நந்திதாதாஸ் அதிர்ந்துபோன கிணறு!

 

வியங்களால் சூழ்ந்திருப்பதால் அந்தச் சிறிய அறையே ஒரு ஓவியமாகத்தான் தெரிகிறது. மெலிதான ஒளிக்கீற்றின் நடுவே இசையாகப் புன்னகைக்கிறார் இளையராஜா. மம்தாபானர்ஜி தீதியின் கண்களில் தைரிய அலைகள் தெறிக்கின்றன. வெட்கத்தைப் போர்த்தி நிற்கிறாள் மேலாடை நழுவிய இளம்பெண். இப்படி அங்குலம் அங்குலமாக உணர்வுகள் வியாபித்திருக்கும் ஓவியங்களுக்கு இடையில் எதுவுமே அறியாதவர்போல் சாய்ந்திருக்கிறார் உலக சாதனை ஓவியர் ராஜசேகரன்.

மலையாள சினிமாவில் பெரும் ஆளுமையுடைய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் ரசிகராக இருப்பதற்கே பல நுணுக்கங்கள் கற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அடூரின் மாஸ்டர் பீஸான ‘நாலு பெண்ணுங்கள்’ உள்ளிட்ட மூன்று படங்களில் பிரதான உதவி இயக்குனர் கம் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் தமிழரான ராஜசேகரன். ‘போர்ட்ரைட்’ எனப்படும் உருவ ஓவியக் கலையில் உச்சம் தொட்டவர் இவர். 25 அடி உயரம், 50 அடி அகலத்தில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் பிரமாண்ட ஈசல் ஓவியத்தை வரைந்து உலக சாதனை நிகழ்த்தியவர். தன்னுடைய இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காததால் அப்டேடட் கின்னஸ் ரெக்கார்டு சான்றிதழைச் சமீபத்தில் பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலுள்ள ‘கேலரி’யில் ராஜசேகரனைச் சந்தித்தேன்.

நெடுநாள் தாடியை நீவியபடி பேச ஆரம்பித்தவர் ”நல்ல கலைஞனை யதார்த்த வாழ்க்கைச் சூழல் எத்தனை திசையில் சுழற்றி வீசினாலும்கூட அவனோட தேடல் மறுபடியும், மறுபடியும் அவனைக் கலையோட காலடியிலதான் கொண்டுவந்து சேர்க்கும்கிறது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை. என் வாழ்க்கையே இதற்கான உதாரணம்தான். எல்லாக் குழந்தைகள் மாதிரி சின்ன வயசுலேயே எனக்கும் ஓவிய தாகம் இருந்துச்சு. ஆனா, தீவிரமா அந்தத் துறையில இறங்குற சூழல் இல்லை. பி.எஸ்.சி. கணிதம் படிச்சுட்டு ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட், மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ், ஸ்டெனோனு சம்பந்தம் இல்லாம பல துறைகள்ல வேலைக்குப் போயிட்டிருந்தேன். ஆனா, இந்த ஓவிய வேட்கை மட்டும் என்னை விடாம உள்ளுக்குள்ளே துரத்திட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்துல ‘நம்மோட தளம் இதெல்லாம் இல்லை’னு சொல்லி மற்ற விஷயங்களை உதறிட்டு தூரிகையைக் கையில தூக்கிட்டேன்.

ஆயில் பெயின்டிங்தான் என்னோட விருப்பம் அதிலேயும் போர்ட்ரெய்ட்ஸ்தான் வரைகிறேன். காரணம் 100 சதவீதம் முழுமையை போர்ட்ரெய்ட்லதான் கொண்டு வரமுடியும். நதிக்கரையில் தென்னை மரங்கள் நிற்கிற மாதிரியான புகைப்படங்களை வரைகிறேன்னு வெச்சுக்குங்க… வெறும் ரெண்டேயிரண்டு ஓலைகள் மட்டுமே வரைஞ்சிருந்தாலும்கூட நீங்க அதை தென்னை மரம்தான்னு அடிச்சுச் சொல்வீங்க. ஆனா, உங்களை வரையுறப்ப கண்களை லேசா சின்னதாக்கி வரைஞ்சுட்டாகூட அந்த ஓவியம் நீங்களாக இருக்காது… யாரோ மாதிரி இருக்கும். அதனால, முழுமையான சவால் நிறைஞ்ச போர்ட்ரெய்ட்ஸ்களைத்தான் நான் விரும்புறேன். எனக்குன்னு ஓவிய குரு யாருமில்லை. ஆனா, ஜே.பி.கிருஷ்ணாவின் ஓவியங்களை மானசீகமா நேசிச்ச, நேசிக்கிற ஆள் நான்.

