‘நீங்கள் எழுதிய விண்ணப்பம் உங்களுக்கு முழு மன நிறைவைத் தருவதாக உள்ளதா..?’

விண்ணப்பம்.

வேலை தேடும் படலத்தின் முதல் அத்தியாயம்.

ஆங்கிலத்தில், ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் இஸ் பெஸ்ட் இம்ப்ரஷன்’ என்று சொல்வார்கள்.

ஏறத்தாழ இதையே தமிழில், ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்று ஏன், எதிர்மறையாகச் சொல்கிறோம்..?

எப்போதுமே, ‘அறிமுகம்’, அருமையாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாலாந்தரத் திரைப் படத்தில் கூட, கதாநாயகனை அறிமுகம் செய்கிற காட்சி, அட்டகாசமாக அமைய வேண்டும் என்று

‘மெனக் கெடுகிற’ காலம் இது. (பிற காட்சிகளைப் பற்றிக் கவலையேபடுவதில்லை என்பது வேறு விஷயம்!)

வாழ்க்கையைத் தீர்மானிக்கிற, வாழ்வின் போக்கையே திசை மாற்ற வல்ல வேலைக்காக விண்ணப்பிக்கிற போது,

உச்சபட்ச கவனம் (‘மேக்சிமம் அட்டென்ஷன்’) தேவையா இல்லையா..?

சுய முன்னேற்றப் பயிலரங்கு (‘வொர்க்க்ஷாப்’) நடத்துகிற ஒவ்வொரு முறையும், பயிற்சியாளர்களை,

விண்ணப்பம் எழுதச் சொல்லிக் கேட்பது எனது வழக்கம்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

அநேகமாக எல்லா இடங்களிலுமே மிகப் பெரும்பாலான இளைஞர்கள் (இளைஞிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஒருவரை ஒருவர், பார்த்து, கேட்டு, அரை குறையாக ‘ஒருவழியா’ எழுதி முடிப்பதையே காண முடிகிறது.

இந்தப் பயிற்சியின் நிறைவில், நான் தவறாமல் எழுப்பும் கேள்வி –

‘நீங்கள் எழுதிய விண்ணப்பம் உங்களுக்கு முழு மன நிறைவைத் தருவதாக உள்ளதா..?’

‘இல்லை’ என்பதுதான் பொதுவான பதிலாக இருந்து இருக்கிறது.

தனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில் கூட தெளிவு இல்லையென்றால் எப்படி..?

“மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்.” என்று பாரதி கேட்பதைப் படித்தோ அல்லது கேட்டோ இருக்கிறோம். எந்த அளவுக்குத் தெளிவுடன் ‘கேட்கலாம்’ என்பதற்கு, பாரதியின் பாடல் ஒரு…. ‘அல்டிமேட் எக்சாம்பிள்’.

(பாரதியின் இந்தப் பாடலை, மனனம் செய்யுங்கள். மனதில் உறுதி பிறக்கும்; வாக்கினிலே இனிமை உண்டாகும்.)

நாம் ‘அளந்து’ கேட்டால்தானே, எதிரில் இருப்பவர், ஆர்வத்துடன் கேட்பார்..?

அதற்கு, நமது விண்ணப்பம் எப்படி இருக்க வேண்டும்…? ‘சும்மா, நச்சுனு இருக்கணும்’.

விண்ணப்பம் எழுதுகிற போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன..?

‘சுய குறிப்பு’ (‘பயோ டேட்டா’) தனியாக இணைக்கப் போகிறோமா..? ஆம் எனில், விண்ணப்பத்தில் இக் குறிப்புகள்,

தேவையில்லை. இல்லை எனில்..? மொத்த ‘பயோ டேட்டா’வையும், எழுதிக் கொண்டு இருக்க வேண்டாம்.

வேலைக்குப் பொருத்தமானவற்றை மட்டும் சொன்னால் போதும்.

அடுத்து – விண்ணப்பத்தின் ‘நீளம்’.

பக்கம் பக்கமாக வரைந்து தள்ளக் கூடாது.

(நீங்க வேற.. அரைப் பக்கம் எழுதறதுக்கே, மூச்சு திணறுது. இதுல எங்க இருந்து, பக்கம் பக்கமா எழுதறது…?)

ரத்தினச் சுருக்கமாக எழுதுதலும் பேசுதலும் அத்தியாவசியம். (‘அனாவசியம்’ என்று படித்து விடாதீர்கள்!)

