வந்துவிட்டது ‘க்ளீன் மை கோச்’ ஆப்;

லகளவில் நான்காவது நீண்ட ரயில்வே என்ற புகழ்பெற்றது இந்தியன் ரயில்வே. குறைந்த கட்டணம், போதுமான வசதி போன்ற பல காரணங் களால் மக்களில்  அதிகமானோர், பேருந்தை காட்டிலும் ரயிலில் பயணம் செய்வதையே அதிகளவில் விரும்புகிறார்கள்.

இருந்தாலும் ரயில் என்றதுமே முகத்தை சுளிக்க வைக்கும் கழிப்பறைகளும் நம் கண் முன்னால் அடிக்கடி வந்துபோகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. தற்போது அதற்கும் ஒரு தீர்வு பிறந்து விட்டது.

இந்திய அரசின் ‘க்ளீன் இந்தியா’ திட்டத்தை தொடர்ந்து, தொலைதூர ரயில்களில் சுத்தத்தை நிலை நாட்டுவதற்காக இந்திய ரயில்வே.. ‘மொபைல் ஆப்’ ஒன்றை வெளியிட உள்ளது. ‘க்ளீன் மை கோச்’ என பெயரிடப்பட்ட இந்த ஆப், பல சோதனைகளுக்கு பின்பு தற்போது வெளிவர தயாரான நிலையில் இருக்கிறது.

ரயில் பயணிகள், தனது கோச் அல்லது கழிப்பறை அசுத்தமாக இருப்பதை கண்டால், தன் PNR ( Passenger Name Record ) நம்பரை கொடுத்து, இந்த மொபைல் ஆப்பின் மூலம் தனது புகாரை உடனடியாக பதிவு செய்யலாம்.

புகாரை பதிவு செய்த 15 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் பதிவானதும் அந்த ரயிலில் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு கோச் மற்றும் பெர்த் விவரத்துடன் ஒரு மெசேஜ் அனுப்பப்படும். பயணி கூறிய புகாரை நிவர்த்தி செய்த பின், பணியாளிடம் அதை பற்றிய ஒப்புதல் கேட்கப்படும். இந்த ஆப்பின் மூலம் மட்டுமல்ல, http://cleanmycoach.com/ என்ற இணையதளத்தின் மூலமாகவும் PNR நம்பர், பயணியின் பெயர் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து, தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

மேலும் பயணிகள் தங்களது மொபைலிலிருந்து CLEAN < Space >< 10-digit PNR number > என்று 58888 எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். அதை OBSERVE (On Board Services ) எனும் சாப்ட்வேர், அந்த ரயிலின் பணியாளருக்கு forward செய்து விடும்.

இப்படி ரயிலை சுத்தம் செய்யும் பணியாளர்கள் வசதி, தற்போது ஒரு சில ரயிலில் மட்டுமே இருக்கிறது. அந்த ரயில் வண்டிகளின் விவரம் ‘OBSERVE TRAINS’ எனும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

”இது வருங்காலத்தில் மற்ற ரயில்களிலும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் தொலைதூரம் செல்லும் ரயில்களில் உடனுக்குடன் புகார்கள் சரி செய்யப்படுவதுடன், ரயிலின் சுத்தமும் பராமரிக்கப்படும்” என  நம்புவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நல்ல முயற்சி.. வெற்றிபெற வாழ்த்துக்கள்..!