பனை மரத்தை வெட்டினால் ஜெயில்தான்!

[wysija_form id=”1″]

 சில பொருளுங்க நமக்கு சுலபமா கிடைக்கிறதால, அதோட மகிமையை நாம புரிஞ்சுக்கிறதில்ல. அந்த வரிசையில பனை மரத்துக்கு முதலிடம் கொடுக்கலாம். பனை மரம் மட்டும் இல்லாம போயிருந்தா… நம்ம தமிழ்த் தாத்தாக்கள் கண்டுணர்ந்த அறிவியல் உண்மைங்க, பயன்படுத்தின மருத்துவ முறைங்க, பாடிப் பரவசப்பட்ட இலக்கியங்க எல்லாம் காத்துலயே கரைஞ்சி போயிருக்கும். பனை ஓலைனு ஒண்ணு கிடைச்சதால, அதையெல்லாம் எழுதி வெச்சாங்க. அதனால  தான் காலம் கடந்தும் அந்த விஷயங்கள் எல்லாம் நம்மகிட்ட வந்து சேர்ந்து, நாமளும் பயன்படுத் திட்டிருக்கோம்.

‘சரி, இந்த ஓலைச்சுவடி தவிர, பனை மரத்துல அதிகபட்சமா என்ன கிடைக்கும்? நுங்கு, பதநீர், பனைவெல்லம் இவ்வளவுதானே’னு நினைக்கலாம். ஆனா, பனை மூலமா 80 பொருட்களும், 800 விதமான பயன்களும் கிடைக்குதுங்க. அட ஆமாங்க… ‘தால விலாசம்’ங்கிற பழங்கால நூல்ல இதைப் பத்தி விரிவா எழுதி வெச்சிருக்காங்க. பனை மரத்தை கற்பக விருட்சமா போற்றிப் பாதுகாத்த காலமும் நம்ம மண்ணுல இருந்திருக்கு. இப்பவும்கூட இலங்கையில பனை மரத்துக்கு ராஜ மரியாதைதான். பனை மரத்தை வெட்டினா, ஜெயில்ல போட்டு அடைக்கிற சட்டம், 1993-ம் வருஷத்துல இருந்து அங்க நடைமுறையில இருக்கு.

நம்ம நாட்டுல சாதாரண மக்கள் தொடங்கி, நாட்டை ஆண்ட மன்னன் வரையிலும் பனை மரத்தோட இணைஞ்சுதான் வாழ்ந்திருக்காங்க. சேர மன்னருங்க, பனம் பூவைத்தான் மாலையா கட்டி சூடிக்குவாங்களாம். இன்னும் கூட கிராமத்துல இருக்கிற சிறுதெய்வங்களுக்கு காதோலை… பனை ஓலையில செய்து வைக்கிற பழக்கம் இருக்கு. பழநி பஞ்சாமிர்தத்தோட சுவைக்கு முக்கிய காரணம் பனங்கல்கண்டுதாங்க. பனங்கல்கண்டு போட்டு முறைப்படி செய்யுற பஞ்சாமிர்தம், ஒரு வருஷம் வரையிலும்கூட கெட்டுப் போகாம இருக்கும். சித்தர்கள் பஞ்சாமிர்தத்தை தயாரிக்க சூத்திரமே எழுதி வைச்சிருக்காங்க. அதுல மலை வாழைப்பழம், பனங்கல்கண்டு, தேன் ….னு பல விதமான பொருட்களை சேர்க்க சொல்லறாங்க. அந்த முறைப்படி தயாரிச்ச  பஞ்சாமிர்தத்தைச் சாப்பிட்டா… நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பழநி மலைக்குப் போயிட்டு வந்தா உடம்பு சுறுசுறுப்பா இருக்குனு சொல்றதுக்குப் பின்னாடி, பஞ்சாமிர்தம் நிக்குது. மருத்துவக் குணம் கொண்ட, பஞ்சாமிர்தம் பழநியில கிடைக்குதுனு சொன்னா… எத்தனை பேர் போய் வாங்கி சாப்பிடுவோம். அதனாலதான், சாமி… சித்தர்… இப்படியெல்லாம் பலமாதிரி சொல்லி, பழநி பஞ்சாமிர்தத்தைச் சாப்பிட வெச்சிருக்காங்க.

