மட்டன் சுக்கா… பனீர் தக்காளி மசாலா..

மேங்கோ லஸ்ஸி

தேவையானவை
கெட்டித் தயிர் – 200 மில்லி
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
மேங்கோ சிரப் –
2 டேபிள்ஸ்பூன்
துருவிய பாதாம் பருப்பு –
ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி –
ஒரு டேபிள்ஸ்பூன்
செர்ரிப்பழம் – 2
பாலாடை – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
மிக்ஸியில் தயிர், சர்க்கரை, மேங்கோ சிரப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, துருவிய பாதாம், டூட்டி ஃப்ரூட்டி. செர்ரிப்பழம் வைத்து அழகுபடுத்தி, இதன் மேல் பாலாடை ஊற்றிப் பரிமாறவும்.

புனா ஹோஸ் (மட்டன்  சுக்கா)

தேவையானவை
ஆட்டுக்கறி (மட்டன்) – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
குடமிளகாய் – 1
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
தக்காளி விழுது – 3 டேபிள்ஸ்பூன்
கஸூரி மேத்தி –  அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை -சிறிதளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒரு டீஸ்பூன்

செய்முறை:
ஆட்டுக்கறியை (மட்டனை) நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதில் சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும். பின்னர், இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளி விழுது சேர்த்துக் கிளறவும். தக்காளி நன்கு சுருண்டு வந்ததும், மட்டன் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி வேக விடவும். மட்டன் நன்கு வெந்ததும் கஸூரி மேத்தி, கரம்மசாலாத் தூள் சேர்த்து வதக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

பனீர் டகா டக்

தேவையானவை
பொடியாக நறுக்கிய  பெரிய
வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய  குடமிளகாய் – ஒன்று
பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய  தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்)  – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – அரை  டீஸ்பூன்
சாட் பவுடர் – கால்  டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்
கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்
கெட்டித் தயிர்  – 50 மில்லி
ஃப்ரெஷ் கிரீம் – 50 மில்லி
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்

மசாலா செய்ய :
கடலை மாவு  – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்
கெட்டித்தயிர் – 3 கப்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதில் பனீரைச் சேர்த்துப் புரட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில் புரட்டிய பனீரைச் சேர்த்துப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் ஓமம் போட்டு பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி , இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக விடவும். பின்னர் பொரித்த பனீர் சேர்த்துக் கிளறி ஆம்சூர் பவுடர், சாட் பவுடர் , கரம்மசாலாத் தூள், கஸூரி மேத்தி சேர்த்து வதக்கி, தயிர் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.

பனீர் புர்ஜி  (பனீர் தக்காளி மசாலா)

தேவையானவை
வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய  தக்காளி – 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை  டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்  – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
சீரகத்தூள்  – அரை டீஸ்பூன்
பனீர் – 150  கிராம்
உப்பு   – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:
பனீரை நன்கு கழுவி, துருவி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து உருக விடவும். வெண்ணெய் உருகியதும், சீரகம் போட்டு பொரிய விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கிக்கொள்ளவும். இதில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக விட்டு, துருவி வைத்திருக்கும் பனீரைச் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

ஆலு ஜீரா (உருளை சீரக மசாலா)

தேவையானவை
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு – 150 கிராம்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் வெண்ணெய் ஊற்றி உருக விட்டு, சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். உப்பு, ஆம்சூர் பவுடர், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்

முறுக் மக்கன் வாலா (சிக்கன் பட்டர் கிரேவி)

தேவையானவை
சிக்கன் (கோழிக்கறி)  – ஒரு கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  – 2
தக்காளி பேஸ்ட் – 5 தக்காளிக்கு உரியது
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள்-  2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
அரைத்த முந்திரி விழுது – 50 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் – 100 மில்லி
கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

பொரிப்பதற்கான மசாலா தயாரிக்க :
கெட்டித்தயிர்  – 100 மில்லி
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத் தூள் – ஒன்றரை  டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கறுப்பு உப்பு  – ஒன்றரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க :
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு –  4
ஏலக்காய் – 3
சீரகம் – அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
வெண்ணெய் – 100 கிராம்

செய்முறை:
சிக்கனை (கோழிக்கறி) துண்டுகளாக்கி நன்கு கழுவிக் கொள்ளவும், ஒரு பவுலில் பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப்பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் புரட்டி எடுத்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி பேஸ்ட், காஸ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும் இதில் அரைத்த முந்திரி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும். அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு கஸூரி மேத்தி ,வெண்ணெய், சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப்  பரிமாறவும்.

