பிரபல ஸ்வீட்ஸ்

சந்திரகலா

தேவையானவை:
மாவு தயாரிக்க:
மைதா – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
தண்ணீர்- தேவையான அளவு

பூரணத்துக்கு:
கோவா (சர்க்கரை இல்லாதது) – அரை கப்
பொடித்த சர்க்கரை – கால் கப்
முந்திரிப்பருப்பு – 5
பிஸ்தா – 10
பாதாம் – 5
ஏலக்காய்ப்பொடி – கால் டீஸ்பூன்

பாகு தயாரிக்க:
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – கால் கப்

செய்முறை:
ஒரு பவுலில் மைதா, ஆப்ப சோடா, உப்பு, நெய் ஆகியவற்றை சேர்த்து மணல் மணலாக பிசிறிக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பவுலில் கோவாவை சேர்த்து உதிரியாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விடாமல் முந்திரி, பிஸ்தா, பாதாமைச் சேர்த்து இரண்டு நிமிடம் நிறம் மாறாமல் வறுத்துப் பொடித்து பொடியாக்கிக் கொள்ளவும். பொடியாக்கிய பருப்புகள், பொடித்த சர்க்கரை, ஏலக்காயப்்பொடி ஆகியவற்றை கோவாவுடன் கலந்தால் பூரணம் ரெடி.

இனி, ஊற வைத்த மாவை, எலுமிச்சைப்பழ அளவுக்கு சிறு உருண்டையாகப் பிடிக்கவும். ஒர் உருண்டையை எடுத்து சப்பாத்தியாக ஆனால் நடுவில் சற்று தடிமனாகவும், ஓரங்களை மெல்லியதாக இருப்பது போலவும் தேய்க்கவும். இதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து, மாவின் உள்பக்க ஓரங்களை தண்ணீர் தொட்டு நனைக்கவும். இனி மாவை மூடினால் அரை வடிவ நிலவு போல வரும். மாவின் ஓரங்களை எல்லாம் உள்பக்கமாக மடித்து விட வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தயாராக வைத்திருக்கும் சந்திரகலாவை எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மற்றொரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீரைக் கலந்து, அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு வந்ததும் அடுப்பை அணைக்கவும். தயார் செய்து வைத்திருக்கும் பாகு சூடு ஆறியதும், பொரித்தெடுத்த சந்திரகலாவை அதில் சேர்த்து 10 நிமிடம் ஊறவிட்டு பின்னர் எடுத்துப் பரிமாறவும்.

அதிரசம்

தேவையானவை:
பச்சரிசி – ஒரு கிலோ
வெல்லம் – ஒரு கிலோ
ஏலக்காய் (பொடித்தது) – 8
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – கால் கப்

செய்முறை:
பச்சரிசியை தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, சுத்தமான ஒரு வெள்ளைத்துணியில் அரிசியைப் பரப்பி நிழலில் உலர விடவும். லேசாக ஈரம் இருக்கும் போதே மிக்ஸியில் அரிசியுடன் ஏலக்காயைச் சேர்த்து பொடியாக அரைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் இதனை அடுப்பிலேற்றி உருட்டுப் பதம் வந்ததும் (தண்ணீரில் விட்டால் பந்து போல உருள வேண்டும்) அடுப்பை அணைக்கவும்.

பாகு சூடாக இருக்கும்போதே, மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கிளறவும். இதை மூடி போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு திறந்து கைகளால் நன்கு கிளறி மூடி ஒரு நாள் முழுக்க ஊற விடவும். மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை மிதமாக்கி கொள்ளவும்.
பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இலையில் நெய்/எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து வட்டமாகத் தட்டவும். இதை எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்தெடுக்கவும். இரண்டு தோசைக் கரண்டிக்கு இடையில் அதிரசத்தை வைத்து தேவையற்ற எண்ணெயைப் பிழிந்து விடலாம்.
குறிப்பு:
அதிரசத்துக்கு தேவையான மாவைத் தயார் செய்து இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால், கூடுதல் சுவையுடன் இருக்கும்.

சூரியகலா

தேவையானவை:
மாவு தயாரிக்க:
மைதா – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை
தண்ணீர்- தேவையான அளவு

பூரணம் தயாரிக்க:
கோவா (சர்க்கரை இல்லாதது) – அரை கப்
சர்க்கரை (பொடித்தது) – கால் கப்
முந்திரிப் பருப்பு – 5
பிஸ்தா பருப்பு – 10
பாதாம் பருப்பு – 5
ஏலக்காய்ப் பொடி – கால் டீஸ்பூன்

பாகு தயாரிக்க:
சர்க்கரை – ஒரு கப்
தண்ணீர் – கால் கப்

செய்முறை:
சந்திரகலா ஸ்வீட்டுக்கு செய்த அதே முறைதான் இதற்கும். ஆனால் பூரணத்தை வட்டமாகத் தேய்த்த மாவின் உள்ளே வைத்து உள்பக்க ஓரங்களை தண்ணீரால் தொட்டு தடவவும். இனி, மற்றொரு வட்டமாகத் தேய்த்த சப்பாத்தியை எடுத்து பூரணத்தின் மேலே வைத்து ஒட்டவும். ஓரங்களை எல்லாம் உள்பக்கமாக மடித்துவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தயாராக வைத்திருக்கும் சூரியகலாவை எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மற்றொரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீரைக் கலந்து, அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு வந்ததும் அடுப்பை அணைக்கவும். பாகு சூடு ஆறியதும், பொரித்தெடுத்த சூரியகலாவை அதில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்த பிறகு பரிமாறவும்.

