லேட் ஆனாலும் லேட்டஸ்டா வந்தாங்க!

ஆங்கிலத்தில் லேட் ப்ளூமர்ஸ் (Late bloomers) என்ற வார்த்தை உண்டு. மிகத் தாமதமாக உலகத்தின் வெளிச்சத்துக்கு வந்த சாதனையாளர்கள் இவர்கள். படாத பாடுபட்டு என்னென்னவோ செய்து கடைசியில் சம்பந்தமே இல்லாத துறையில் காலடித்தடம் பதித்து புகழின் உச்சிக்கு வரும்போது வயதானவர்கள்.

உலகம் முழுவதும் கேஎஃப்சி இருக்கிறது. அந்த சிக்கன் வறுவல் கடையின் லோகோவில் இருக்கும் தாத்தா கர்னல் சான்டர்ஸ் 65-வது வயதில் கேஎஃப்சியை அமெரிக்காவில் ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கை ரோலர் கோஸ்ட்டரேதான். 6-ம் வகுப்பு ட்ராப் அவுட். தூங்குமூஞ்சியாக இருந்ததால், பள்ளியில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டவர். தம்பி தங்கைகளைப் பார்த்துக்கொள்ள வீட்டோடு பையனாக வளர்க்கப் பட்டவர். பேப்பர் போடுவதில் ஆரம்பித்து சின்னதும் பெரிதுமான பல வேலைகளைப் பார்த்திருக்கிறார். அவருடைய 40 -ம் வயதில் ஒரு மெக்கானிக் சர்வீஸ் கடையை ஆரம்பித்தார். சுமாராக போய் க்கொண்டிருந்த அந்தக் கடைக்கு வரும் கஸ்டமர்கள் இவரும் இவர் ஆட்களும் மொக்கையாக சர்வீஸ் பண்ணுவதைப் பசியோடு பொறுமையாகக் காத்திருந்து வாங்கிச்செல்ல எரிச்சலானார்கள். அவர்களைக் குளிர்விக்க வேண்டி குட்டியாய் மோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். தான் தூங்கப் பயன்படுத்திய அறைதான் பகலில் அந்தக் குட்டி மோட்டல். ஆனால் அடுத்து நடந்ததோ ஆச்சர்யம். இவர் சமைத்துப்போட்டது கஸ்டமர்களுக்குப் பிடித்துப்போனது. சர்வீஸுக்கு வராதவர்களும் தேடிவந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.[wysija_form id=”1″]

முதன்முதலில் நெடுஞ்சாலையில் ஒரு கடையைப் போட்டார். அதுவும் ஒரு கட்டத்தில் கொள்ளையடிக்கப்பட, நடுத்தெருவுக்கு வந்து மீண்டும் ஜீரோவில் இருந்து ஆரம்பித்தார். ஆனால், அவரது ‘கென்டகி ஃப்ரைடு சிக்கன்’ பெயர் மக்களை வசியப்படுத்தியதால், 65-வது வயதில் கடையைத் திறந்தபோது கூட்டம் கூட்டமாக வந்தார்கள். தின்றார்கள். பத்தே வருடங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் 600 கேஎஃப்சி கடைகளைத் திறந்தார். இன்று 109 நாடுகளில் 15,000 கடைகளின் மூலம் உலகம் முழுவதும் 12 மில்லியன் மக்கள் தினந்தோறும் கேஎஃப்சி-யில் சாப்பிடுகிறார்கள். அதை எம்ப்ளத்தில் சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருக்கிறார் சான்டர்ஸ்.

ஹாலிவுட் நடிகர் ஆலன் ரிக்மேன், கிராபிக்ஸ் வேலை, நாடகம் என 46 வயது வரை கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு குட்டிக்கரணம் போட்டு வாழ்ந்தவர். சினிமாவில் ‘உணவு உபசரிப்பு’ பணியில் ஆரம்பித்து மேக்கப், டச்சப் பாய் வரை எல்லா வேலைகளையும் பார்த்திருக்கிறார். டி.வி-யில் நடிக்க வாய்ப்பு வந்தபோது சும்மானாச்சுக்கும் நடித்தவர் அப்படியே ஹாலிவுட்டுக்குள் 46-வது வயதில் நுழைந்தார். ஹாரி பாட்டர் சீரிஸ் படங்களில் பிரமாதமாக நடித்து நூற்றுக்கணக்கான படங்களில் குணச்சித்திர நாயகனாய் கலக்கி எடுக்கிறார். இவர் கால்ஷீட் பிஸியோ பிஸி.

ஆங்கிலத்தில் Thesaurus எனப்படும் வார்த்தை தகவல் களஞ்சியம் மற்றும் கலைக் களஞ்சியத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ரோஜட் தன் 73-வது வயதில் எழுதி இன்று உலகம் முழுவதும் அதைத்தான் எல்லோரும் புத்தகமாகவும் இணையத்திலும் பொருள் விளக்கம் வேண்டி பயன்படுத்துகிறார்கள். விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், மருத்துவர் என எல்லாத் துறைகளிலும் எதை எதையோ முயற்சிசெய்து கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்புக்குச் சென்று மீண்டவர். மருத்துவமனை ஆரம்பித்தால் தீப்பிடிக்கும். ஆராய்ச்சி செய்தால் கட்டடம் இடிந்து நொறுங்கும். குடும்பத்தில் தாயும் தந்தையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இப்படி விதி இவர் வாழ்க்கையில் சுற்றவிட்டு சுண்ணாம்பு அடித்தாலும் விளையாட்டாக இவர் எழுதிய ‘தீசரஸ்’ இப்போது வரை ஹிட்டோ ஹிட். 90 வயது வரை களஞ்சியத்தை மெருகேற்றி உலகத்துக்கு தந்துவிட்டு சந்தோஷத்தோடு மண்டையைப் போட்டார்.

இன்றும் உலகம் முழுவதும் விற்பனையில் பட்டையைக் கிளப்பும் ‘அபோகலிப்ஸ் நவ்’ (Apocalypse Now) புத்தகத்தை எழுதிய ஜோசப் தியோடர் கார்செனியோவ்ஸ்கி ஒரு கப்பல் மாலுமியாக வாழ்க்கையை ஆரம்பித்தவர். சீட்டாட்டத்திலும் சூதாட்டத்திலும் வாழ்க்கையைத் தொலைத்த அவர் அதன் பிறகு முழுநேரக் கொள்ளையனாக மாறினார். துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்த அவரை போலந்து போலீஸ் கைது செய்து முட்டியைப் பெயர்த்தது. அதன்பிறகு சில வருடங்கள் சிறை வாழ்க்கையைக் கழித்து விடுதலையாகி மீண்டும் கப்பல் பணிக்கு வந்தார். 30 வயது வரை ஆங்கிலமே தெரியாத அவர் பிரிட்டிஷ் கப்பல் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். உலகம் முழுவதும் கப்பலில் பயணிக்கப் பயணிக்க அவர் அறிவு விசாலமானது. ஆப்பிரிக்காவின் காங்கோவுக்குப் போன சமயத்தில் ஏற்பட்ட அனுபவத்தை உடைந்த ஆங்கிலத்தில் எழுதிவைக்க அது புத்தகமாக ஆனது. பிறகு ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டு இன்னும் அழகான ரைட்-அப் ஒன்றை தந்தார். அவருடைய எழுத்து புது ஸ்டைலில் அசத்தியது. உலகப் புகழ் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா அந்தக் கதையை சினிமாவாக எடுத்தார். இப்போது அவரின் அபோகலிப்ஸ் நவ் மற்றும் ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ் என்ற இரண்டு நாவல்கள் ஆங்கில இலக்கியத்தில் தவிர்க்க முடியாத நாவல்களாக கொண்டாடப்படுகின்றன.

கேத்ரின் ஜூஸ்டன் என்ற அமெரிக்க நர்ஸுக்கு திடீரென தன் 56-வது வயதில் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. வீட்டில் சொன்னபோது வீடே கரிச்சுக்கொட்டியது. தான் பார்த்து வந்த நர்ஸ் வேலையை உதறித் தள்ளினார். கணவர் சரியான குடிகார மட்டை என்பதாலும் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்ததாலும் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவராக இருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு எளிதில் வசப்படவில்லை. அதனால் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார். 1992-ல் ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் குறும்படத்துக்குப் பிறகு, 3 வருடங்கள் அதை விசிட்டிங் கார்டாக வைத்து வாய்ப்பு தேடி அலைந்தார். மிகத் தாமதமாக சிறிதும் பெரிதுமாக சீரியல் வாய்ப்புகள் வர கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். தேக்கி வைத்த நடிப்பு வெறியை அதில் காட்டினார். தி வெஸ்ட் விங், டெஸ்பரேட் ஹவுஸ் ஒயிப்ஸ் போன்ற தொடர்களில் ஹிட் நடிகையாக பிஸியானபோது அம்மணிக்கு வயது 56. அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த நடிப்புக்காக விருதுகள் குவிந்தன.[wysija_form id=”1″]

வாழ்வை வாழ வயது தடையில்லை!