புட்டபர்த்தியில் பெண் விவகாரங்களும் உண்டா ? …..

9.2.94    ஜூவியில் வெளிவந்தது….மாதங்கள்கடந்த பின்னரும் அந்த திகில் இன்​னும் மறைய​வில்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் 6-ம் தேதி… புட்டபர்த்தியில் சாயிபாபாவின் ஆசிரமம் ரணகள​மானது. அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அதைத் தடுக்க முற்பட்ட அவரது இரண்டு உதவியாளர்கள் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் நான்கு பேரையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர்!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஆந்திராவின் சி.ஐ.டி போலீஸார் இதுவரை செய்த விசாரணையில் எந்தவிதப் பலனும் இல்லை. சமீபத்தில் சாயி​பாபாவை தரிசிக்க வந்திருந்த ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா, பத்திரிகை​யாளர் ஒருவரிடம் சொன்ன தகவல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

”இந்த வழக்கில் இதுவரை ஒன்றுமே கண்டுபிடிக்கப்​படவில்லையே..?” என்று அந்த நிருபர் கேட்டார். ”எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு பெண்தான்!” – இதுதான் சர்மா அந்தப் பத்திரிகையாளரிடம் கூறியது.

ஜனாதிபதி இப்படிச் சொன்ன பிறகு, இந்த வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் பரபரப்பாகி, புதிய கோணத்தில் இந்த வழக்கைத் துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இந்தத் தகவல் ஒரு விஷயத்தை மட்டும் வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டது. ‘விசாரணை’ என்ற பெயரில் இத்தனை நாள் நடந்தது எல்லாம் வெறும் நாடகம்தான். பிரசாந்தி நிலையத்துக்குள் ஒரு ஈ, காக்கையைக்கூடப் பேசவைக்க போலீஸாரால் முடியவில்லை!

இந்த வழக்கு பற்றி சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் பேசப்படுவது இதுதான் -‘1993 ஜூன் 6-ம் தேதி இரவு சாயிபாபாவுக்குத் தந்தி வந்திருப்பதாகக் கூறி உள்ளே நுழைந்த நான்கு பேர், ராதாகிருஷ்ணன் மற்றும் சுனில்குமார் என்ற இருவரைக் குத்திக் கொன்றனர். இன்னும் இருவர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட விஜய சாந்தாராம் பிரபு, ஜகந்நாதன், சுரேஷ்குமார் மற்றும் சாய்குமார் ஆகியோர் ‘வேண்டுமென்றே’ போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜூன் 6-ம் தேதியே மாநில சி.ஐ.டி. போலீஸ் வழக்கை எடுத்துக்கொண்டு விசாரிக்கத் துவங்கியது. ஆனால், சாயிபாபாவின் அனுமதி இன்றி, ஒன்றுமே செய்ய முடியாத நிலை. பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்றோரே சாயிபாபாவின் பக்தர்களாக இருக்கும்போது, எங்களால் அந்த ஆசிரமத்தில் ஒருவரையும் சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை!’

இந்தக் கொலைகளுக்குத் திட்டம் தீட்டித் தந்ததாகக் கருதப்படும் முக்கிய ஆட்களில் விஜய சாந்தாராம் பிரபு மற்றும் ரவீந்திரநாத் என்ற ரவி ஆகியோர் ஜூலை 7-ம் தேதி நாக்பூரில் கைதானார்கள். இதுதான் போலீஸாரின் ஒரே வெற்றி.

அதற்குப் பின்னர் நாடகத்தின் அடுத்த பகுதி துவங்கியது. இவர்களின் மீதான குற்றப் பத்திரிகையை வேண்டும் என்றே தாக்கல் செய்யாமல் விட்டனர் சி.ஐ.டி. போலீஸார். இவர்கள் கைதான 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை சி.ஐ.டி. போலீஸார் ‘மறந்து’​விட்டனர். போலீஸின் இந்தத் தவறால், பிரபுவும் ரவியும் ஜாமீனில் வெளியே வந்து​விட்​டனர்.

ரவி இப்போது விஜய​வாடாவில் இருக்கிறார். ஜனாதிபதி சொன்ன அந்தத் திடுக்கிடும் தகவல்பற்றி அவரிடம் கேட்டபோது. ”ஜனாதிபதி சொன்னது உண்மைக்கு ரொம்ப தூரத்தில் இல்லை. ஆனால், அவர் சொன்னது ரொம்பக் குறைவு!” என்று மட்டும் சொன்னார். மற்ற விவரங்களைக் கூற அவரும் மறுத்துவிட்டார். இந்த ‘பெண்’ விவகாரம் ஆரம்பத்திலேயே பிரசாந்தி நிலையத்தின் பக்தர்கள் வட்டாரத்தில், வதந்தியாக இருந்ததுதான். இந்தக் கொலை முயற்சி நடந்தவுடனேயே அரசல்புரசலாக போலீஸாருக்கும் தகவல் வந்தது. அப்போது இதைக் கண்டுகொள்ளவில்லை.

‘பெண் விவகாரம்’ என்பதற்கு நாம் விசாரித்த வரையில், பல கோணங்களில் விவரங்கள் கிடைத்தன. சி.ஐ.டி போலீஸ் உயர் அதிகாரி சொன்னார்… ”வழக்கமாக எல்லா வழக்குகளிலும் போலீஸ்​தான் உண்மைகளை வெளியே கொண்டுவரும். இந்த வழக்கில் நடந்தது வேறு! ஜனாதிபதியே மனம் கசந்து ஏதோ ஓர் உண்மையை லேசாகக் காட்டி இருக்கிறார். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பணம் மட்டுமே காரணம் இல்லை. ‘பெண்’ விவகாரம் என்று சொல்கிறார்களே தவிர, அதில் காதல் குழப்பம் ஏதும் இல்லை!” என்று தனக்குத் தெரிந்த உண்மையைக் கூறினார்.

அனந்தப்பூரில் புலனாய்வு அதிகாரி ஒருவர் இதைப்பற்றிக் கூறும்போது…

”கொலை முயற்சி சம்பவத்துக்கு 15 நாட்களுக்கு முன் 18 அல்லது 17 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசாந்தி நிலையத்துக்குள் நுழைந்தாள். அதன் பின் என்ன ஆனாள் என்று தெரியவில்லை. கொல்லப்பட்ட நான்கு கொலை​யாளிகளில் ஒருவரின் உறவினர் அந்தப் பெண் என்று மட்டும் தெரிகிறது. இதை நாங்கள் முதலிலேயே கேள்விப்பட்டாலும், சாயிபாபா தங்கக்கூடிய வளாகத்​துக்குள் பெண்கள் எவரும் தங்க அனுமதிக்கப்படுவது இல்லை. கணவர் அல்லது தந்தை​யுடன்தான் பெண்கள் அவரை சந்திக்க முடியும் என்பதால், அந்தப் பெண்ணும் சாயிபாபாவை சந்தித்து இருக்க முடியாது என்ற எண்ணத்தில் அவளைப்பற்றி ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை…” என்றார்.

”அந்த இளம்பெண், சாயிபாபாவின் வளாகத்​துக்குள் சென்றிருக்கிறாள் என்பதே உண்மை. அவள் அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அந்தப் பெண்ணுக்கு மட்டும் இத்தனை சலுகைகள் யார் தந்தது? அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது? உலகத்துக்கு இதை மறைப்பதால் அபத்தமான கற்பனைகள்தான் அதிகமாகும் என்பதைப் பிரசாந்தி நிலையத்தினர் அறிய மாட்டார்களா?” என்று கேட்கிறார், பாபாவின் நீண்ட கால பக்தர் ஒருவர்.

சாயிபாபாவின் உதவியாளராக இருந்து கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனின் சகோதரியை மணக்க, போலீஸாரால் கொல்லப்பட்ட இந்த நால்வரில் ஒருவரான சுரேஷ்குமார் முயன்றதாகவும், ஆனால், ராதாகிருஷ்ணன் அதற்கு சம்மதிக்காததால், அவரைத் தன் தோழர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாகவும் திடுக்கிடும் வதந்தி ஒன்று உலவுகிறது. அதே கையோடு பாபாவிடம் மன்னிப்புக் கேட்க, அவரது அறைக்கு நால்வரும் போனதாகவும், ஆனால், அதைப் போலீஸ் தவறாகப் புரிந்துகொண்டு இவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் அந்த வதந்தியின் தொடர்ச்சியாகப் பேசிக்கொள்கிறார்கள்.

இதற்கு நேர்மாறான இன்னொரு வதந்தி – பாபாவின் உதவியாளரான ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், அதே பெண்ணை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேஷ்குமாரும் காதலித்ததாகவும்… இந்தப் பிரச்னையில்தான் ராதாகிருஷ்ணன் கொல்லப்பட்டதாகவும்!

