யாகாவாராயினும் நா காக்க என்பதை உணரவில்லையே: கருணாநிதி வேதனை!

சென்னை: யாகாவாராயினும் நா காக்க என்பதை இவர்கள் உணரவில்லையே என்று கருணாநிதி வேதனை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்னை தெரசாவின் சேவையைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்து தெரிவித்தது பற்றி?

தேவையில்லாத கருத்து அது. பேசக்கூடாத கருத்து அது. அன்னை தெரசா, கொல்கத்தா நகரில் ஏழை யெளியவர்களுக்காக ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். 1979 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசே வழங்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. அதிலும். மறைந்துவிட்ட ஒரு மாபெரும் மாதரசியைப் பற்றி இப்படிப்பட்ட அநாகரிகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறி, வீண் பிரச்னையை பா.ஜ.க. அரசுக்கு ஏற்படுத்தி விட்டார் என்று தான் கூற வேண்டும். “யாகாவாராயினும் நா காக்க” என்பதை இவர்கள் உணராமல் இருக்கிறார்களே என்பதுதான் வேதனை!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டது பற்றி?

மத்திய அரசும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியும், இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுத்ததின் காரணமாக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பி இருக்கிறார். அதற்காக, என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கு மனப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, பா.ஜ.க. அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது பற்றி?

இப்போது கொண்டு வரப்படும் அவசரசட்டத்தில், குறிப்பிட்ட ஐந்து அமைப்புகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் போது, அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதைப் பார்க்கத் தேவையில்லை என்று உள்ளது. இந்த முடிவு பாஜ.க. அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், தொழிலதிபர்களுக்கும், பன்னாட்டுத்தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவாகவும் செயல்படுகிறது என்பதை நிச்சயமாக உறுதி செய்து விடும். எந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தத் திட்டம் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படாவிட்டால், அந்த நிலத்தை விவசாயிகளுக்கே திரும்பத்தந்து விட வேண்டும் என்பது முந்தைய சட்டத்தில் உள்ளது. அவசரசட்டத்தில் இந்தப்பிரிவும் நீக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் இந்தச்செயலுக்கு சமூக ஆர்வலர் அன்னாஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க.வின் தோழமைக்கட்சிகளே கூட இந்த முடிவினை ஏற்கவில்லை. மத்திய அரசு இந்த அவசரசட்டம் உட்பட மேலும் பல அவசர சட்டங்களுக்கும் நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்தத் தொடருக்குள் நிறைவேற்றாவிட்டால், அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்தன.

ஆனாலும், இந்தப்பிரச்னையில் பிரதமர், பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது சரியான முடிவில்லை என்பதே என் கருத்து. சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையைப் பாதுகாத்திடத் தவறினால், விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.