தமிழ்நாட்டுல பழமையான கோயில்கள்ல தல விருட்சம் இருக்கு. தல விருட்சமா சந்தனம், மருதுனு அரிய வகை மரங்கள் இருக்கும். ஏன்னா, கோயில்ங்கிறது காலம், காலமா பாதுக்காக்கப்படற இடம். அங்க அரிய பொருளை வெச்சுட்டா, அழிஞ்சி போகாம இருக்கும். அதனாலதான், கோயில்ல தல விருட்சத்தை வளர்க்க ஆரம்பிச்சாங்க. சில கோயில்கள்ல தல விருட்சமா பனை மரம் இடம் பிடிச்சிருக்கு. இந்தக் கோயில்களுக்கு ‘தாலப்புரீஸ்வரர்’னு பேரு உண்டு. அப்படினா… சந்தன மரத்தை போலவே, பனை மரமும் மதிப்பு வாய்ந்ததுனு சொல்லித் தானே கோயில்ல வளர்த்திருப்பாங்க? இந்த நுணுக்கம் தெரியாம, வேலியில முளைச்ச மரம் தானேனு செங்கல் சூளைக்கு வெட்டி அனுப்பிட றோம்.

பனை மரத்தை வெறும் மரமா பார்க்காதீங்க. நம்ம முன்னோர்களோட  உயர்ந்த மனசுதான், பனை மரமா வளர்ந்து நிக்குது. பனை மரத்தை நடவு செய்யும்போது, அந்த மரத்தோட பலனை நடவு செய்யறவரு அனுபவிக்க முடியாது. காரணம், பனை மரம் பலன் கொடுக்க முப்பது, நாப்பது வருஷம்கூட ஆகும். அதைப்பத்தி கவலைப்படாம… எனக்கு பலன் கிடைக்காட்டா என்ன… என்னோட சந்ததிகளுக்கு இந்த மரம் உதவுமேனு சொல்லித்தான் நடவு செய்வாங்க. ஆக பனை மரம்ங்கிறது ‘தன்னலமில்லா சேவையின் சின்னம்’னு கூட சொல்லலாம். இவ்வளவு சிறப்பு கொண்ட பனை மரம்தான் நம்ம தமிழ்நாட்டு அரசாங் கத்தோட மரமா இடம் புடிச்சிருக்கு. தேசிய விலங்கான புலியைக் காப்பாத்தறதுக்கு சிறப்புத் திட்டம் போட்டிருக்கிற மாதிரி, தமிழ் மக்களோட பெருமையைச் சுமந்து நிக்குற பனையைக் காக்கவும் சிறப்புத் திட்டம் போடணும். இல்லைனா, கொஞ்ச வருஷத்துலயே புலிங்க மாதிரியே, பனைகளோட எண்ணிக்கையும் இறங்க ஆரம்பிச்சுடும்.

தென்னை ஓலையில கொட்டகை போட்டு குடியிருந்தா, குளுகுளுனு இருக்குங்கிற விஷயம், ஊரறிஞ்ச விஷயம். ஆனா, பனை ஓலை மகத்துவத்தை அதை அனுபவிச்சவங் களுக்குத் தான் தெரியும். பனை ஓலையில மேல் கூரைப் போட்டா, அந்த வீட்டுல குளிர் காலத்துல கதகதப்பா இருக்கும். வெயில் காலத்துல குளுமையா இருக்கும். தென்னை ஓலையைவிட, கூடுதலா பல வருஷம் உழைக்கக் கூடியது பனை ஓலை. இதுமட்டும்மா… ஒண்ணுக்கும் உதாவதுனு கழிச்சு போட்ட, களர் நிலத்தைத் திருத்தறதுக்கு பனை ஓலையை அந்த நிலத்துல புதைச்சு வெச்சா… பொன்னு விளையுற பூமியா பலன் கொடுக்கும்!

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[wysija_form id=”1″]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL