விநாயகர் சதுர்த்தி 30 வகை நைவேத்தியங்கள்

ரத்தடி முதற்கொண்டு மாபெரும் கோயில் வரை எங்கும் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் விநாயகப் பெருமான். `பிள்ளையார் கோயில் இல்லாத இடமே கிடையாது’ என்று கூறும் அளவுக்கு பரவலாக வணங்கப்பட்டு, பக்தர்களின் உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகரை சிறப்புற கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி நாள் நெருங்குகிறது. இதை முன்னிட்டு, 30 வகை நைவேத்தியங்கள் தயாரிக்கும் முறையை இந்த இணைப்பிதழில் வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் பிருந்தா ரமணி.

வினைதீர்க்கும் விநாயகரின் அருளால், உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் மறைந்து, பொருளும், புகழும், மனநிம்மதியும் நிறைந்திருக்க வாழ்த்துகள்!


தினையரிசி பிடிகொழுக்கட்டை

தேவையானவை: தினையரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: தினையரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக, வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியவுடன் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் ரவையாக உடைத்து வைக்கவும். பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி, ஒரு வாணலியில் விட்டு மீண்டும் அடுப்பில் வைக்கவும். கொதிவரும்போது செய்து வைத்திருக்கும் ரவையைப் போட்டுக் கிளறவும். தீயைக் குறைத்து வைத்து, வாணலியை மூடி வைக்கவும். தண்ணீர் வற்றிக் கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடவும். இப்போது ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து மாவை எடுத்து, கட்டிகள் இல்லாமல் பிசைந்து கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும். அவற்றை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால்… தினையரிசி பிடிகொழுக்கட்டை தயார்.


கர்ஜிக்காய்

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: தேங்காய்த் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், பொடித்த பொட்டுக்கடலை – கால் கப், பொடித்த முந்திரிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். அதனை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் பூரணம் செய்யக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவைச் சிறு உருண்டையாக எடுத்து சின்ன சப்பாத்தி போல் இடவும். ஒரு சிறிய எவர்சில்வர் டப்பா மூடியை இட்ட சப்பாத்தியின் மீது வைத்து அழுத்தினால் அழகான வட்டமாக வரும். இப்படித் தேவையான வட்டங்கள் செய்து வைக்கவும். ஒரு வட்டத்தை எடுத்து அதன் நடுவில் பூரணத்தை வைத்துச் சரிபாதியாக மூடி, ஓரங்களை அழுத்திவிடவும் (கையைத் தண்ணீரில் தொட்டுக்கொண்டு அழுத்தினால் ஒட்டிக்கொண்டுவிடும்). இதுதான் கர்ஜிக்காய். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, செய்து வைத்திருக்கும் கர்ஜிக்காய்களை போட்டு நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.


எள்ளுப் பூரணம் கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கறுப்பு எள் – 50 கிராம், தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை,  தண்ணீர் – 2 கப்.

செய்முறை: வாணலியில் தண்ணீர், எண்ணெய், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைத்துவிட்டு அரிசி மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். வாணலியை மூடி வைக்கவும். சில நிமிடங்கள் கழித்துத் திறந்து மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடவும். எள்ளை தண்ணீர் விட்டுக் களைந்து, வடிகட்டி எடுத்து, ஒரு வாணலியில் போட்டு, அடுப்பில் வைத்து,  நன்றாகப் பொரியவிட்டு எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைக்கவும். வாணலியில் வெல்லத்தூள், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்தவுடன் எடுத்து வடிகட்டவும். இந்த வெல்லக் கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வரும்போது பொடித்த எள்ளைப் போட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். வேகவைத்த அரிசி  மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து, எண்ணெயைத் தொட்டுக்கொண்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் எள்ளுப் பூரணம் சிறிது வைத்து கொழுக்கட்டையாக செய்துகொள்ளவும். இப்படி எல்லாவற்றையும் செய்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.


ஆவியில் வேகவைத்த மோதகம்

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், வேகவைத்த  பாசிப்பருப்பு – அரை கப், தேங்காய்த் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன் (மேல் மாவுக்கு), ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் (பூரணத்துக்கு), உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு போலப் பிசைந்து வைக்கவும்.

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி, தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி, கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும். பிசைந்த கோதுமை மாவில் இருந்து சிறு உருண்டைகள் எடுத்து சின்ன சப்பாத்திகளாக இட்டு நடுவில் பூரணம் வைத்து மோதகம் போல் செய்யவும். செய்த மோதகங்களை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.