மனுஷங்களோட வெவ்வேறு உணர்ச்சி முகங்களை வரைய எனக்கு வெகு விருப்பமுண்டு. ஆனா, போஸ் கொடுக்க பலர் ஒத்துக்கிறதில்லை. கேரளத்தைச் சேர்ந்த எனது தோழி ஷோபா ஜோஷி இதுக்கு சந்தோஷமா ஒத்துழைப்பாங்க. அவங்களோட நவரச முகபாவனைகளை வெச்சு நான் வரைஞ்சிருக்கிற ஓவியங்களுக்காகச் சமீபத்தில் மூன்று நிறுவனங்களோட உலக சாதனை விருது கிடைச்சது. நம்பூதிரிபாட், ஃபிடல் காஸ்ட்ரோ மாதிரியான அழுத்தமான முகங்களைத் தேடித்தேடி வரைஞ்சிட்டிருக்கேன். இந்தத் தாகம்தான் என்னை சினிமாவுக்கும் இழுத்துட்டுப்போச்சு. அடூர் கோபாலகிருஷ்ணன் சார் தன்னோட ‘நிழல்குத்து’ படத்தை குமரி மாவட்டத்துல ஷூட் பண்ணிட்டிருந்தப்ப அவரோட உதவி இயக்குனராகப்போய்ச் சேர்ந்தேன். பீரியட் ஃபிலிமான அந்தப் படத்துக்கு பழைய காலத்து நாணயங்கள், பாத்திரங்கள்-னு என்னன்னவோ தேவைப்பட்டப்ப அங்கேயும் இங்கேயுமா சுற்றி அரைமணி நேரத்துல ஸ்பாட்ல கொண்டாந்து சேர்ப்பேன். இதைப் பார்த்துட்டுத் தன்னோட அடுத்த படத்துக்குக் கலை இயக்குநராக்கிட்டார். ‘நாலு பெண்ணுங்கள்’ படத்துக்காகப் பழைய காலத்து கிணறு செட் போட்டிருந்தேன். நந்திதா தாஸ் கிணத்துல தண்ணீர் இறைக்கிற மாதிரியான சீன். அந்தக் கிணறை உண்மைனு நினைச்சுட்டு சரசரன்னு வாளிய உள்ளே இறக்கிட்டு குனிஞ்சு பார்த்த நந்திதா ஒரு செகண்ட் ஷாக் ஆகிட்டுப் பிறகு, கலகலன்னு சிரிச்சுட்டாங்க. காரணம் வாளியில தண்ணீரை ஊற்றி மேலே அனுப்புறதுக்காகக் கிணத்துக்குள்ளே  தண்ணியோட ஒரு ஆளை இறக்கிவிட்டிருந்தோம். அந்தப் படத்துக்காக நான் போட்ட பழைய காலத்து கிச்சன்களும், வீட்டு முற்றங்கள், பின்வாசல்கள் எல்லாமே அடூர் சாரை ரொம்ப திருப்திபடுத்துச்சு. ஸ்பாட்ல செட்டிங்கைப் பார்த்துட்டு ‘சூப்பரா பண்ணியிருக்கீங்க’ அப்படினு யாருமே என்னை பாராட்டலை. காரணம் கிச்சன், முற்றம் எல்லாமே உண்மைனு நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுதான் எனக்கு கிடைச்ச பெரிய விருதுன்னு நினைக்குறேன். அந்தப் படம் அவருக்கு நேஷனல் அவார்டையும், எனக்கு கேரள அரசின் சிறந்த கலை இயக்குநர் விருதையும் வாங்கி கொடுத்துச்சு. அவர்கூட தொடர்ந்து மூணு திரைப்படங்களும், ரெண்டு ஆவணப்படங்களும் பண்ணிட்டேன். மலையாள சினிமா, தமிழ் சினிமானு பல  தளங்கள்ள இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்துட்டே இருக்குது. ஆனா, எல்லாத்துக்கும் ஓ.கே. சொல்லி கமர்ஷியலா போயி கலையை சமரசம் செய்ற மனநிலையில இல்லை நான்” என்று அழுத்தி நிறுத்தியவர், ”இங்கே எல்லாமே கமர்ஷியலாகிப் போயிட்டே இருக்குது. உண்மையான, உணர்வுபூர்வமான கலைக்கும், கலைஞனுக்கும் வரவேற்பில்லை. பிரஷ்ஷை எப்படிப் பிடிக்கணும்னுகூட தெரியாதவங்களெல்லாம் பெரிய ஓவியரா கொண்டாடப்படுறாங்க. ஓவியத்தோட எந்த ஞானமும் இல்லாத ஒரு யானை, பிரஷ்ஷைப் பிடிச்சுக் கிறுக்கிறதைக்கூட ஆஹோ ஓஹோனு புகழ்ந்து வாங்கிட்டுப் போறாங்க. ஆனா, எங்களோட ஓவியங்களுக்கு இடமேயில்லாம போயிட்டிருக்குது. விற்காமலே இருக்கிறதால பல ஓவியங்களை நண்பர்களுக்கு அன்பளிப்பா கொடுத்துட்டிருக்கேன். ஒவ்வொரு பிரஷ்ஷையும் எப்படிப் பிடிக்கணும் அப்படிங்கிறதுக்கு ஒரு இன்ஜினீயரிங்கே இருக்கு. என்னை பொறுத்தவரைக்கும் நாலு இன்ச் பிரஷ் பிடிச்சு பேட்ச் ஒர்க் இல்லாம அஞ்சு கிலோ ஜனதா செம் அடிக்கத் தெரிஞ்சவன்தான் ஓவியம் வரைய பிரஷ் பிடிக்கணும். இதை நான் உலக சாதனைகள் பண்ணிய ஆணவத்தில் சொல்லலை. இந்தக் கலையைத் தாங்கிப்பிடிக்கிற ஆதங்கத்தில் சொல்கிறேன்” என்று முடித்தபோது அவரது கண்களில் வெப்பம்!

நன்றி விகடன்

 

VISIT OUR GROUP OF DOMAINS

FOLLOW OUR BLOGS BY MAIL TO GET NEW UPDATES IN YOUR INBOX

EDITOR – www.tamilagamtimes. com

CONTACT : tamilagamtimes@post.com

knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS 

 

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL