‘மரம் மதுரை’

[wysija_form id=”1″]மரங்களை பாதுகாத்தும், புதிதாய் வளர்த்தும் வரும் அமைப்புகளின் எண்ணிக்கை, சென்னை, கோவை போன்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மதுரையில் குறைவுதான். அதிலும் திறம்பட செயல்பட்டு வரும் அமைப்புகள் மிக சிலவையே. அந்த ஒரு சில அமைப்புகளில் ஒன்றுதான் இந்த “மரம் மதுரை”.

இயற்கை மீதும், மதுரை மீதும் ஆர்வமும், அக்கறையும் கொண்ட இளைஞர்கள் ஒன்றாய் இணைந்து மதுரையை பசுமையாக்க ஆரம்பித்த அமைப்பான இந்த “மரம் மதுரை”யின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கூறுகையில், “மரங்களுக்கும் மழைக்கும் நெடிய தொடர்பு உண்டு. மதுரை மாவட்டத்தில் பொதுவாகவே மழை பொழிவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இங்கோ, உள்ள மரங்களும் வெட்டபட்டு வருவதனால் மழை பொழிவின் அளவு மேலும் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக மதுரையில் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. வருங்கால தலைமுறைக்கு இயற்கையை பாழடைத்து சொத்து, பணம் தருவது வீண். மாறாக நல்லதொரு இயற்கை சூழலை அமைத்து தருவது தான் அவர்களுக்கு நாம் தரும் சிறந்த சொத்தாக அமையும்.

எனவே, நாங்கள் மக்கள் மனதில் மூன்று விசயங்களை கொண்டு சேர்த்து வருகிறோம். முதலாவதாக, மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக, புதிய மரங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, சீமைகருவேலம் மரங்களும் ஒரு வகையில் பூமிக்கு போர்த்தபட்ட பசுமை போர்வைதான் என்றாலும், நிலத்தடி நீர் மட்டும் குறைவுக்கும், பல நன்செய் மரங்கள் அழிவதற்கும் காரணமாக இருப்பதால் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டும்.

சீமைகருவேலம் அழிக்கப்பட்ட இடங்களில் அவற்றிற்கு பதிலாக அங்கு நன்செய் மரங்கள் புதிதாய் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில் பூமி வெப்பம் அடைய காரணமாய் அமைந்து விடும். மக்கள் மனதில் இவற்றை கொண்டு சேர்க்க இன்றைய இளைஞர்களால்தான் முடியும் என நம்பினேன்.

எனவே, ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று எங்களை போன்றே இயற்கை மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட இளைஞர்களை எங்களோடு இணைத்து கொண்டோம். ஃபேஸ்புக் மூலமும் ஆதரவு திரட்டினோம். வெளிநாடுகளில் வாழும் மக்களும் எங்கள் முயற்சியை பாராட்டி ஆதரவு தந்து வருகின்றனர். வேம்பு, புங்கை, வாகை என நீரை குறைவாக எடுத்துக்கொண்டு வேகமாக வளரும் மரங்களை எங்கள் ‘மரம் மதுரை’ மூலம் மக்களுக்கு கொடுத்து வருகின்றோம்.

அரசு மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள், கல்லூரிகள் என பொது இடங்களில் புதிதாய் மரங்கள் வளர்க்கவும், இருக்கும் மரங்களை பாதுகாக்கவும் ஏற்படும் செலவுகளை நாங்களே பார்த்து கொள்கிறோம் என்றாலும், மக்கள் தங்கள் இடங்களில் மரங்கள் வளர்க்க ஆசைப்பட்டால், அவர்களிடம் மரம் வளர்ப்பு சம்பந்தமாக உறுதிமொழி ஒன்று பெருவதோடு, மக்களுக்கு இது தன் மரம் எனும் அக்கறை எழ வேண்டும் என்பதற்காகவும், இலவசமாக கொடுத்தால் அதன் மதிப்பை அறியமாட்டார்கள் என்பதற்காகவும் மரம் ஒன்றுக்கு ரூ.500 பெற்று கொண்டு மரங்களை கொடுத்து வருகிறோம். மதுரை பசுமையாக மக்களின் ஒத்துழைப்பு முக்கியமாக வேண்டும்” என்கிறார்.

“மரம் மதுரை” யால் ‘கடம்பவனம் நோக்கி’ எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் கடம்ப மரங்களால் சூழ்ந்திருந்த மதுரையில் இன்று வெறும் 44 மரங்கள் மட்டுமே உள்ளன. இது மீனாட்சி அம்மனுக்கு உகந்த மரம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால், கடம்ப மரக்கன்றுகள் கேரளாவில் இருந்து மதுரைக்கு கொண்டு வரபட்டு, மக்களுக்கு வளர்க்க கொடுக்கப்படுகிறது. விதையாக விழுந்திருக்கும் மரம் மதுரையின் சேவைகள் விருட்ஷமாக வளர்வது மக்களின் கைகளிலும் தான் உள்ளது.

[wysija_form id=”1″]