ஸ்வீட் டைமண்ட் கட்ஸ்

தேவையானவை:
மைதாமாவு – 2 கப்
சர்க்கரை – அரை கப்
ஏலக்காய் – 2
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு, மாவு, உப்பு சேர்த்து மணல் மணலாக இருக்குமாறு பிசறிக்கொண்டு, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மிருதுவாக இருக்க வேண்டும். மூடி போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். ஊறிய மாவை மீண்டும் பிசைந்து சப்பாத்தி போல தேய்க்கவும். மாவை டைமண்ட் வடிவங்களாக துண்டுகள் போடவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், தீயை மிதமாக்கி டைமண்ட் வடிவங்களை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொரித்தவற்றின் மீது தூவி விடவும். பிறகு டிஷ்யூ பேப்பரில் வைத்திருந்து சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.

தேங்காய் பர்பி

தேவையானவை:
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய்ப்பொடி – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
பால் (விருப்பப்பட்டால்) – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் தேங்காய்த்துருவல், சர்க்கரை, பால் சேர்த்து மிதமான தீயில் சர்க்கரை உருகும் வரை கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து, தேங்காய்த்துருவலோடு பாலும் சேர்ந்து கலவை ஒன்றாகி பிசுபிசுப்பான தன்மைக்கு வந்ததும், ஏலக்காய்ப்பொடி, நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, அடுப்பை அணைத்து இறக்கவும். தட்டில் நெய் தடவி, தேங்காய்த்துருவல் கலவையை ஊற்றி, சமன்படுத்தி லேசாக இறுகும் போது துண்டுகள் போட்டு ஆறவிட்டு பிறகு எடுத்துப் பரிமாறவும்.

ரவா லட்டு

தேவையானவை:
ரவை – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
முந்திரிப்பருப்பு – 10
உலர்ந்த திராட்சை – 10
ஏலக்காய்ப்பொடி – கால் டீஸ்பூன்
நெய் – 6 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, ரவையைச் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளவும். ரவை ஆறியதும் மிக்ஸியில் சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்ப்பொடி சேர்த்துக் கலந்து கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்யை ஊற்றி, சூடானதும் முந்திரி, உலர் திராட்சையைச் சேர்த்து வறுத்து ஆறவிடவும். இதனை ரவைக் கலவையுடன் சேர்த்துக் கிளறவும். மீதமிருக்கும் நெய்யைச் சூடுப்படுத்தி், கொஞ்சம் கொஞ்சமாக ரவையுடன் கலந்து சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்தால் சுவையான ரவா லட்டு தயார்.

தேங்காய் லட்டு

தேவையானவை:
தேங்காய்த்துருவல் – ஒன்றரை கப்
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – அரை கப்
ஏலக்காய்ப்பொடி – கால் டீஸ்பூன்
பால் (விருப்பப்பட்டால்) – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
ஒரு வாணலியில் தண்ணீர், சர்க்கரையைச் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயார் செய்யவும். இதில் பாலைச் சேர்க்கவும். பாலை சேர்ப்பதால் பாகில் உள்ள தூசு தனியாகப் பொங்கி திரண்டு வரும். அதனை அப்படியே நீக்கிவிட்டு அடு்ப்பை அணைக்கவும். தேங்காய்த்துருவல், ஏலக்காய்ப் பொடியை ஒன்றாக சேர்த்து, அதில் பாகை ஊற்றி, கொஞ்சம் சூடாக இருக்கும்போதே உருண்டைப் பிடித்து ஒரு தட்டில் வைத்தால், சுவையான தேங்காய் லட்டு தயார்.
குறிப்பு: தேங்காய்த்துருவல் கலவையை உருண்டை பிடிக்கும் போது, சூடு குறைந்து சரியாக உருண்டைப் பிடிக்க வராவிட்டால், சிறிது நேரம் கலவையை வாணலியில் சூடுபடுத்தி, பின்னர் உருண்டைப் பிடிக்கலாம்.