பொதுவாக நாம் மிக அதிகம் பேசுகிறோம்; மிகக் குறைவாகத் தெரிவிக்கிறோம். (‘வீ ஸ்பீக் மச் மோர்; கன்வே மச் லெஸ்’) தமிழில் உள்ள பொழுபோக்கு டி.வி. சானல்களின் மோசமான பாதிப்பு இது.

‘இதைச் சொல்ல வேண்டியது அவசியம்தானா..? என்று, உறுதி செய்து கொண்டு எழுதுவது உத்தமம்.

சொல்லாமல் விட்டதைக் காட்டிலும், சொல்ல வேண்டாததை சொல்வதால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்.

சரியான சொற்தேர்வு; முறையான வாக்கிய வடிவமைப்பு; கவனமாகப் பத்தி (‘பாரா’) பிரித்தல் ஆகியன,

விண்ணப்பம் எழுத மட்டும் அல்ல; எந்தக் கடிதப் போக்குவரத்துக்குமே இன்றியமையாதன.

எந்தப் பணிக்கு, எதைச் சுட்டிக் காட்டி (‘ரெஃபரன்ஸ்’) விண்ணப்பிக்கிறோம் என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுவது நல்லது.

இனி, விண்ணப்பம் எழுதுவோமா…?

முதலில், எதற்கான விண்ணப்பம் என்பதை ஒரு வரித் தலைப்பாக… ‘Application for the Post of …………… ‘ குறித்து விடலாம்.

‘அனுப்புதல்’, ‘பெறுதல்’ என்கிற துணைத் தலைப்புகள் வேண்டாமே…?

விண்ணப்பதாரரின் பெயர் – மேலே, இடது கோடியில். அதற்கு நேரே, வலது கோடியில், முகவரி.

(தொடர்புக்கான தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியுடன்)

சிறிது இடைவெளி விட்டு, யாருக்கு விண்ணப்பிக்கிறோமோ, ‘அவரது பெயர்’ அல்ல; ‘அவரது பதவியின் பெயர்’ மற்றும் ‘சிறிய’ முகவரி. உதாரணத்துக்கு, HR Manager, M/s. ABCDEFGH Ltd, Chennai என்று எழுதினால் போதுமானது. (கதவு எண்,

எந்த ‘பில்டிங்’, எத்தனாவது ‘ஃப்ளோர்’, எந்தத் தெரு… எதுவும் தேவையில்லை. இவையெல்லாம், அஞ்சலில்/ கூரியரில் அனுப்பும்போது, உறையின் மீது எழுதுவதற்கு மட்டும்தான். உள்ளே, விண்ணப்பத்தில் எழுதுவதற்காக அல்லவே அல்ல.)

பொதுவாக, ‘ஐயா / அம்மையீர்’ (Sir / Madam) என விளித்தால் போதுமானது. சில சமயங்களில், ‘மதிப்புக்குரிய’ (respected)

சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை.

ஏற்கனவே, தலைப்பில் எந்தப் பணிக்கான விண்ணப்பம் என்பதை எழுதி விட்டதால், மீண்டும் ஒரு முறை,

‘பொருள்’ (subject) என்று தனியே குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது இல்லை.

நேரடியாக, ‘விஷயத்துக்கு’ வந்து விடலாம். ஆனாலும், நாகரிகம் கருதி, ‘Greetings’ கூறித் தொடங்குவதும் நல்லதுதான்.

தமிழில் ‘வணக்கம்’, ஆங்கிலத்திலும் ‘VaNakkam’ என்று எழுதுங்கள் என்று நான் வலியுறுத்துவது உண்டு. ‘Namaskar’, ‘Namasthe’

என்று எழுதுவது இல்லையா…? அதேபோல ‘VaNakkam’ என எழுதலாம். இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

(‘வணக்கம் என்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்….’ என்பதெல்லாம், பேசும் போது கூட, சத்தியமாக வேண்டாம்.)

அடுத்த ‘பாரா’வாக, இந்த விளம்பரம்/ அறிவிக்கை என சுட்டிக் காட்டி, விண்ணப்பிப்பதாகக் கூறலாம். (This is with reference to your advt dt …..) ஒரே ஒரு வரியாக இருந்தாலும் பரவாயில்லை. அத்துடன் அந்த ‘பாரா’ முடிந்தது.

