உள்ளது, அந்தச் செலவுகளைக் குறைக்க வேண்டுமா அல்லது அதிகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பணப் பரிவர்த்தனைகள்!

சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பணம் சார்ந்த பரிவர்த்தனைகள் அனைத்தையும் வங்கி மூலமாக மேற்கொள்வதே சிறந்தது.  அப்போதுதான் தொழில் மூலம் வரும் வருமானத்தையும் செலவு களையும் சரியாகக் கணக்கிட முடியும்.  வங்கி மூலமாக பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் போது தொழில் வளர்ச்சிக்காகக் கடன் வாங்குவது எளிதாகவும் இருக்கும். பணப் பரிவர்த்தனை களை காசோலை மூலமாக செய்வதும் நல்லது.

குடும்பம் Vs தொழில்!

தொழிலில் கிடைக்கும் லாபத்தைத் தொழில் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அந்தப் பணத்தைக் கொண்டு குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது. இப்படிச் செய்யும்போது வீண் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தொகையை உங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளலாம். அந்தத் தொகையில் குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு தேவையான பணத்தை மொத்தமாகத் தொழிலிருந்து எடுக்கக் கூடாது.

ஆய்வு முக்கியம்!

சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் எதிர்காலத்தில் உற்பத்தி, விற்பனை, ஆர்டர்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யும்போதுதான் தொழில் வளர்ச்சி குறித்துத் திட்டமிட முடியும். அதாவது, எதிர்காலத்தில் விற்பனை அதிகமாக இருக்கும் எனில், அதற்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும், தொழில் வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அதிக ஏற்ற இறக்கங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பது நல்லது.

நிபுணர் சொன்ன ஆலோசனைகளின்படி தொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டால், தொழிலில் வரும் ஏற்ற இறக்கங்களை எளிதாகச் சமாளிக்க முடியுமே!