கோதுமை அல்வா

தேவையானவை:
கோதுமை மாவு – அரை கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – ஒன்றே கால் கப்
முந்திரி (பொடித்தது) – ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி – கால் டீஸ்பூன்
வெந்நீர் – ஒரு கப்
தண்ணீர் – தேவையான அளவு
ஃபுட் கலர் (ஆரஞ்சு) – சிறிதளவு (விருப்பப்பட்டால்)

செய்முறை:
பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து அதில் வெந்நீரைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இதனை 5 முதல் 7 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்தவற்றில் கட்டிகள் ஏற்பட்டால் அவற்றைக் கைகளால் உடைத்து சரிசெய்ய வேண்டும். ஊறியவற்றை வடிகட்டி பாலையும், சக்கையையும் தனித்தனியாக வடிகட்டி வைக்கவும். வடிகட்டிய பாலை, சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் தூய்மையான பால் மேலே தங்கும். அதை மட்டும் தனியாக ஒரு பவுலில் ஊற்றிக்கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு, முந்திரியை வறுத்துக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில், நீர், சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஒரு கம்பி பதத்துக்கு பாகை தயார் செய்யவும். இதில் ஃபுட்கலர் மற்றும் பிரித்தெடுத்த பாலையும் சேர்த்து அடிப்பிடிக்காதவாறு மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்.  நெய் அல்வா கலவையில் இருந்து பிரிந்து மிதக்க ஆரம்பித்தால் அல்வா பதம் ரெடி என்று அர்த்தம். இத்துடன் முந்திரி, ஏலக்காய்ப்பொடி சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். அகலமான ஒரு தட்டில் சிறிதளவு நெய் தடவி அல்வாவைப் பரவலாக ஊற்றி சின்னச் சின்ன துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
குறிப்பு:
பாகு தயார் செய்யும் போது அதனுடன் ஆரஞ்சு கலர் பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.

ட்ரை ஃப்ரூட் பர்பி

தேவையானவை:
உலர் அத்தி – ஒன்றரை கப்
பேரீச்சை (கொட்டை நீக்கியது) – ஒரு கப்
பாதாம் – அரை கப்
முந்திரி – அரை கப்
அக்ரூட் – அரை கப்
பிஸ்தா – அரை கப்
உலர் திராட்சை – அரை கப்
ஏலக்காய்ப்பொடி – அரை டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி- 2 சிட்டிகை

செய்முறை:
வாணலியில் தண்ணீர் ஊற்றி வெதுவெதுப்பாக சுட வைத்து இறக்கவும். இதில் உலர் அத்தியைச் சேர்த்து 15 நிமிடத்துக்கு ஊற வைக்கவும். பிறகு, நீரை வடிகட்டி அத்தியை ஒரு துணியில் துடைத்துக்கொள்ளவும். முந்திரி, உலர் திராட்சை, அக்ரூட், பிஸ்தா, பாதாம் மற்றும் பேரீச்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வடிகட்டிய அத்தியை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய்யை விட்டு சூடானதும் அத்தி பேஸ்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் பேரீச்சை துண்டுகளைச் சேர்த்து  இரண்டு நிமிடம் கிளறவும். இதில் நறுக்கிய பருப்புகள், ஏலக்காய்ப்பொடி, ஜாதிக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறவும். இதில் நெய்யைச் சேர்த்து தொடர்ந்து கிளறி, கலவை பந்து போல வரும் போது அடுப்பை அணைக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, கலவையைப் பரப்பி ஆறியதும் ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்தெடுக்கவும். பிறகு துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு:
பருப்பு வகைகளைச் சேர்க்கும்போது தேவைப்பட்டால் கசகசா, உலர்ந்த தேங்காய்ப்பவுடர் சேர்க்கலாம்.

இனிப்பு பூந்தி

தேவையானவை:
கடலை மாவு- ஒரு கப்
சர்க்கரை – முக்கால் கப்
தண்ணீர் – கால் கப்
ஆப்ப சோடா – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க
கிராம்பு – சிறிதளவு
ஏலக்காய் – 2
முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் கலர் பவுடர் – சிறிதளவு (விருப்பத்துக்கு ஏற்ப)
பச்சைக்கற்பூரம் – சிறிதளவு (விருப்பபட்டால்)
நெய் – 20 மில்லி

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, ஏலக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூரம் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ஆப்ப சோடா, ஃபுட் கலர் சேர்த்து சலித்து வைக்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த எண்ணெயின் மேல், பூந்தி கரண்டியை வைத்து மாவை ஊற்றவும். துவாரங்கள் வழியாக எண்ணெயில் உருண்டையாக விழுந்த மாவை வேகவைத்து எடுக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தண்ணீர்,் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி இறக்கவும். பாகு ஆறியதும் பொரித்தெடுத்த பூந்தி மாவை பாகில் சேர்த்து ஊற விடவும். பூந்தி நன்றாக ஊறியதும், அதன் மேல் வெள்ளை நிறத்தில் சர்க்கரை லேயரானது படியும். அப்போது பூந்தியை எடுத்து, ஒரு பவுலில் சேர்த்து, அதனுடன் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, கிராம்பு, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக கிளறினால், சுவையான இனிப்பு பூந்தி தயார்.