லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்… தனியார் நிலங்களில் வளர்ப்பதெப்படி?

[wysija_form id=”1″]

”எங்கள் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சிலசமயம் பயிர்களை அவை சேதம் செய்கின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்?”

-ஆர். குணசேகரன், உத்திரமேரூர். நீலகிரி மாவட்ட வன அலுவலர் பத்திரசாமி பதில் சொல்கிறார்.

”காட்டுப்பகுதிகளில் உள்ள வனவிலங்கான குரங்குகள் சில சமயம் ஊர்ப்பகுதிகளுக்கு வந்துவிடுவதுண்டு. அப்போது, அவற்றுக்குத் தேவையான உணவுக்காக வயல்வெளிகளில் உள்ள காய்கறி, பழங்களைப் பறித்து உண்டு சேதம் ஏற்படுத்தும். இப்படி குரங்குகள் மூலம் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். வன அலுவலர்கள் அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து, ஆய்வு செய்வார்கள். வனத்துறையில் ‘தொல்லைத் தரும் விலங்குகளை அப்புறப்படுத்துதல்’ என்ற திட்டம் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி… மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குரங்குகளைப் பிடிக்க பயிற்சி பெற்றவர், கூண்டுகளுடன் வருவார். சில நாட்கள் தங்கி இருந்து, குரங்குகளைப் பிடித்துக் கொண்டு போய், அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விட்டுவிடுவார்.

ஒருவேளை உங்கள் மாவட்டத்தில், இந்தத் திட்டம் செயல்படவில்லை என்றால், ‘குரங்கு களைப் பிடிப்பதற்கு உண்டான செலவுகளை பகுதி மக்களே ஏற்றுக் கொள்கிறோம்…’ என்று வனச்சரகர் அல்லது மாவட்ட வன அலுவல ரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதன் பேரில் வனத்துறையினர் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள். குரங்குகள், பயிர்களை சேதம் செய்கின்றன என்று அடித்து, துன்புறுத்துவதும், குரங்குகளின் உயிருக்கு சேதம் ஏற்படும் செயல்களைச் செய்வதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆகையால், முறைப்படி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.”

”கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும் மரங்கள் பற்றி சொல்லுங்கள்?”

-எஸ். உஷாதேவி, பல்லடம். கோயம்புத்தூர் மாவட்ட  முன்னோடி இயற்கை விவசாயி மது. ராமகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

”என்னுடைய அனுபவத்தில் கால்நடைகளுக்காகவே தனி யாக மரங்களை வளர்த்துத்தான் தீவனம் பெற வேண்டிய அவசியமில்லை. நிலத்தைச் சுற்றிலும் உயிர் வேலியாகவும், ஊடுபயிராகவும் தீவன மரங்களை வளர்க்கலாம். சூபாபுல், கிளரி சீடியா, சீமைக் கொன்றை, அகத்தி, சித்த அகத்தி, தடசு, முருங்கை, வாதநாராயணன், மல்பெரி…. போன்ற மரங்களின் இலை, தழைகளை மாடுகள் விரும்பி உண்ணும். பெரு மரம், கல்யாண முருங்கை, கொடுக்காபுளி… தழைகளை ஆடுகள் விரும்பித் தின்னும். வறட்சியான காலகட்டங்களில் பசுந்தீவனப் பற்றாக்குறை இருக்கும். அப்போது, கொஞ்சம் கசப்புத் தன்மை கொண்ட பச்சை பனை ஓலை, வேப்பந்தழை, வெட்டிவேர், மரவள்ளித் தழை.. போன்றவற்றைக் கூட கால்நடைகள் உண்ணும்.

இப்படி பசுந்தீவனம் தரும் மரங்களை வளர்ப்பதால், கால்நடைகளுக்குத் தீவனம் மட்டும் கிடைப்பதில்லை. பலவிதமான பறவைகள் அந்த மரங்களைத் தேடி வரும். அவற்றின் எச்சம் மூலம் சந்தனம்… போன்ற விலை மதிப்புமிக்க மரங்கள் உங்கள் நிலத்தில் இயற்கையாக உருவாகும். தீவன மரங்களின் வேர்கள் ஈரப்பதத்தை உறிஞ்சும்போது, மண்புழு, கரையான்…. போன்ற எண்ணற்ற உயிரினங்கள் நிலத்தை வளப்படுத்தும்.

தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக கிளரிசீடியா, முயல் மசால்… போன்றவற்றை சாகுபடி செய்யலாம். முயல் மசாலை ஒரு முறை விதைத்துவிட்டால் போதும், அறுக்க அறுக்க, வளர்ந்து கொண்டே இருக்கும். கிளரிசீடியா அருமையான தீவனம் மட்டு மல்ல… காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து, மண்ணை வளப்படுத்தும்.

இப்படி வளர்க்கப்படும் மரங்களில் பலவும், நன்றாக வளர்ச்சி அடைந்த பிறகு நல்ல விலைக்கும் விற்பனையாகும். ஆக, மரங்கள் வளர்க்கும்போது, ஒரு நன்மை மட்டுமல்ல…. கண்ணுக்குத் தெரியாத பலவிதமான நன்மைகள் நடக்கின்றன.”

தொடர்புக்கு, செல்போன்: 94424-16543.

‘செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும். அதை வெட்டி, விற்பனை செய்வதற்கு உள்ள நடைமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?”

-பி. சரவணன், புதுக்கோட்டை. தமிழக வனத்துறையின் முன்னாள் வனச்சரகர் சி. சுப்பையா பதில் சொல்கிறார்.

”செம்மரம் 25 ஆண்டுகள் கழித்து, வருமானம் கொடுக்கக்கூடிய மரப்பயிர். தனியார் நர்சரிகளில் ஒரு கன்று 6 ரூபாய் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. செம்புறைக்கல் (Laterate Soil) தன்மைகொண்ட நிலத்தில் செம்மரங்கள் நன்றாக வளரும். தஞ்சாவூர் மாவட்டத்தில், செங்கிப்பட்டி, (இங்குள்ள மண், செம்மை நிறத்தில் இருப்பதால்தான், இந்த பெயர் வைத்துள்ளார்கள்) மருங்குளம் பகுதிகளிலும்… குறைந்த மழையளவுள்ள புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி… மாவட்டங்களிலும் நன்றாக வளர்கின்றன. ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி வனப்பகுதியான சேஷாசலம் மலைப்பகுதியில்தான் இந்திய அளவில் அதிகமான அளவுக்கு செம்மரங்கள் உள்ளன. திருப்பதி பகுதியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டுப் பகுதியிலும் செம்மரத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

தமிழ்நாட்டில், அரசாங்கத்தின் வெட்டுமர பட்டியலில்  (Scheduled Timbers) செம்மரம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளில் ஒரு டன் செம்மரம், ரூ. 50 லட்சம் முதல் 5 கோடி வரை விலை போகிறது. இந்தியாவில் ரூ. 15 முதல் 20 லட்சம் வரை விற்பனையாகின்றது. இதனால்தான், ‘பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள செம்மரங்கள் கடத்தல்; கடத்தல்காரர்கள் கைது!’ என்றெல்லாம் அடிக்கடி செய்திகள் வருகின்றன.

பட்டியல் மரங்களான செம்மரம், சந்தனம், தேக்கு, தோதகத்தி இனங்களை ஒரு நபர் 5 கிலோவுக்கு மேல், வனத்துறையின் அனுமதியின்றி கையிருப்பு வைத்திருக்கக் கூடாது என 1988-ம் ஆண்டு சட்ட விதி கூறுகின்றது. வனத்துறையின் முத்திரையின்றி (Distinguishable Mark) இந்த 4 வகை மரங்களையும் கையிருப்பும் வைத்திருக்கக் கூடாது.

விவசாய நிலத்தில் செம்மரங்களை வளர்க்கும்போது, கிராம நிர்வாக அலு வலரிடம், சிட்டா அடங்கலில் செம்மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று பதிவு செய்யவேண்டும். இப்படி செய்தால்தான், அறுவடை செய்யும்போது, வனத்துறையில் எளிதாக அனுமதி பெற்று விற்பனை செய்ய முடியும்.”

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[wysija_form id=”1″]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL