மண்ணின் மைந்தர்கள் – அவனி மாடசாமி – களைப்பில்லா களப்போராளி

avani

1000 பிரசங்கிகள் =100 திட்டமிட்டாளர்கள் = 50 ஓருங்கிணைபாளர்கள் = ஒரு கள பணியாளருக்கு சமம். இது அத்தனையும் ஒரு சேர்ந்த உருவம் அவனி மாடசாமி அவர்கள்.
சமூக ஒழுங்குடன் கூடிய மனித ஆற்றலால் மட்டுமே – அறமான அரசியல் கட்டமைப்பை உருவாக்க இயலும் என்ற கொள்கையோடு தன் இளம் வயது முதல் ஆக்கபூர்வமான சிந்தனையும் – கண்ணியமான உடல் உழைப்பும் கொண்டு தன்னை தானே தகவமைத்து கொண்டவர்.

சமீபத்தில், தமிழக காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் இவரை சந்திக்கும்போது, ” நீங்கள் சமூக பணியை தொடங்கிய காலத்தை கணக்கிட்டால் , இந்நேரம் குறைந்தபட்சம் நீங்கள் ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவது ஆகியிருக்க வேண்டுமே ” வியப்புடன் கேட்டார்.
அதற்கு, ” … ஐயா, உங்கள் கூற்று உண்மையாக இருக்கலாம்… ஆனால் இன்றைய சமகால அரசியல் சூழலில் ஒரு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக உருவாக வேண்டுமென்றால் , அசாத்திய திறமை – தன்னலமில்லாத தியாகம் – அயராத உழைப்பு இருந்தால் மட்டும் போதாது. கட்சி தலைமையின் கவனத்தை ஈர்க்கும் சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் என்னிடம் இல்லை ” என கூறினார். அவர் குறிப்பிட்ட அந்த தகுதிகள் எவை என்பதினை தமிழக வாக்காளர்கள் நன்கு அறிவார்கள்.

இன்றளவும், தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் வருடம் நான்கு முறை மட்டுமே பட்டிமன்றம் நடத்தும் சிந்தனையாளர்கள் மத்தியில், வாரம் ஒரு தலைப்பு கொடுத்தால் கூட – சளைக்காமல் – சிந்தனை தூண்டும் தலைப்புகளை தயார் செய்து – பட்டிமன்றத்தில் பங்கெடுப்பவர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவ்வாறாக ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, பல வருடங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நடத்தி காட்டியவர். இந்த அசாதாரணமான திறமை இவரிடம் இயல்பிலேயே இருப்பதால்தான் , இந்த கட்டுரையின் ஆரம்பித்திலேயே இவரை அவ்வாறு குறிப்பிட்டேன்.

தலைமை பண்பு என்பது சந்ததி அணுக்களால், தலைமுறை கடந்து உடலில் சேர்ந்து உருவாக்கபடுவதில்லை என்பது வரலாற்று உண்மை. அது கால பரிமாணங்களால் உருவாகி – தன்னை தானே அனுபவ உலைகளில் வார்ப்பு செய்து வரும் ஒரு தவம். பல வருடங்களாக சமுதாய களப் பணியும் – தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து கல்லூரிகளில் சிந்தனை கூட்டங்கள் நடத்தி – சமூக ஒழுங்குடன் கூடிய இளைய தலைமுறை மனித ஆற்றலை ஒருங்கிணைத்து அருந்தவம் ஆற்றி வருகிறார். இவரை போன்றோரை அரசியல் களத்திற்குள் அழைத்து வரலாமா ? அழையுங்கள்… 9443393617