பனி பெய்து குளம் நிறையுமா ?

‘சம கால தேவைகளும் – தீர்க்கமான சிந்தனை திறன்களும் இணைந்துதான் நிறைவான – நிலையான சமூக / அரசியல் தீர்வு சமன்பாடுகளை எட்ட இயலும்.’ வின்ஸ்டன் சர்ச்சலின் சிந்தனை துளி . இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் , அரசியல் சுதந்திரம் அடைவதன் சமகால அவசியமும் – நம் புவியியல் சார்ந்த பண்பாடும் , நாகரீக பரிணாம வளர்ச்சியும் கொண்ட நம் இன மக்கள் கொண்டே நாம் நம் அரசியல் நிர்ணய சபைகளை நிறுவ வேண்டும் என்ற தீர்க்கமான சிந்தனை திறன் கொண்ட தலைவர்களும் இணைந்துதான் இந்திய அரசியல் சுதந்திர போராட்டம் வரலாற்று பதிவு பெற்றது.
சமகால தேவையான தூய்மையான அரசியல் சூழலை உருவாக்க, நம் தலைநகரில் தற்சமயம் ஆட்சியில் அமர்ந்துள்ள ‘அம் ஆத் மி’ கட்சி ஆட்சியை எட்டிய வழிமுறையை நம் இணையம் அரசியல் ஆய்வு பார்வையோடு அலசுகிறது.
கால்பந்தாட்டத்தில், ஒரு அணி வீரர்கள் அனைவரும் பந்தை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்ல போராடினாலும் , ஒரு வீரர் மட்டுமே கோல் போட முடியும். அவர் மட்டுமே முன்னிலை பெறுவார். அந்த வகையில் தலைநகரில் அன்னா ஹசாரேவோடு எத்தனையோ இயக்கங்கள் சேர்ந்து போராடினாலும் , அர்விந்த் கெஜ்ரிவால் மட்டுமே முன்னிலை பெற்றார்.
போதிய கால அவகாசம் இல்லாமல் ஒரு ஆட்சியை அரசியல் ஆய்வு செய்தால் , அந்த ஆய்வின் அடிப்படை நியாயங்கள் சந்தேகிக்கப்படலாம். ஆனால், ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்த கட்சியின் தலைவரும் – டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றிய சில தீர்மானங்கள் நம்மை சிந்திக்க வைத்தது.
‘ஆட்சி மாற்றமும் – மக்கள் வாழ்வில் ஏற்றமும்’ என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தார்கள். லோக்பால் சட்டம் – லோக் ஆயுக்தா – ஊழல் ஒழிப்பு… என அவர்கள் அறிவிப்புகள் நீள்கிறது.

இந்திய இராணுவ பயிற்சியில், அதிகாலையில் உடற்பயிற்சி செய்ய வரும் பயிற்சி வீரர்கள், சுத்தம் செய்து – வெள்ளை பாலீஷ் செய்யப்பட்ட விளையாட்டு காலணிகளை அணிந்து வரவேண்டும் என்பது இராணுவ விதி. ஆனால், பயிற்சியின் அடிப்படை புரியாத வீரர்கள் காலணிகளை சுத்தம் செய்யாமல் வெறும் வெள்ளை நிற பாலீஷ் மட்டும் காலணியில் இட்டு – சுத்தம் செய்தது போல் காட்டியிருப்பார்கள். காலணியை சுத்தம் செய்யாமல் வெறும் வெள்ளை பாலீஷ் மட்டும் இடுவதால் ஆரோக்கியமான சுகாதாரம் கிடைக்காது என்பதை அறிந்திராதவர்கள் செய்யும் தவறு இது.
அடிப்படை காரணிகளை ஆராயாமல் கூறப்படும் தீர்வுகள் பலனளிக்காது அல்லவா ?

அண்மையில் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்த ஒரு ஆணை இப்படித்தான் நம்மை சிந்திக்க வைத்தது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றிய தகவல்களை தெரிவிக்க ஒரு தொலைபேசி எண்ணை அறிவித்தார். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு லஞ்சம் பற்றிய புகார் தெரிவித்தால் , அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பார்களாம்.

ஆயிரம் பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமத்திற்கு , ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு லாரி குடிநீர் அரசாங்கம் விநியோகம் செய்கிறது என வைத்துக்கொள்வோம். ஒரு நபருக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் கிடைக்கும். இந்த அளவு போதாது என நினைக்கும் ஒரு குடிமகன் தனது நியாயமான தேவையை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி தண்ணீர் கூடுதல் பெறலாம் அல்லது அந்த லாரியின் ஒட்டுநரிடம் பணம் கொடுத்து மற்றவர்களுக்கு சேர வேண்டிய தண்ணீரையும் தனக்கே வந்து சேருமாறு செய்யலாம். இந்த இடத்தில் லஞ்சம் வாங்கும் / கொடுக்கும் சூழல் உருவாக காரணம் என்ன என ஆராயமல் , லஞ்சம் பெறும் நபரை பற்றி அரசாங்கத்திடம் புகார் கொடுங்கள் என அறிவித்தால், லஞ்சம் தீருமா என்பதுதான் ஆய்வு பார்வை.
டில்லியில் காந்திய வழியில் அறப்போராட்டம் செய்த அன்னா ஹசாரேவை முன்னிலைப்படுத்தி , தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி ஆட்சியை பிடித்தார் அ.கெஜ்ரிவால். .
ஆனால், அதே டெல்லியில் 1985 – ல் , ஒரு தென்னிந்திய இளைஞர் தன் 16 -வது வயதில், டில்லி ‘தீன் தயாள் உபாத்யா மார்க்கில்’ காந்திய சிந்தனைகளோடும் – நேர்மறை எண்ணங்களோடும் தன் பேச்சாற்றலால் பரிசு பெற்றார். அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த திரு. அவனி மாடசாமி. அன்று அங்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்பு ‘ இன்றைய அரசியல் சூழலில் காந்தி உயிருடன் இருந்தால் என்ன செய்வார் ? வந்திருந்தவர்களில் இவர் மட்டுமே நேர்மறை சிந்தனைகளோடு பேசி பரிசு பெற்றார்.
வெறும் பேச்சாற்றலால் கருத்து பிரியர்களை மட்டுமே உருவாக்குவதில் உடன்பாடில்லாததால் தன் 13 வது வயதில் பொது வாழ்வில் ஈடுபட்ட இவர் 1987 – ல் ‘தமிழக மாணவர் கழகம்’ என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் மூலம் களப் பணியாளர்களை உருவாக்கினார்.
புரட்சி வீரர் சேகுவாரா , தன்னை அடைத்து வைத்திருந்த பள்ளிக் கூடத்தை தூய்மை செய்யும் பணியை தன்னுடைய இறுதி ஆசையாக கேட்டு செய்து முடித்தார். இது போன்ற இலட்சியத்தை நோக்கங்களாக கொண்ட ‘தமிழக மாணவர் கழகம் ‘ மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி – சாலை வசதி – பள்ளி சீரமைப்பு – பேருந்து வசதி இவைகளை பெற்றுத் தர மாணவர்களை களமிறக்கி போராட செய்தது குறிப்பிடத்தக்கது.
சமுதாய மாற்றங்களினால் மட்டுமே தூய்மையான அரசியல் சூழலை உருவாக்க இயலும் என்ற கோட்பாடினால் அவர் தொடந்து 1993 – ல் மதுரையில் ‘ மதுரை இலக்கிய மன்றம்’ என்ற அமைப்பினை உருவாக்கினார். இதன் மூலம் சமுதாய சிந்தனைகளை பட்டி மன்ற வடிவில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்புரை செய்தார்.

