விநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி?

தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் பிள்ளையார். அதனால்தான் அவருக்கு விநாயகர் என்று திருநாமம். சூரியன்  சந்திரன்  அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்தும் ஐந்து கரங்கள்… என பிரணவ தத்துவமாகவே திகழும் அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தித் திருநாள்.

இந்தப் புண்ணிய தினத்தில் விநாயகரை வழிபடுவதால், நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததியினர் வாழ்வும் செழிக்கும்.

ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய நன்னாளில் வருவது விநாயகர் சதுர்த்தி. இந்தத் திருநாளில்தான் பிள்ளையார் அவதரித்தார்.

ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும் சித்திர மண்டபத்துக்கு எழுந்தரு ளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளிஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி. ஒளி வட்டம் பிந்து; தண்டம் (ஒலி)  நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, ‘ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார்.

அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபடுவதால், அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

சரி! விநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி?

இதுகுறித்து, தன் மகளான உமையவளுக்கு இமவான் விவரித்ததாக, விநாயக சதுர்த்தி விரத வழிபாடு குறித்து விளக்குகின்றன புராணங்கள்.

விநாயகர் சதுர்த்தி தினத்தில், அதிகாலையில் நீராடி நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும். பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். இன்று மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்!

அழகான குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தனகுங்கும திலகமிட்டு  அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக பழங்கள், அச்சு வெல்லம், அவல், பொரிகடலையுடன், சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், விநாயகர் ஸ்லோகங்கள், துதிகள் பாடி, தூப தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும் (விநாயகருக்கு உரிய ஸ்லோகங்கள், நிவேதனம் முதலான விவரங்கள் தனியே தரப்பட்டுள்ளன). வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கலாம்.

விநாயக சதுர்த்தியன்று ஆரம்பிக்கும் பூஜையை புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி வரை கடைப்பிடிப்பவர்களும் உண்டு. இப்படி ஒருமாத காலம் வழிபட்டு,  பிறகு விநாயக விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைப்பார்கள். மறுநாள் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். ஒருமாத காலம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், விநாயக சதுர்த்தியன்று ஒருநாள் மட்டுமாவது, உளமார்ந்த பக்தியுடன் விநாயகரை வழிபட, உன்னத பலன்கள் கிடைக்கும்.


‘கணபதி பப்பா மோரியா’

மும்பையில் கணபதி ஊர்வலத்தில் முழங்கும் முழக்கம் ‘கணபதி பப்பா மோரியா’ என்பதாகும். இதற்கு ‘கணபதியே, அனைவருக்கும் பெரியவரே, திரும்பத் திரும்ப வா’ என்று பொருளாம். அதாவது, ‘பப்பா’ என்றால் ‘அனைவருக்கும் பெரியவர்’ என்றும் ‘மோரியா’ என்றால் ‘விரைவில் வா’ என்றும் அர்த்தம் சொல்கிறார்கள்.

டி.பூபதிராவ், காஞ்சிபுரம்


பிள்ளையாரும் நெய் விளக்கும்!

காஞ்சி ஸ்ரீ மடம் அமைந்திருந்த வளாகத்தின் பின்புறமாக சதுர வடிவில் ஒரு பாறாங்கல் கிடந்தது.ஒரு நாள் மஹா பெரியவர் அதன் மீது அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தபோது, கல்லின் மீது உட்கார முடியாதபடி ஏதோ கரடுமுரடாக அழுத்துவதை உணர்ந்தார். காரணம் அறிவதற்காகக் கைகளால் அந்தக் கல்லை தடவிப் பார்த்தபோது,  ஏதோ தடயம் இருப்பதை அறியமுடிந்தது. உடனே, பெரியவா உத்தரவுப்படி கல்லில் சுண்ணாம்பு தடவப் பட்டது. இப்போது, தமிழ் எழுத்துக்கள் தெளிவாகப் புலப்பட்டன.

சைவ வேளாளரான பிள்ளையார் பக்தர் ஒருவர், தினமும் பிள்ளையார் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி கைங்கரியம் செய்து வந்ததையும், அந்த கைங்கரியம் தொடர்ந்து நடைபெறும் வகையில் அவர் சில ஆடுகளை தானமாகக் கொடுத்திருந்த தகவலையும் அதிலிருந்து அறிய முடிந்தது. உடனே கல்வெட்டு நிபுணர்கள் வழவழைக்கப்பட்டார்கள். அவர்களின் மூலம் அது சோழர் காலத்துக் கல்வெட்டு என்றும், அதில் குறிப்பிடப்படும் பிள்ளையார் அருகிலேயே சந்நிதி கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரியவந்தது. நிறைவில், காஞ்சி மடத்தின் ஆதிசங்கரர் மண்டபத்து வாசலில் உள்ள பிள்ளையார்தான் அவர் என்பதும் புலப்பட்டது.

இதனையறிந்த மகா பெரியவர், சென்னையில் வசிக்கும் அடியவர்கள் சிலரை வரவழைத்து, சைவ வேளாளர் ஆரம்பித்து வைத்த நெய்விளக்கு கைங்கரியத்தைத் தொடர்ந்து நடத்தவேண்டிய அவசியத்தை உணர்த்தினார்கள். அன்று முதல் காமகோடி பீடம் நெய் தீப கைங்கர்ய டிரஸ்ட் உருவாயிற்று. அந்தப் பிள்ளையாரும் அனுதினமும் நெய்விளக்கு தீபத்தில் ஒளிர ஆரம்பித்தார்!

மீனா சொர்ணம், பெங்களூரு


கணபதி தியான ஸ்லோகம்

ஒம் கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்

உமாசுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

கருத்து: ஆனை முகத்தனை, பூத கணங்களால் வழிபடப்படும் இறைவனை, விளாம்பழம், நாவல் பழம் ஆகியவற்றின் சாரத்தை அருந்துபவனை, உமை மைந்தனை, துயரங்களை நீக்கும் காரணனை வணங்குகிறேன். தடைகளைப் போக்கும் விக்னேஸ்வரரின் திருவடியை வணங்குகிறேன்.


நிவேதனப் பொருட்கள்

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய்

எட்பொரிய வற்றுவரை இளநீர் வண்

டெச்சில்ப யறப்பவகை பச்சரிசி பிட்டுவெள

ரிப்பழமி டிப்பல்வகை தனி மூலம்

மிக்க அடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு

விக்கினச மர்த்தனெனும் அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

வித்தகம ருப்புடைய பெருமாளே

எனப் போற்றுகிறது திருப்புகழ் பாடல். அவ்வண்ணமே கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய நிவேதனப் பொருட்கள் படைத்து வழிபட்டால் விநாயகரின் பேரருளைப் பெறலாம்.


விநாயகருக்கு உகந்த பத்திர புஷ்பம்

மேதகு பாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை

வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி

யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி

யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி

மாதுளையே உயிர்தேவதாரும் அருநெல்லி

மன்றுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே

ஓதரி யவநுகு இவையோர் இருப்பத்தொன்று

உயர் விநாயக சதுர்த்திக்குரைத்த திருபத்திரமே.

 


இந்தப் பாடலில் இருந்து… மாசிப்பச்சை, நதுங்கை, ஆந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, வன்னி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, மால்பேரி, அம்புகாந்தி, மாதுளை, தேவதாரு, நெல்லி, செண்பகம், கெந்தளி, பாதிரி ஆகியன விநாயக பூஜைக்கு உகந்த இலைகள் பூக்கள் என்பதை அறியலாம்.

கணபதி ஆயிரம்!

மயிலைப் பொருவும் மடநல்லார்

வாஞ்சை முதல்மூவே டணையாம்

வெயிலைத் தணந்துன் பதநிழற்பால்

விடுப்பதரிதாம் எனலாமோ

சயிலைக் கிரியார் தம்மெதிர் போய்த்

தாள்நீட் டிடவோர் கிழவிதனைக்

கயிலைக் கிரியின் மிசைவிடுத்தாய்

கருணைத் துளியொன் றருள்வாயே

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விநாயகப்பெருமானைப்  போற்றிப் பாடிய ஸ்ரீ கணபதி ஆயிரம்’ நூலில் உள்ள இந்தப் பாடலைப் பாடி ஆனைமுகனை வழிபட, வாழ்வில் தடைகள் யாவும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். தீவினைகள் யாவும் நீங்கி நமது எதிர்காலம் வளம் பெறும்.


கணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ!

தந்நோ தந்தி: ப்ரசோதயாத்!

கருத்து: எவர் நம்மை எல்லா விதத்திலும் தூண்டுகிறாரோ, எவவர் வளைந்த யானையின் தும்பிக்கையோடு கூடிய முகத்தைக் கொண்டவரோ, எவர் அனைத்தையும் கடந்த மூலப்பொருளாக விளங்குபவரோ, அவரை தியானித்து அறிவோம்.