‘பழக்கலாம் வாங்க…!’- பெற்றோருக்கான டிப்ஸ்

ள்ளிகள் திறந்துவிட்டன. இனி, காலையும் மாலையும் பட்டாம் பூச்சிகளாய் பறந்துத் திரியும் நம் குழந்தைகளைக் காப்பதைவிட நமக்கேதும் பெரிய கடமைகள் இருந்துவிடப்போவதில்லை.

படிப்பில் கவனம், விளையாட்டில் ஆர்வம், சக மாணவர்களுடன் நல்ல நட்பு, உறவினர்களிடத்தில் ஒழுக்கம் என அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் பல மைல்கற்களைக் கடக்க வேண்டியிருக் கிறது.

எந்த ஒரு விதத்திலும் தம் பிள்ளைகள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்பதில், அனைத்துப் பெற்றோருமே அவர்கள் மீது அதிக அக்கறையுடன்தான் இருக்கின்றோம்.

அந்த அக்கறை மட்டுமே அவர்களுக்கு உறுதுணையாக இருந்து விடாது. அதையும் தாண்டி அவர்கள் மனதளவில் வலிமை பெற்றவர்களாக விளங்க வேண்டும்.

1) உங்கள் குழந்தையின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான், அவர்களுக்கு நம்பிக்கையான வாழ்க்கைப் பற்றிய தெளிவான சிந்தனையை ஏற்படுத்த தொடங்கும். குழந்தையிடம் தனியாக அமர்ந்து பேசும்போது அடிக்கடி, ‘உன்னால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், உனக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம்’ என்று  சொல்லுங்கள். இதனால், சந்தோஷம், வருத்தம் என எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளும் நெருக்கம் குழந்தைகளுக்குப் பெற்றோரிடம் ஏற்படும்.

2) உங்களைப் போன்றே உங்கள் குழந்தையின் மீது அக்கறையுடனும், பாசத்துடனும் பழகும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரை மட்டுமே அடையாளம் கண்டு அவர்களிடம் சகஜமாகப் பழகவிடுங்கள்.  சிகரெட், குடி போன்ற கெட்ட பழக்கம் உள்ளவர்கள்,  எதிர்மறையாகப் பேசும் நபர்களிடம் குழந்தைகள் இருப்பதைத் தவி ருங்கள். பள்ளியை விட்டு வந்ததும், எப்போதுமே குழந்தையின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

3)  குழந்தைகள் பேசுவதைக் கேளுங்கள். ‘அம்மாவுக்குத் தலைவலி… அப்புறம் பேசலாம்… போய் ஹோம் ஒர்க் பண்ணு’ என்று விரட்டாதீர்கள்.  என்ன சொல்ல வருகிறார்கள் என்று காது கொடுத்து கேட்டு, அதற் கேற்ற அறிவுரைகளைக் கூறிப் புரியச் செய்யுங்கள். குழந்தைகள், ஆர்வத்தோடு முன்வந்து செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் உற்சாகப்படுத்துங்கள். உடனே, தடுக்காதீர்கள். சில குழந்தைகள் பொழுது போக்காக செய்யும் வேலைகள், அவர்களின் வாழ்க்கைக்கே ஒரு பெரிய திருப்புமுணையாக அமையலாம்.

4) ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வெற்றியை  குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடுங்கள். வெற்றி பெறு வதற்காகப் பட்டக் கஷ்டங்களையும், அதிலிருந்து மீண்டு வந்து சாதித்த விஷயங்களையும், சிறப்பு அம்சங் களையும், குழந்தைகளுக்குப் புரிய வைத்து, மேலும் அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருங்கள். தோல்வி என்பது பெரியதாக இருந்தாலும், விடா முயற்சியால் பெறும் வெற்றி நிச்சயம் என்பது குழந்தை களுக்குப் புரியும். தோல்வியைக் கண்டு துவளாமல் இருக்கும்.

5) குழந்தைகளிடம் தினமும் பேசிக்கொண்டேயிருங்கள். அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள், எதிர்காலம், பள்ளியில் நடந்த விஷயங்கள், கோபம், அழுகை, நண்பர்களுக்குள் நடந்த உரையாடல்கள்  என தினமும் பேசுங்கள்.  இதனால், நம் குழந்தை செய்த சரி மற்றும் தவறுகள் புரியும்.  அவர்களை அட்வைஸ் தந்து திருத்த முடியும். நட்பு வட்டாரம், வகுப்பு ஆசிரியர் எனக் குழந்தையின் பள்ளித் தொடர்பான அனைத்து விஷயங்களும் உங்கள் அத்துபடியாக இருக்கும்.  உங்கள் பிள்ளைகள் பற்றிய தெளிவான சிந்தனையும் உங்களுக்குக் கிடைக்கும்.

6) குழந்தைகள் முன்னிலையில் உறவினர்கள், நண்பர்களைக் குறை சொல்வது, திட்டி கிண்டலடிப்பது போன்ற தவறான விஷயங்களை தவிருங்கள். அதே பழக்கம் அவர்களையும் தொற்றிக் கொள்ளும். மேலும் குழந்தைகள், பெற்றோர் குறைக் கூறிய அந்த நபரின் மீது ஒருவித வெறுப்பு உணர்வை ஏற்படுத்திக் கொள்ளும். இதனால் பல்வேறு சங்கடங்கள் உருவாகும்.  உறவு முறிவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.