அதே சமயம், பிரசாந்தி நிலையத்தில் தங்கிப் படித்து வெளியே வந்த சிலரை நம்மால் சந்திக்க முடிந்தது. இந்த விவகாரம்பற்றி அவர்கள் அறிந்துள்ளனர் என்பதை இவர்களின் பதற்றம் நமக்கு உணர்த்தினாலும், நமக்கு விவரங்களைக் கூற இவர்கள் தயார் இல்லை. அவர்களில் ஒருவர் சொன்ன தகவல்…

சாயிபாபாவுடன் முன்பு நெருக்கமாக இருந்தவரான பக்தர் ஒருவர் அவரை தெய்வமாகவே பாவித்தார். ஒரு தடவை சாயிபாபா ஒரு புறாவைக் காட்டி ”இது என்ன?” என்றபோது, ”புறா…” என்றார். ”இல்லை… அது கிளி..!” என்றார் சாயிபாபா. ”ஆமாம்… அது கிளிதான்…” என்றார் பக்தர். ”அது பருந்தல்லவா..?” என்றார் சாயிபாபா. ”அது பருந்தாகவும் இருக்கலாம்…” என்று பக்தர் சொல்ல, ”நான் என்ன சொன்னாலும் ஆமாம் என்கிறாயே… எப்படி?” என்ற சாயிபாபாவிடம், ”நான் என் கண்களைவிட உங்கள் கண்களையே அதிகம் நம்புகிறேன்…” என்றாராம் அந்தப் பக்தர்.

அந்தப் பக்தரைத் திருமணம் செய்து​கொள்ளச் சொல்லி அறிவுரை கூறிய சாயிபாபா, தானே ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுத்தார். தன் கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்தப் பெண்ணின் போக்கு சரி இல்லையாம். இதனால் வந்த வினைதான் இத்தனைக்கும் அடிப்படை என்கிறார்கள். கொலை முயற்சி சம்பவத்துக்கு முன்பு வரை 15 நாட்களுக்கு மேல் பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபாவின் தங்கும் இடத்துக்கு அருகில் நடமாடிய அந்தப் பெண், அப்புறம் காணவில்லை. இந்தப் பெண் கர்நாடக முன்னாள் முதல்வர் ஒருவருக்கு உறவினராம்!

மெரைன் இன்ஜினீயரான சுரேஷ் சாந்தாராம் பிரபு, கடலில் இல்லாத நாட்களில் பிரசாந்தி நிலையத்தில் தங்குவது உண்டு. அவருக்கும் அவரது அப்பாவுக்கும் இரண்டு அறைகளை சாயிபாபா ஒதுக்கி இருந்தார்.

சம்பவத்துக்குப் பின் இந்த அறைகள் அவசர​மாகக் காலி செய்யப்பட்டன. சாயிபாபாவின் கணக்கிடலங்கா செல்வத்தைக் கட்டி ஆளத் துடிக்கும் சுயநலவாதிகளின் போர்தான் இந்தக் கலாட்டா என்றே அனைவரும் கருதுகின்றனர். நாக்பூரில் கைதான விஜயசாந்தாராம் பிரபுவும் இதையே கூறினார்.

”ஐந்து பேர்கொண்ட கும்பல் ஒன்று பக்தர்களின் காணிக்கையாக வந்த எக்கச்சக்கமான பணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்தது. பாபாவுக்குத் தெரியாமல் இத்தனையும் நடந்து வந்தபோது, நான் அவரிடமே புகார் கூறினேன். எனக்கு சாயிபாபா நெருக்கமாகி வருவதைக் கண்டு அவர்கள் பயந்தனர். ஆனால், சாயிபாபா தன் முன் ஆதாரங்களை வைக்கும் வரை எப்போதும் நடவடிக்கை எடுப்பது இல்லை. அதனால் அவர்களும் சிக்கவில்லை…” என்று விஜயசாந்தாராம் பிரபு கொடுத்த வாக்குமூலமும் இந்த எண்ணத்துக்கு வலுவூட்டியது.

இது விஷயமாக நாம், சாயிபாபா மடத்தில் தங்கிப் படித்த பழைய மாணவர்களை சந்தித்தபோது, அவர்களின் முகம் பதற்றத்தில் நிறம் மாறுவதை நம்மால் காண முடிந்தது.

ஒன்று தெளிவாகப் புரிகிறது… நடந்து முடிந்த பயங்கரத்தின் பின்னே உள்ள மர்மங்களைத் தொடர்ந்து மறைத்தால், நாளையே பெரிய ஆபத்து பாபா ஆசிரமத்துக்குள் உருவாகலாம். ஆசிரமத்துக்குள் கிடைத்திருக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளும், சயனைடு விஷ மருந்தும் எதற்காக ஆசிரமத்துக்குள் வந்தன?

சாயிபாபாவின் அறையிலேயே சம்பவம் நடந்த அடுத்த நாள் சி.ஐ.டி. போலீஸார் சோதனை போட்டதில் ஒரு லேடீஸ் ஹேண்ட் பேக் எப்படிக் கிடந்தது? அதில் ஆபரேஷன் நேரத்தில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கை உறைகளும், சயனைடு விஷம் நிறைந்த ஊசி சிரிஞ்சும் ஏன் இருந்தன..?

பதில் சொல்ல யாருமே இல்லையா?!

நன்றி – ஜூனியர் விகடன்.