முட்டை ரவி!

 

தும்பைப்பூபோல பளீர் வெள்ளை வேட்டி,  பால் வடியும் முகத்துடன் காட்சி அளிக்கும் முட்டை ரவியைப் பார்த்தால், ”இவனா இந்தக் கொலையைச் செய்தான்… இருக்கவே இருக்காது” என வியக்காத காவல் துறை அதிகாரிகளே இல்லை.

டெல்டா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ரவியின் தந்தை பொன்மலை ஏரியாவில் முட்டை மொத்த வியாபாரம் செய்துவந்தார். ப்ளஸ் டூ முடித்தபின் படிப்பின்மீது நாட்டம் இல்லாத காரணத்தால், கபடி சிவா என்பரோடு அறிமுகமாகிறான் ரவி. ஊர் ஊராக கபடி வீரராக வலம்வந்த ரவிக்கு, மாடு பிடியிலும் ஆர்வம் கூடுகிறது. சின்னச் சின்னப் பந்தயங்களில் ஏற்படும் வாய் தகராறுகளுக்காக அடிதடியில் இறங்க… பின்னர் அதுவே தொழிலாகிப்போனது. கபடி சிவாவே ஒரு கட்டத்தில் முட்டை ரவியைவிட்டு விலகிச்செல்லும் நிலை ஏற்பட…  முட்டை ரவி தனக்கென ஒரு கோஷ்டியை அமைத்துக்கொண்டான்.

போலீஸ் என்கவுன்ட்டருக்குப் பயந்து மணிபாரதி பாண்டிச்சேரியில் தஞ்சம் அடைய… மணிபாரதியிடம் இருந்த மணச்சநல்லூர் மாதவனும் மணச்சநல்லூர் குணாவும் முட்டை ரவி கோஷ்டியில் இணைந்தனர். காவல் துறை வட்டாரத்தில் மாதவனும் குணாவும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால், அவர்களால் பெரிதாக எந்தவிதமான காரியங்களையும் செய்ய முடியவில்லை. பண பலமும் சாதி பலமும்கொண்ட முட்டை ரவியின் நட்பு அவர்களுக்குப் பல்வேறு விதத்திலும் உதவியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தாங்கள்தான் முட்டை ரவிக்கு சீனியர் என்ற பந்தா இல்லாமல், முட்டை ரவி சொல்லும் அனைத்து அசைன்மென்ட்டுகளையும் இருவரும் கூட்டாக செய்ய ஆரம்பித்தனர்.

அதுவரை காவல் துறையினர்வசம் முட்டை ரவியைப் பற்றிய விவரங்களோ புகைப்படமோ இல்லை. காவல் துறை வட்டாரத்தில் முட்டை ரவியைப்பற்றிய விசாரணைகள் வேகமெடுத்தன. முட்டை ரவியின் கிராஃப் ஓஹோவென உயர்ந்தது பொன்மலை ஏரியாவில் கோலோச்சிக்கொண்டு இருந்த ரோக்கின் கண்களை உறுத்தியது. ‘நம்ம ஏரியாவிலேயே வந்து, நமக்கே தண்ணி காண்பிக்கிறானே… யாருடா?’ என்று ரோக் குரூப்பின் ஆட்கள் முட்டை ரவியைத் தேட ஆரம்பித்தனர். இந்த விஷயம் முட்டை ரவியின் காதுகளை எட்ட… ரோக்குக்குத் தண்ணி காண்பித்துவிட்டு, அவன் அண்ணன் சுந்தரை ஓட ஓட போட்டுத் தள்ளினான். இது நடந்தது 2000-ம் ஆண்டு வாக்கில். அதன்பின்னர் சில காவல் துறை அதிகாரிகளின் நட்பு வளையத்துக்குள் வந்துவிட்ட முட்டை ரவி, தன்னுடைய பராக்கிரமங்களை விரிவுபடுத்தத் தொடங்கினான்.

