பிரபாகரன் மகன் கொலை: கை விரிக்கும் பொன்சேகா!

கொழும்பு: உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று முன்னாள் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு சரத் பொன்சேகா அளித்த பேட்டியில், “பிரபாகரனின் இளைய மகன் பாலசசந்திரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ தளபதி என்ற வகையில் தமக்கு எதுவும் தெரியாது. தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை.

பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்லஸ் ஆண்டனிக்கு என்ன நடந்தது என்பது குறித்து எமக்கு தெரியும். அதை உறுதிபடுத்தி ஊடகங்களின் ஊடாகவும் தெரியப்படுத்தினோம். எனினும் பிரபாகரனின் மனைவி மற்றும் பெண்பிள்ளை, இளைய மகன் குறித்து எமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்க பெறவில்லை.

பிரபாகரனின் இளையமகனின் கொலை சம்பவம் குறித்து சேனல் 4-ரின் ஆவணப்படத்தை என்னால் பார்க்க வாய்ப்பு ஏற்படாத போதிலும், சிறையிலிருந்த காலத்தில் பத்திரிகை செய்திகளின் மூலம் அது பற்றி தெரிந்து கொண்டேன்.

அந்த காணொளியில் இருப்பது உண்மையா என்பது குறித்து எனக்கு தெரியாது. இறுதி இரு நாள் யுத்தத்தின் போது பலர் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் ராணுவத் தளபதி என்ற வகையில் பிரபாகரனின் இளையமகன் குறித்து எனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை, குறைந்த பட்சம் அவரின் சடலம் கூட கிடைத்தது என அறிக்கை கிடைக்கப்பெறவில்லை” தெரிவித்துள்ளார்.