நமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை?”

”நம் உடலின் ஒவ்வோர் உறுப்பும் நரம்புகளின் தொடர்பில் இருப்பவை. நரம்பும் உடல் உறுப்பும் சந்திக்கும் பகுதியை, நரம்புமுனை என்பர். இந்த நரம்பு முனைதான் வலி, குளிர், வெப்பம் போன்ற அனைத்து செய்திகளையும் மூளைக்குக் கடத்தும். நகம் மற்றும் முடிகளின் மேல் பகுதி, இந்த நரம்பு முனையுடன் தொடர்பில் இருப்பது இல்லை. ரத்த நாளங்களும் இங்கே கிடையாது. எனவே, இவற்றை மேலாக வெட்டும்போது வலிப்பது இல்லை. ஆனால், நகம் மற்றும் முடியின் அடிப்பகுதி, நரம்புகளுடன் தொடர்பில் இருப்பவையே. எனவேதான், நகத்தைக் கொஞ்சம் அதிகமாக வெட்டினாலோ, தலைமுடியைப் பிடித்து இழுத்தாலோ வலி ஏற்படுகிறது.’

”அன்புள்ள ஜீபா… மடிக்கணினியைக் கண்டுபிடித்தது யார்?”

  சி.கே.ஆர். பிரதீப், போச்சம் பள்ளி.

”லண்டனைச் சேர்ந்த பில் மாக்ரிட்ஜ் (Bill Moggridge) என்பவரே மடிக்கணினியை முதன்முதலாக வடிவமைத்தார். பில் மாக்ரிட்ஜ், லண்டனில் உள்ள சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் டிசைனில் பட்டப் படிப்பை முடித்தார். தலைசிறந்த கணினி வடிவமைப்பாளராக விளங்கிய மாக்ரிட்ஜ், ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்டில் (Royal College of Art in London)பேராசிரியராகவும் பணியாற்றினார். கிரிட் காம்பஸ் (Grid Compass) என்ற பெயரில் 1979ல் முதல் மடிக்கணினியை உருவாக்கினார்.   1982ல் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது இதன் விலை, 8,150 அமெரிக்க டாலர்கள்.’

”டியர் ஜீபா… வலிப்பு எப்படி உருவாகிறது? வலிப்பு வந்தவர் கையில் இரும்பைக் கொடுத்தால், சரியாகிவிடும் என்பது  உண்மையா?”

வி.சுரேஷ், நரசோதிப்பேட்டை, சேலம்.

”கைகால் வலிப்பு அல்லது காக்கா வலிப்பு என்று சொல்லப்படும் வலிப்பு வரும்போது, கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். இந்த நேரத்தில் சுயநினைவை இழக்க நேரிடும். நம் இதயம் துடிப்பதுபோல, நம் மூளையின் நரம்பு செல்களும் செய்திகளைக் கடத்த மின் தூண்டல் செய்யும். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட மூளைத் திசுக்களில் இந்த மின் தூண்டல் அபரிமிதமானதாக உற்பத்தியாகும். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் நம் உடலின் எந்தப் பகுதியை மூளை கட்டுப்படுத்துகிறதோ, அதில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மின் தூண்டல், பேச்சைக் கட்டுப்படுத்தும் பகுதியில் தொடங்கினால், அது முகத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கை, தோள், கால் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பகுதிகளுக்கு ஒன்றின் பின் ஒன்றாகப் பரவுகிறது. இதனால் கை, கால் பகுதிகளில் வலிப்பு ஏற்படுகிறது. சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் சகஜநிலைக்குத் திரும்புவார். இந்த நேரத்தில், இரும்புக் கம்பி கொடுத்தால் வலிப்பு குறையும் என்று சொல்வதில் உண்மை இல்லை. வலிப்பு வந்தவரை அழுத்திப் பிடிக்கக் கூடாது. அவர் கையில் அல்லது சட்டைப் பையில் கூரான பொருட்கள் இருந்தால், அதை எடுத்துவிட வேண்டும். வலிப்பு வந்தவருக்கு உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும் என்பதால், அது நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வலிப்பு வந்தவரை ஒருக்களித்த நிலையில் படுக்கவைக்க வேண்டும்.”

”ஹாய் ஜீபா… நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃப்ரட் நோபல் எழுதிய உயில் மிகவும் புகழ்பெற்றதாமே?”

எஸ்.ஜெ.சபரீஷ், மதுரை-10.

”ஆமாம் சபரீஷ். 1833ம் ஆண்டு பிறந்த ஆல்ஃப்ரட் நோபலுக்கு இளம் வயதிலிருந்தே அறிவியலில் ரொம்ப ஆர்வம். இவர், எளிதில் கையாளக்கூடிய டைனமைட்டை உருவாக்கினார். இது, பழங்காலக் கட்டடங்களை இடிக்கும் வேலைகளுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. அதேநேரம், அழிவு சக்தியாகவும் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டது. 1888ல் நோபலின் சகோதரர் காலமானார். பத்திரிகைகளோ, ஆல்ஃப்ரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று நினைத்து, ‘மரண வியாபாரி மரணம்’ என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதைப் படித்து மனம் வருந்திய நோபல், உலகம் முழுவதும் இருந்த 90க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் ரஷ்யாவிலிருந்த எண்ணெய்க் கிணறுகள் அபிவிருத்தி நிறுவனங்களின் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தில் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். பல்வேறு துறைகளில் உலகமே போற்றும் விதத்தில் சிறப்பாக விளங்குபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என உயில் எழுதினார். அவர் கூறியபடியே 1901ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது, நோபல் என்றவுடன் யாருக்கும் மரண வியாபாரி என்ற நினைவு வருவது இல்லை. நோபலுக்குக் கிடைத்த வெற்றி இது.’