1995 -ல் திரு. சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது , மதுரையில் திரு. அவனி மாடசாமி நடத்திய பட்டி மன்றத்தின் தலைப்பு ‘ தேர்தல் முறைகேடுகள் பெருக காரணம் பொது மக்களா ? அரசியல்வாதிகளா ? ‘. 20 வருடங்களுக்கும் மேல் சமகால – சமுதாய சிந்தனைகளை பல்வேறு தலைப்புகள் கொண்டு , பட்டி மன்றங்கள் மூலம் தமிழகமெங்கும் பரப்புரை செய்கிறார். அவருக்கு உறு துணையாக மதுரை இலக்கிய மன்றத்தில் , சிந்தனை வளமும் – பேச்சாற்றலும் கொண்ட வழக்கறிஞர் கண்ணன், புலவர் மு. சோமன் , பேராசிரியரும் – வரலாற்று புதின எழுத்தாளருமான மு. பெர்னாட்சா போன்றவர்கள் உறுதுணையாக களத்தில் நின்று வருகிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் ஒரு காவல் துறை உயர் அதிகாரி அவனி மாடசாமியை பற்றி பேசும்போது கூறினார், ” தம்பி, நீங்கள் உங்கள் உழைப்பிற்கும் , சிந்தனை ஆற்றலுக்கும் நீங்கள் அரசியலில் அடைய வேண்டிய நிலையே வேறு. ஏன் உங்களால் இது வரை முடியவில்லை’ எனக் கேட்டார். அதற்கு , ‘ எனக்கு அந்த தகுதி இல்லை . தனி மனித துதியும் , சமூக விரோதிகளின் கூட்டோடு செய்யும் தந்திரங்களும்தான் இன்றைய அரசியலில் முன்னேறுவதற்கான தகுதிகளாக பெரும்பாலும் கருதப்படுகிறது. எனக்கு அந்த தகுதி இல்லை ‘ என்றார்.

சமீபத்தில் மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நீதிபதி ஒருவர் உரையாற்றும்போது தனது உரையில் , “தம்பி அவனி மாடசாமி போன்றோர்கள் மாணவர் பருவத்திலேயே மக்கள் தலைவராக திகழ்ந்தவர். அவர் அடைந்திருக்க வேண்டிய உயரத்தை இன்னும் எட்டவில்லைதான், எனினும் இந்த சாதி கட்டுமான – வர்க்க போராட்டம் நிறைந்த சமுதாய களத்தில் இன்னும் தன்னம்பிக்கையோடு உழைத்து மக்கள் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது ” என்றார்.

2010 – ஆம் ஆண்டு ZEE தமிழ் தொலைகாட்சி மூலம் கல்லூரி இளைஞர்களுக்கான ஒரு நிகழ்ச்சி தயாரித்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘ ஞாயிறு பட்டி மன்றம் ‘ . இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டிலுள்ள பெரும்பான்மையான கல்லூரி மாணவர்கள் பங்கெடுத்தனர். இளைஞர்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் மேடையாக ஆக்கியதை பாராட்டி 2012 ஆம் ஆண்டு ‘தினத்தந்தி ‘ நாளிதழின் வருட மலரில் ‘எட்ட இருந்த பட்டி மன்றங்களை , மக்களின் கிட்டே வரச் செய்த மாற்றத்தை தந்த நிகழ்ச்சி என எழுதியது.

அதே ஆண்டிலிருந்து அவர் இணைய தளம் மூலமும் தன் கருத்துக்களை கூற ஆரம்பித்தார். www.tamilagamtimes.com இணைய தள ஆசிரியராக இருந்து தன் கருத்துக்களை பதிவு செய்தார். இணையம் மூலம் அவர் கருத்துக்கள் தமிழர்கள் வாழும் 11 நாடுகளில் சென்றடைந்திருக்கிறது.

சமுதாய சிந்தனைகளோடு கூடிய களப்பணியில் இவர் தன் பொது வாழ்க்கையில் கால் நூற்றாண்டுக்கும் ( 32 ஆண்டுகள் ) மேலான காலங்களை கடந்து வந்துள்ளார்.
இவரை போன்ற அறவழி செயற்பாட்டாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கல்லூரி மாணவர்களும் – பொதுமக்களும் விரும்புகிறார்கள்.
பனி பெய்து குளம் நிறையாது என்பதால் , அவனி மாடசாமி போன்றவர்களின் ஆற்றல் எனும் அறமழை பெய்து சமுதாய – அரசியல் க(கு)ளங்கள் நிரம்பட்டும்.
திரு. அவனி மாடசாமி அவர்களை அரசியல் களத்திற்கு வரவேற்க எழுதுங்கள் : editor@tamilagamtimes.com

கட்டுரையாளர்- தாமிரபரணி