முதல் குற்றவாளி யார் ? சசிகலாவா ? ஜெயலலிதாவா ?

PUBLISHED ON 04 Jan 2012

நெறி தவறிய துரோகிகளை அடையாளங்கண்டவுடன் துரத்தி வீழ்த்திய நேர்மையான வீரத்திற்கு தலைவணங்கி போற்றுகிறோம். ஆனால்,உங்கள் நேர்மை கண்டு மகிழும் நாங்கள், தங்களின் ‘சாதுர்யமின்மை’ கண்டு வியப்படைகிறோம்.
தாங்கள் துரோகிகளை நோக்கி சாட்டையை சுழற்றுவததாகவும் , தங்களின் துணிவு தமிழக அரசியல்வாதிகளில் யாருக்கும் இல்லை என்ற
ஒப்பீட்டு புகளுரைகளில் தாங்கள் மகிழ்ந்திருக்கும்போது இது போன்ற வாக்கியங்கள் தங்களை அதிருப்தியாக்கலாம்.
நிகழ்வுகளை சுவராசியமாக்கி – சுவாரசியத்தை சூடாக்கி செய்தி பரிமாறுவதில் அறமற்ற பத்திரிகை புலமையை காட்டாமல், தகுந்த
நேரத்தில் அரசாளும் மன்னனுக்கு எடுத்துரைத்து (இடித்துரைத்து ) மன்னனின் செங்கோல் அறம் காக்கும் மதியூகி மன்னன் போல்
செயல்பட விழைகிறோம். எங்கள் செய்தியில் நேர்பட பேசும் துணிவு உண்டு . வானளாவ புகழும் வஞ்சக வணிக உத்தி இல்லை.

தங்களை சுற்றி இருந்தவர்கள் தாங்கள் அறியாமல் தவறிழைத்து விட்டதால் அவர்கள் குற்றவாளிகள் என்றும் ; அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும், அதுமட்டுமில்லாது அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என்றும் தங்கள் கட்சியின் பொது கூட்டத்தில் அறிவித்தீர்கள். தங்களால், வளர்ப்பு மகன் என்றும் – உடன்பிறவா சகோதரி என்றும் ஊரறிய அறிவிக்கப்பட்டவர்களிடத்தில், தங்கள் அமைச்சர்கள் அளவுக்கு மீறி பணிவு காட்டியது தாங்கள் அறியாததா ?
இத்தனை வருடங்களாக சகல இடங்களிலும் இவர்களை முன்னிறுத்தியது யார் ? அரசின் ஒவ்வொரு துறைகளிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்தியது , தங்களுக்கு தெரியாது என்றும் – உளவு துறை அறிக்கை தங்களுக்கு கிடைத்த பின்புதான் தாங்கள் அறிந்தீர்கள் என்பதும் உண்மை என்றால் , தாங்கள் நாடாளும் தகுதியை இழந்து விட்டீர்கள் என அர்த்தமாகும். ஏனென்றால் , இத்தனை வருடங்களாக தமிழகத்தின் அத்தனை முண்ணனி பத்திரிகைகளுக்கும் தெரிந்த உங்கள் தோழியின் ரகசியங்கள் நீங்கள் அறியவில்லையா ?
தங்களை சுற்றி இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்கள்
கண்காணிப்பு புலத்தில் இல்லை என்றால் , அது யார் குற்றம் ?
தங்களிடம் தலைமை பண்புக்கான ’விழிப்புணர்வான சாதுர்யம் ‘
இல்லை என்றுதான் அர்த்தமாகிறது அல்லவா ?
தங்களின் எதிரிகள் நீங்கள் துரத்தியவர்கள் மட்டுமில்லை ; தங்களை அர்த்தமில்லாமல் புகழும் பத்திரிகைகளும்தான்.
சுற்றம் நோக்காத நீதி வழங்கல் – மக்கள் நலன் காக்கும் உளவு பார்வை – அறம் சார்ந்த ஆட்சி முறை – எதிரிகளின் இடமறியும் மதியூகம் இவைகளை கொண்ட ஆட்சியாளராய் தங்களை எதிர்நோக்குகிறோம் .
மக்களின் வயிற்றில் சாராயம் ஊற்றி – அவர்கள் நலன் காக்க மருத்துவ காப்பும் வழங்குகிறீர்கள் ;
தோழியை சுதந்திரமாக உலவவிட்டதும் ; பின் துரோகி என அடையாளங்காட்டியதும் தாங்கள்தானே .
முதல் குற்றவாளி யார் ?

தங்களை சுற்றியுள்ள மாயப் பனி விலகவே எங்கள் சொல்லோடு வெப்பம் சேர்த்தோம்; தங்களை சொல்லால் சுடுவது எங்கள் நோக்கம் அல்ல.

அவனி மாடசாமி