புழல் சிறைச்சாலையில் சுரங்கப்பாதையா?அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

சென்னை மத்திய புழல் சிறையில் இருந்து தப்பிச் செல்வதற்காக தண்டனைக் கைதிகளில் சிலர் சுரங்கப்பாதை அமைத்தனர் என்றும், அதைக் கண்டறியச் சென்றபோதுதான் ஜெயிலர் உள்ளிட்டவர்கள் கைதிகளால் தாக்கப்பட்டனர் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

புழல் சிறைக்குள் என்ன நடந்தது?

“கடந்த 25-ம் தேதி. மாலை 5.30 மணி. புழல் சிறையில் உயர்பாதுகாப்பு கொண்ட பகுதி 2-ல் ஜெயிலர் இளவரசன், வார்டன் முத்துமணி, உதவி ஜெயிலர் குமார் மற்றும் ரவி, மோகன், செல்வின், தேவராஜ் உள்ளிட்டோர் கைதிகளின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் திடீரென கைதிகளால் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த முத்துமணி உள்பட 5 பேரை மாலை 6.50 மணியளவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதன்பிறகும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இரவு 7 மணியளவில் கைதிகளுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரவு 7.30 மணியளவில் சிறைத் துறை ஏ.டி.ஜி.பி திரிபாதி, டி.ஐ.ஜி மௌரியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கைதிகள் தரப்பில், ‘தண்டனை கைதிகளுக்கும், விசாரணைக் கைதிகளுக்கும் பாகுபாடு கூடாது. அனைவருக்கும் பொதுவாகவே சலுகைகள் வழங்கப்பட வேண்டும். எங்களை 24 மணி நேரமும் கண்காணித்து டார்ச்சர் செய்யக் கூடாது’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, இரவு 8 மணி அளவில் நிலைமை கட்டுக்குள் வந்தது. கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட மாரியும், குமாரும் இரவு 10 மணிக்குப்பிறகு விடுவிக்கப்பட்டனர்” என்றனர்.

‘‘சிறையில் இருந்து தப்பிக்க கைதிகள் சிலர் சுரங்கப்பாதை அமைத்து வந்ததாகவும், அதைக் கண்டறிந்தபோதுதான் ஜெயிலர் உள்ளிட்டோர்  தாக்கப்பட்டனர்’’ என்றும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சிறைத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு கைதிகளுடன் பேசினோம். அப்போது, சில குறைகளை கைதிகள் தெரிவித்தனர். அதை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அப்துல்லா, முன்னா, மண்ணடி அப்துல்லா, காஜாமைதீன், சையது அலி நவாஸ், குத்புதீன், அப்துல் சமது ஆகிய கைதிகள் மீது 12 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீஸ் பக்ருதீன் வேலூர் சிறைக்கும், பிலால் மாலிக் கடலூருக்கும், பன்னா இஸ்மாயில் மதுரைக்கும், காஜாமைதீன் சேலத்துக்கும், அப்துல்லா திருச்சிக்கும், முன்னா கோவைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்’’ என்று சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினிமுகம்மது, “சிறைக்குள் பிரச்னை என்பதை டி.வி. செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டோம். காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் டி.வி-யில் காட்டினார்கள், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் ஆகியோரை டி.வி-யில் காட்டவில்லை. இவர்கள் மூன்றுபேரும் சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்கும்போது மூன்று பேரும் ஒன்றாக எப்படிச் சேர முடியும்? மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்தாலும்கூட, ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகள் அனைவரையும் இவர்களால் தாக்க முடியுமா? அந்தளவுக்கா நம் போலீஸ் பலவீனமாக இருக்கிறது?

வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்ட நாளிலிருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார். நோன்பு வைத்த நேரத்தில் கெட்டுப்போன உணவுகளைக் கொடுப்பது, அதையும் தாமதமாக வழங்குவது என டார்ச்சர் செய்திருக்கிறார். நான், மாதம் ஒரு தடவை பார்க்கச் செல்வேன். என்னை கடுமையாகத் திட்டுவார். அவருக்கு இவர்கள் மேல் என்ன ஆத்திரம் என்று தெரியவில்லை. தமிழகத்தில் நடந்த முக்கியக் கொலை வழக்குகள் அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ள போலீஸ், அந்த வழக்குகளை விரைவாக நடத்தாமல் காலம் தாழ்த்திவருகிறது. அவர்கள் மீதான வழக்கை விரைவாக நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். சிறையில் நடந்திருப்பதாகச் சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் ஆகியோர் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இவர்கள் மீது ஏதாவது பழியைப் போட்டு என்கவுன்டர் செய்யவும் போலீஸ் திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசுதான் அவர்களை காப்பாற்ற வேண்டும். மோதல் சம்பவத்தின் உண்மையான பின்னணியை அரசு விசாரிக்க வேண்டும். சிறைக்குள் என்ன நடந்தது என்பது கண்காணிப்புக் கோபுரங்களில் உள்ள கேமராக்களில் பதிவாகியிருக்கும். அது வெளியிடப்பட வேண்டும்’’ என்றார்.

உண்மையில் என்ன நடந்தது? என்பது பற்றி தமிழக அரசு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.