தரிவாலா முறுக்

தேவையானவை:
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று
தக்காளி விழுது – 3 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சிக்கன் – அரை கிலோ
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கஸூரி மேத்தி இலை – அரை டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தயிர் – 150 மில்லி
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
சீரகம் – கால் டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
ஏலக்காய் – 2
பட்டை – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்துப் பொரிய விடவும். பிறகு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.  இதில் தக்காளி மற்றும் தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு சுருண்டு வந்ததும் கரம்மசாலாத் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் வேக விடவும். சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் சுருண்டு வந்ததும் கொத்தமல்லித்தழை, கஸூரி மேத்தி மற்றும் தயிர் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

தவா சப்ஜி (வெஜிடபிள் மசாலா)

தேவையானவை
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணிக் கலவை – 100 கிராம்
கீறிய பச்சைமிளகாய் – 2
தக்காளி – 2 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்)  – ஒரு டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – கால் டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:
காய்கறிகளைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் ஓமம் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  இதனுடன் தக்காளி விழுது சேர்த்து சுண்டி வந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்த காய்கறிகள், உப்பு, ஆம்சூர் பவுடர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். கலவையில் தண்ணீர் வற்றியதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

மச்சிலி அம்ரிஸ்ட் (பஞ்சாபி ஸ்டைல் ஃபிஷ் ஃபிரை)

தேவையானவை
வஞ்சிர மீன் – 2 துண்டுகள்
மசாலாக் கலவை செய்ய:
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்
சாட் பவுடர் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
ஓமப்பொடி – அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மசாலாக் கலவை செய்ய கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து கொள்ளவும். மீனை நன்கு கழுவி, மசாலாக் கலவையில் நன்கு புரட்டி, எடுத்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து மீன் விரைப்புத்தன்மை பெற்றதும் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

சாக்வாலா  சிக்கன் (கீரை சிக்கன் கிரேவி)

தேவையானவை
சிக்கன் (கோழிக்கறி) – அரை கிலோ
ஃப்ரெஷ் க்ரீம் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று

அரைக்க:
பசலைக்கீரை – ஒரு கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
நசுக்கிய பூண்டு – 4 பல்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 3

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும், அரைக்கக் கொடுத்தவற்றை சேர்்த்து வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சீரகம், பிரிஞ்சி இலைகளைச் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை 10 நிமிடம் கொதிக்க விட்டு, அரைத்த விழுதை இதனுடன் கலக்கவும். பின்னர் நறுக்கிய சிக்கன், சேர்த்து நன்கு வேக விடவும். சிக்கன் வெந்ததும் கஸூரி மேத்தி இலை ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

குல்ஜா (உருளைக்கிழங்கு ரொட்டி)

தேவையானவை
மைதா மாவு – அரை கிலோ
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 60 மில்லி
கறுப்பு எள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

ஸ்டஃப் செய்ய:
வேகவைத்த உருளைக்கிழங்கு – 3
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
முந்திரி – 10
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஸ்டஃப் செய்ய கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவுடன், தயிர், கறுப்பு எள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்துக்கு பிசைந்து 20 நிமிடம் ஊறவிடவும். இதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி ஸ்டஃப்பை உருண்டைக்குள் வைத்து சப்பாத்தியாகத் தேய்த்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள ரொட்டியை இருபுறம் வேகவைத்து நேரடி தீயில் இருபுறமும் ரொட்டியை லேசாக காட்டி உப்பியதும் தட்டில் வைத்து வெண்ணெய் தடவிப் பரிமாறவும்.

தால் மக்னி 

தேவையானவை
கறுப்பு உளுந்து – 140 கிராம்
ராஜ்மா பருப்பு – 40  கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தக்காளி – 2  (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
ஃப்ரெஷ் க்ரீம் – 100 மில்லி
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
தாளிக்க:
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – கால் டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
ஏலக்காய் – 2
பட்டை – சிறிய துண்டு
கஸூரி மேத்தி – முக்கால் டீஸ்பூன்

செய்முறை:
உளுந்தையும் ராஜ்மா பருப்பையும் 9 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊறிய பருப்பை குக்கரில் வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து, உருகியதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி விழுது, சீரகத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் வேக வைத்ததை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கி சூடு ஆறியதும் பரிமாறவும்.