வாட்ஸ் அப்: புரட்சி…போராட்டம்!

கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப்பில் காட்டுத் தீயாக பரவும் வேண்டுகோள், ‘அக்டோபர் 31ஆம் தேதி யாரும் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டாம். அன்றைய தினம் இண்டர்நெட் இணைப்பை துண்டித்து, நமது எதிர்ப்பை மொபைல் போன் சர்வீஸ் அளிக்கும் நிறுவனங்களுக்குத் தெரிவிப்போம். இனி, திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் முன்பு யோசிப்பார்கள்!’ என்கிறது அந்த வேண்டுகோள்.

இன்றைக்கு மொபைல் போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருள் போல ஆகிவிட்டது. மேலும், மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கும் வசதி வந்தவுடன், அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிகையும் ஸ்மார்ட் போன் விற்பனையும் எகிற ஆரம்பித்திருப்பது நாம் அறிந்ததே.

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் அந்தச் செய்தியில், மொபைல் இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு என்ன என்றால், ‘ஆரம்பத்தில் 1ஜிபி பயன்படுத்த 68 ரூபாய் கட்டணம். 30 நாட்கள் வரை இந்த சேவையைப் பெறலாம். இப்போது அதே 1ஜிபி பயன்படுத்த 198 ரூபாய் கட்டணம். அதுவும் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதா’ என்பதுதான் அதில் கேட்கப்படும் கேள்வி.

மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பார்ப்பதற்கு அடிமையாகி விட்டோம். இவற்றைப் பார்க்காமல் வாடிக்கையாளர்களால் சும்மா இருக்க முடியாது என நினைத்துதான் செல்போன் நிறுவனங்கள் இப்படி கட்டணத்தை கண்டபடி உயர்த்துகின்றன. அக்டோபர் 31ஆம் தேதி அன்று, இந்தியா முழுவதும் இந்த சேவையைப் பயன்படுத்தாமல், நாம் யார் என்பதைக் காண்பிப்போம் என சவால் விடுகிறது அந்த வேண்டுகோள்.