விசித்திர பயணம்

PUBLISHED ON 25 FEB 2011 @ tamilagamtimes.com

இலவசமாய் நொறுக்கு தீனியும் – கிளுகிளுப்பான பாடல் காட்சி ஒளிபரப்பும் நிறைந்த பேருந்தில் பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது; ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, நீங்கள் போக விரும்பும் ஊருக்கு செல்லாமல் , ஒட்டுநரின் விருப்பத்திற்குத்தான் பேருந்து செல்லும் – கட்டணமும் உங்களை கேட்காமலேயே உங்கள் பர்ஸில் இருந்து நடத்துநர் பணம் எடுத்து கொள்வார் என்றால் அந்த பயணத்தை ஏற்று கொள்வீர்களா ? இந்த கேள்வியே பைத்தியக்காரத்தனமாய் தோன்றும் அல்லவா ?

ஆனால் நாம் எல்லோரும் விரும்பியோ – விரும்பாமலோ இந்த பயணத்தைத்தான் மேற்கொள்ள வேண்டியத்திருக்கிறது. நம்மை ஆளும் அரசுகள் மேற்குறிப்பிட்ட பேருந்து போலத்தான் நம்மை நடத்துகின்றன.

அரசு ஊழியர் / சொந்த தொழில் இல்லாத மக்களின் வாங்கும் சக்தியை கணக்கில் கொள்ளாமல் – விலைவாசி உயர்வை அனுமதிப்பது, மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல், இலவசங்களை தொடர்ந்து தருவது மூலம் கவனத்தை திசை திருப்புவது என, தன் விருப்பத்திற்கு பேருந்து ஓட்டும் நடத்துநர் போலத்தான் செயல்படுகிறது அரசுகள்.

நம் உழைக்கும் சக்தியை சாராயத்தின் மூலம் உறிஞ்சிவிட்டு – நம் வாங்கும் சக்தியை விலைவாசி மூலம் நசுக்கும் விசித்திர ஜனநாயகம் இங்கே நடைபெறுகிறது. நாம் விரும்பும் இலக்கை நாம் அடைய முடியுமா இந்த பேருந்து பயணத்தில் ? ஓட்டுநரையும், நடத்துநரையும் மாற்றுவதால் இந்த விசித்திர பேருந்து நிகழ்வுகள் நின்றுவிடாது.

ஏனென்றால் தன் விருப்பத்திற்கு பேருந்து ஓட்டும் உரிமையும் , கேட்காமலேயே பயணிகளிடம் பணம் எடுக்கும் சுதந்திரமும் உள்ள இந்த பேருந்தில் பணி புரிய இங்கு பல கும்பல்கள் காத்திருக்கிறது. கும்பல்களுக்கிடையே குற்றஞ்சாட்டுவதும் , பேருந்தில் வந்தவுடன் துணிவுடன் – கொள்ளைப் பணியை தொடர்வதும், கண்டு பயணிகளுக்கும் பழகிவிட்டது. இந்த பணியாளர்களை தேர்தெடுக்கும் உரிமை பயணிகளுக்கே இருப்பதுதான் ஜனநாயகமாம்.

இலவசமாய் நொறுக்கு தீனியையும் – கிளுகிளுப்பான பாடலையும் விரும்பி பயணம் செய்பவர்களோடுதான் நாமும் தொடர்ந்து பணிக்கும் கட்டாயம் நமக்கு.

அவனி மாடசாமி