இப்பொழுதுதான், மிக முக்கியமான கட்டத்துக்கு வருகிறோம்.

நாம் விண்ணப்பிக்கிற பணிக்கான, கல்வி / பிற தகுதிகள் இருப்பதை, எடுத்த எடுப்பிலேயே

தெளிவாக எடுத்துச் சொல்லி விட வேண்டும்.

உதாரணத்துக்கு, ‘நூலகர்’ பணிக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால், ‘நூலக அறிவியல்’ (Library Science) படிப்பு மற்றும் அது சார்ந்த அனுபவம் இருப்பதை, கட்டாயம் இங்கே சொல்லி விட வேண்டும்.

(பலர் செய்கிற தவறையும் பார்ப்போம். தான் பத்தாம் வகுப்பு படித்த பள்ளியின் பெயரில் ஆரம்பித்து, வரிசையாய் சொல்லிக் கொண்டே வந்து, நூலக அறிவியல் படிப்புக்கு வருவதற்குள், அந்தப் பக்கமே நிரம்பி இருக்கும். வேண்டாமே….!)

விண்ணப்பிக்கிற பணி சார்ந்த அனுபவம் இருந்தால் மட்டுமே, குறிப்பிடுதல் நலம்.

அதற்குச் சற்றும் தொடர்பில்லாத அனுபவத்தை சொல்லாமல் விடுவதே நன்மை பயக்கும்.

அனுபவத்தைப் பற்றிச் சொல்கிற போது, அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிற விதத்தில், பணி புரிகிற/ புரிந்த

நிறுவனத்தின் பெயர், முகவரி, வகிக்கிற/வகித்த பணி, பெறுகிற/ பெற்ற சம்பளம் ஆகிய விவரங்களைத் தருதல் நல்லதுதான். இயன்றவரை சுருக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர் பற்றிய, தான் படித்த பள்ளி, கல்வி பற்றிய, தனது ஊர் பற்றிய விவரங்கள் தேவையில்லை.

மிக நிச்சயமாகத் தேவை (absolutely essential) என்று தோன்றினால் அன்றி, கல்விக்கு ‘அப்பாற்பட்ட’ செயல்பாடுகள் (extra-curricular activities) மற்றும் பொழுதுபோக்கு பழக்க வழக்கங்கள் (habits) போன்ற விவரங்கள் தேவை இல்லை.

பல மொழிகள் தெரிந்து, அதைச் சொல்வதால் எதுவும் ‘ஆதாயம்’ (advantage) இருக்கும் என்று தோன்றினால், சொல்லலாம்.

ஆனால், தமிழும் ஆங்கிலமும் தெரியும் என்று ‘பீற்றிக் கொள்ள’ வேண்டாம். காரணம், இவை தெரியும் என்பதை விடவும், பிற மொழிகள் எதுவும் தெரியாது என்கிற ‘உண்மை’தான் பளிச்சென்று போய்ச் சேரும்.

‘தங்களின் கனிவான கவனத்துக்கு சமர்ப்பிக்கிறேன்’ (submitted for your kind consideration) என்று சொல்லி முடித்து விடலாம். ‘Awaiting your positive response’, ‘ஒரே ஒரு சான்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னா, சும்மா ஜமாய்ச்சிப்புடுவேன்..’ என்பதான

‘பில்ட்-அப்’ எல்லாம், சற்றே ‘ஓவர்’. தவிர்க்கலாம்.

நன்றி! (மீண்டும் அதுவே. ‘நன்றி சொல்லக்கடமைப்பட்டு இருக்கிறேன்’. ஊஹூம். ‘நன்றி’. அம்புட்டுதேன்.)

‘அன்புடன்’ ‘பணிவன்புடன்’ ‘தாழ்மையுடன்’ ‘தங்கள் உண்மையுள்ள’ எது தோன்றுகிறதோ எழுதுங்கள்.

பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இது ஒரு மரபு அவ்வளவுதான்.

கையெழுத்திட்டு, அனுப்பிவிட வேண்டியதுதான்.

விண்ணப்பம் எழுதுவதில் இரண்டே வழிகாட்டு நெறிமுறைகள்தாம்.

சுருக்கமாக இருக்க வேண்டும். சுயமாக இருக்க வேண்டும்.

இனி, சுய குறிப்பு (பயோ-டேட்டா)!