பணம் பாதளம்வரை பாயும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டவன் ரவி. மாநகராட்சி ஏரியாவில் இருக்கும் சைக்கிள் ஸ்டாண்டுகள், கட்டணக் கழிப்பிடங்கள், கோயில்களில் உள்ள பூக்கடைகள் போன்ற வருமானம் தரக்கூடிய அனைத்துத் தொழில்களையும் தன்னைச் சார்ந்தவர்கள் ஏலம் எடுக்கவைத்ததுடன், தன்னுடைய பணப்புழக்கத்தை அவர்கள் மூலமாக அதிகரித்துக்கொண்டான். அவனால், பலன் பெற்றவர்கள் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பித்தனர்.

தனக்கென தனி சாம்ராஜ்யத்தை வளர்த்துக்கொண்டவனை ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்க… அது ரௌடிகளுக்கு இடையே சாதி மோதலாகவும் கோஷ்டிப் பூசலாகவும் தலையெடுக்க ஆரம்பித்தன. காவல் துறையில் ஒரு சிலர் முட்டை ரவியைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க… முட்டை ரவியின் டைரியில் கொலைகளின் எண்ணிக்கை 12 ஆகவும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் அடிதடி வழக்குகள் எண்ணிக்கை அற்றதாகவும் இடம்பிடித்தன. குற்றச்செயல்களின் எண்ணிக்கைகூடக் கூட… எதிரிகளும் அதிகரித்தனர். அப்போதுதான் தன்னை தன் சமூகம் காக்கும் எனக்கருதி வாண்டையார் தலைமையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டான். உடனடியாக அவனுக்கு இளைஞர் அணியில் பதவியும் வழங்கப்பட்டது.

அரசியல் பலமும் சாதி பலமும் கொடுத்த தெம்பில், தி.மு.க-வின் டெல்டா மாவட்ட முக்கியப் பிரமுகர் ஒருவரின் ஆசியும் கிட்ட… அசைக்கமுடியாத சக்தியாகிப்போனான். தன்னை வளர்த்த முக்கிய அரசியல் பிரமுகரின் பாதுகாப்புக்காகத் தன் அடிப்பொடிகளில் சிலரை எந்த நேரமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டான். அத்துடன் தன்னை நாடிவரும் அரசியல் பிரபலங்கள் சொல்லும் அனைத்து பஞ்சாயத்துக்களையும் செவ்வனே செய்துதந்தான். இடையில் தனக்கு எதிராளியாக இருந்த சேட்டு மற்றும் சேட்டுவின் சகோதரன் அகஸ்டின் ஆகியோரையும் மூன்று மாத இடைவெளியில் போட்டுத்தள்ளினான். 

ரௌடிகள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து இனியும் முட்டை ரவியை விட்டு வைத்தால் ஆபத்து எனக் காவல் துறையினர் கருதினர். அந்த நேரத்தில் தனக்கு ஆதரவாக இருந்த தி.மு.க. முக்கியப் பிரமுகரிடம் தஞ்சம் அடைந்தான். அப்போது ஆளும் கட்சியாக இருந்ததால், அவ்வளவு எளிதாக முட்டை ரவியைக் காவல் துறையினரால் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் அந்த தி.மு.க. பிரமுகருக்கும் பக்கத்து மாவட்ட முக்கியப் புள்ளியில் சகோதரருக்கும் பிரச்னை ஏற்பட… அந்த சகோதரருக்கு எச்சரிக்கைவிடுத்தான் முட்டை ரவி. மிரண்டுபோன அந்த பவர்ஃபுல் சகோதரர் காவல் துறையினருக்கு என்கவுன்ட்டர் கட்டைளையிட…  முட்டை ரவி பதுங்க ஆரம்பித்தான்.

2006-ம் ஆண்டு தீபாவளித் திருநாளுக்கு முந்தைய நாளில், காவலரைத் தாக்கிய முட்டை ரவி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல். தன்னுடைய படைகளுடன் 25-க்கும் மேற்பட்ட கார்களில் பவனி வந்த அந்த ஆதரவு தி.மு.க. புள்ளி அஞ்சலி செலுத்திவிட்டு ஆக்ரோஷமாக வெளியேற… பயந்து ஓடி ஒளிந்தனர் காவல் துறையினர். எண்ணி ஏழே மாதங்களில் முட்டை ரவியின் எதிர் தரப்பால் அந்தத் தி.மு.க. புள்ளியும் வெடிகுண்டு வீசி, பின் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பரிதாபம்!