பாதயாத்திரை… பரவசம்…

தைப் பூசத்திலும் பங்குனி உத்திரத்திலும் கந்தக் கடவுளை வணங்குவது, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பார்கள். பங்குனியில் உத்திரத்தைத் தொடர்ந்து வருகிற உத்திராட நட்சத்திர நாளிலும், முருகப் பெருமானை வணங்குவது சிறப்பு என்கின்றனர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள்.

தைப்பூசத் திருவிழாவின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்குப் பாதயாத்திரையாக வந்து, முருகக் கடவுளை வணங்குவது வழக்கம். ஆனால், பங்குனி உத்திராட நாளில் திருப்பூர் மாவட்டத்தில் விஜயாபுரம், பொன்னுக்காளிபாளையம், அமராவதிபாளையம் முதலான பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பாதயாத்திரையாக பழநிக்கு வந்து, ஸ்வாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் பக்தர்கள்.

”இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலா னோருக்கு முருகப்பெருமான்தான் குலதெய்வம். அதனால் கடந்த 87 வருஷமா பழநிக்குப் பாத யாத்திரையா வந்துட்டிருக்கோம். ஆரம்ப காலத்துல, பங்குனி உத்திரத்தன்னிக்குதான் பழநி மலையேறி, ஸ்வாமி தரிசனம் பண்ணினோம். அன்னிக்குக் கூட்டம் ஏகத்துக்கும் இருக்கிறதால, பங்குனி உத்திர நாள்ல, பவானி கூடுதுறைலேருந்து பாத யாத்திரை கிளம்பறதுன்னு முடிவு பண்ணி, அதன்படியே எங்க யாத்திரை திட்டத்தை மாத்திக்கிட்டோம். அதாவது, உத்திரத்தன்னிக்குக் கிளம்பி, உத்திராடத்தின்போது பழநி மலையேறுவோம்.

பவானி கூடுதுறை, புண்ணிய நதி. அதனால, கலசத்துல புண்ணிய தீர்த்தத்தை எல்லாரும் எடுத்துக்குவோம். அந்தக் கலசத்துக்கு தட்டு வைச்சு மூடி, தேன் மெழுகால அடைச்சிடுவோம். பிறகு, எப்படிக் கவிழ்த்தாலும் தீர்த்தம் வெளியே சிந்தவே சிந்தாது. அந்தக் கலசத்தை அப்படியே துணியால் மூடிக் கட்டிடுவோம்.

விஜயாபுரம், பொன்னுக்காளிபாளையம், அமராவதிபாளையம் ஆகிய மூணு ஊர்லேருந் தும் அந்தந்த ஊர்ல வைச்சு வணங்கற வேல்களைக் கொண்டு வருவோம். முதல்ல, வேல் கொண்டு போவாங்க. அடுத்து, மூணு காவடிகள், அதுக்குப் பிறகு, கலசத் தீர்த்தங்கள்! பவானி கூடுதுறைல வேல், காவடி, தீர்த்தக் கலசம் மூணுக்கும் 16 வகை அபிஷேகம் செஞ்சு, பூஜை பண்ணிட்டுத்தான் பாத யாத்திரையையே ஆரம்பிப்போம்” என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள். ஆரம்ப காலத்தில் 10 பேர் மட்டுமே பாதயாத்திரையாக வந்தார்களாம். இந்த முறை 137 பேர் சென்றிருக்கிறார்கள்.

பவானி கூடுதுறை, பெருந்துறை, ஊத்துக்குளி, விஜயாபுரம், அமராவதிபாளையம், பொன்னுக் காளிபாளையம், தாராபுரம், புளியம்பட்டி என வழிநெடுக உள்ள ஊர்களில் மண்டகப்படி நடைபெறுகிறது. அந்தந்த ஊர்க்காரர்கள், யாத்திரையாக வருபவர்களுக்கு உணவு, தங்குமிடம் முதலானவற்றை வழங்குவார்கள்.

”பாத யாத்திரையாக வருபவர்கள் எப்போதும் ஈரத்துணியுடன் இருக்க வேண்டும். துணி காய்ந்துவிட்டால், மண்டகப்படிகளில் தங்கும் வேளையில், அங்கே உடையுடன் குளித்து விட்டு, ஈரமாக்கிக் கொள்ள வேண்டும்” என்கிறார் தீர்த்தக் காவடிக் குழுவின் தலைவர் சபாபதி.

”யாத்திரை வருபவர்கள் புளியம்பட்டியில் (அங்கே இருந்து பார்த்தால் பழநி மலை தெரியுமாம்) தங்களுடைய கலசங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். முதலில் திருஆவினன்குடிக்குச் சென்று வணங்கிவிட்டு, பிறகு பழநி மலையேறுவார்கள்” என்கிறார் அபிஷேகக் குழுத் தலைவர் ரத்தினம்.

பாத யாத்திரை, கலசம், வேல், காவடிக்கெல் லாம் தினமும் அபிஷேகங்கள், நிறைவாக முருகக் கடவுளின் தரிசனம் என நிகழ்ந்தாலும், முக்கியமாக இன்னொரு விஷயமும் செய் கிறார்கள். அதாவது, பஞ்சாமிர்தம் தயாரித்து வழங்குகிறார்கள்.

மலையில் கோயிலிலும், அடிவாரத்தில் மண்டபத்திலுமாக பஞ்சாமிர்தம் செய்கிறார்கள். உத்திராடத்தன்று கலச தீர்த்தத்தைக் கொண்டு, முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மலையில் – கோயிலில் செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகித்து, பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். அதில் சிறிதளவு கீழே கொண்டுவந்து, மண்டபத்தில் வைத்து அதிகளவில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்துடன் கலந்து, அதையும் பக்தர் களுக்கு விநியோகிக்கிறார்கள். வருடம்தோறும் ஒரு லட்சம் பழங்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிப்பது வழக்கமாம்.

”தேவையான சர்க்கரை (கவுந்தப்பாடி), பழங்கள் (தாண்டிக்குடி) கல்கண்டு (பழநி ), தேன் (கூர்க்) ஆகியவற்றுடன், நெய்யும் சேர்த்துக் கொள்வோம். எல்லா பஞ்சாமிர்தமும் முருகக் கடவுளுக்கும் அவன் பக்தர்களுக்கும் மட்டுமே! பாத யாத்திரையும் பழநியப்பனின் தரிசனமும் பஞ்சாமிர்த நறுமணமும், இந்த வருடம் எங்களை இன்னும் இன்னும் வளமையாக்கும்!” என நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் சபாபதி.

நன்றி விகடன்

FOLLOW OUR BLOG VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

VISIT OUR GROUP OF DOMAINS
EDITOR – www.tamilagamtimes. com
CONTACT : tamilagamtimes@post.com
knowledgeocean2014.blogspot.com FOR E BOOKS IN 75 SUBJECTS

madhuvanthana.wordpress.com FOR ENTERTAINMENT ARTICLES

yazhinimaran.wordpress.com FOR MEDICAL ARTICLES

isaipriyanka.wordpress.com FOR ECONOMICAL ARTICLES

kitchapacha.wordpress.com FOR CURRENT AFFAIRS

kaviazhaku.wordpress.com FOR POLITICAL & SOCIAL ARTICLES

sarumathipappa.wordpress.com FOR STUDENTS

devadharsinivinayagam.wordpress.com FOR AUTOMOBILE

shanthivinayagam.wordpress.com FOR WOMEN

kaviazhakuvinayagam.wordpress.com FOR AGRICULTURE

alagusundari.wordpress.com FOR SPIRITUAL