பிணஞ்சூட்டு தடிகள்

சென்ற வருடம் நமது இதழில் ‘ ஆத்ம (அக) விசாரணை ‘ என்ற, நம் உள்ளத்தை நம் சிந்தனை தூண்டல்கள் மூலம் அறியும் ஒரு அற்புதமான தொடரை வழங்கிய நம் மரியாதைக்குரிய நண்பர் திரு. இராம. வேங்கிட கிருஷ்ணன் அவர்களோடு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் சொரி முத்தையனார் கோவிலுக்கு பயணம் மேற்கொண்டோம். அந்த மலை பயணத்தின் போது அவர் கூறியது இது :

நம் தலைமுறை அரசியல்வாதிகள் பகுத்தறிவு என்ற வாசகத்தை சிதைத்து – அதன் அர்த்தங்களை சூறையாடிவிட்டனர் எனலாம்.

எந்த ஒரு மொழி வகை உருவகமான கருத்துக்களையும் ( SCRIPT BASED IDEALOGY ) – மொழியற்ற உணர்வுகளையும், கால பரிணாம மாற்றங்களோடு – அதன் கருப்பொருள் பகுப்பாய்வு செய்வதுதான் பகுத்தறிவு.

உதாரணமாக , ஒரு இளைஞன் தன் தாத்தா பயன்படுத்திய பேனாவை தன் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் சொந்த கடையின் கல்லாவில் உட்கார்ந்தால் வியாபாரம் பெருகும் என நம்பினால் , உடனே அவன் மூடன் என்றும் , அது எப்படி தாத்தாவின் பேனாவை வைத்து கொண்டால் வியாபாரம் பெருகும் என தர்க்க வாதம் செய்யாமல் , அந்த கருத்திலுள்ள அந்த இளைஞனின் நம்பிக்கையை தர்க்க கருத்துக்களால் விவாத பொருளாக்காமல், அதன் அடிப்படையில் அவன் வளர்ச்சியை மட்டும் திட்டமிடுவதுதான் பகுத்தறிவு.

ஆனால், கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்று கொள்வதுதான் பகுத்தறிவு என்று கருத்தியல் உருவாக்கி – அதன் மறைபொருளாகிய மொழியற்ற உணர்வுகளை அறியாமல் – இவ்வாறு விவாதம் செய்வதையே தங்கள் வாழ்வியல் பொருளாதார தளமாக்கி கொண்டனர் ஒரு பிரிவினர் .

இடுகாட்டில் , பிணங்கள் எரியும்போது அதனருகில் இருந்து பிணத்தின் மீது எரியும் குச்சிகளை ஒழுங்குப்படுத்தி நன்றாக எரியும்படி செய்ய ஒரு தடியை பயன்படுத்துவர் . கடைசியில் , அந்த தடியும் அந்த நெருப்பில் இடப்படும். அதுவும் எரிந்து சாம்பலாகும்.

நம் மூளையில் ஞான தீபத்தை வளர்க்கும் எல்லா கருத்தியல்களும் ஒரு நிலையில் மறைந்து போகும். இதனை உள்ளார்ந்து அறிவதுதான் பகுத்தறிவு ‘ என்றார் .

பாரதியார் தன் ‘நிற்பதுவே…நடப்பதுவே ‘, பாடலில் ‘ கற்றதெல்லாம் கருகுவதேன்…ஞானப்பிழையோ ‘ என பாடுவார் .

‘பிணஞ்சூட்டு தடிகள் ‘ அர்த்தம் நமக்கு புரிந்தது .