ரவை மோதகம்

தேவையானவை: ரவை – ஒரு கப், பால் – 2 கப், வேகவைத்த கடலைப்பருப்பு – அரை கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு சூடாக்கவும். கொதி வந்தவுடன் ரவையைப் போட்டுக் கிளறவும். தீயைக் குறைத்து, பாத்திரத்தை மூடி வைக்கவும். கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடவும். ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி… தேங்காய்த் துருவல், வேகவைத்த கடலைப்பருப்பு, பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வந்தவுடன் ஏலக்காய்த்தூள் போட்டுக் கலந்து இறக்கவும். வெந்த ரவைக் கலவையைக் கட்டி இல்லாமல் பிசைந்து சிறு உருண்டை எடுத்து, கைகளால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, அதன் நடுவில் பூரணம் சிறிது எடுத்து வைத்து மோதகம் போல செய்யவும் (இதை வேகவைக்க வேண்டிய அவசியம் இல்லை).


பொரித்த மோதகம்

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் (பூரணத்துக்கு), ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, நெய் – ஒரு டீஸ்பூன் (மேல் மாவுக்கு), உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் விட்டுக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.  வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் தேங்காய்த் துருவல், பொடித்த  வெல்லம் போட்டுக் கிளறவும். கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறினால், பூரணம் ரெடி. பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்துச் சின்ன சப்பாத்தி போல் இட்டு, நடுவில் பூரணத்தை வைத்து, மோதகம் போல மூடி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக் கவும்.


தேங்காய்ப் பூரண கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், தண்ணீர் – 2 கப், நெய் (மேல் மாவுக்கு) – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கப், பொடித்த வெல்லம்  – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் (பூரணத்துக்கு) – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: வாணலியில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைத்துவிட்டு, பச்சரிசி மாவைத் தூவி, கட்டி தட்டாமல் கிளறவும். வாணலியை மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து, வாணலியைத் திறந்து நன்றாகக் கிளறி, மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து, வாணலியை மூடி வைக்கவும்.

இன்னொரு வாணலியில் நெய்யை சூடாக்கி, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள் போட்டுக் கலந்து இறக்கி வைக்கவும். இதுதான் தேங்காய்ப் பூரணம். வேகவைத்த மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, எண்ணெயைத் தொட்டுக்கொண்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் தேங்காய்ப் பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, வேண்டிய வடிவத்தில் கொழுக்கட்டையாக செய்யவும். இப்படி எல்லாவற்றையும் செய்து, இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


உளுத்தம்பருப்பு கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், எண்ணெய் (மேல் மாவுக்கு) – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – முக்கால் கப், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், கடுகு, உளுத்தம்பருப்பு (பூரணத்துக்கு) – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் (பூரணத்துக்கு) – ஒரு டேபிள்ஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 2 கப்.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஊறவைத்து, அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கொதிக்கும்போது அரிசி மாவைப் போட்டுக் கட்டி இல்லாமல் கிளறி நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பை சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் பெருங்காயத்தூளை சேர்த்து… பொரிந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் உளுத்தம்பருப்பு கலவையைப் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் கிளறி, இறக்கும்போது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும். இதுதான் பூரணம்.

வேகவைத்திருக்கும் அரிசி மாவில் இருந்து ஒரு சின்ன உருண்டை எடுத்து, விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் பூரணத்தை வைத்து மூடவும். இப்படி எல்லாவற்றையும் செய்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


அம்மிணிக் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், தண்ணீர் – 2 கப், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது தீயைக் குறைத்துவிட்டு, மாவைத் தூவிக் கட்டி தட்டாமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். மாவை மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து மாவை கட்டி இல்லாமல் பிசைந்து கையில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு பட்டாணி அளவுக்குச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் ஊறிய கடலைப்பருப்பு சேர்க்கவும். பிறகு பெருங்காயத்தூளைப் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்திருக்கும் அம்மிணிக் கொழுக்கட்டைகளைப் போட்டுக் கிளறவும். இறக்கும் முன்பாக தேங்காய்த் துருவலை சேர்த்துக் கலந்து இறக்கவும்.


ஜவ்வரிசி – கீரை வடை

தேவையானவை: மாவு ஜவ்வரிசி – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், சுத்தம் செய்து, நறுக்கிய அரைக்கீரை – அரை கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயை சூடாக்கி, ஜவ்வரிசியை சேர்த்து நன்றாகப் பொரியும் வரை வறுத்து எடுத்து, தண்ணீர் விட்டு ஒரு அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய கீரை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போடவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.


கேழ்வரகு – ஜவ்வரிசி கொழுக்கட்டை   

தேவையானவை: கேழ்வரகு மாவு, ஜவ்வரிசி – தலா அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, ஜவ்வரிசியைப் போட்டு நன்றாகப் பொரியும் வரை வறுத்து எடுத்து, தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தூளில் ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைய விட்டு வடிகட்டி வைக்கவும். வாணலியில் நெய் விட்டு, கேழ்வரகு மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிடவும். இதில் வடிகட்டிய வெல்லக் கரைசல், தேங்காய்த் துருவல், ஊறிய ஜவ்வரிசி, ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். வாணலியின் சூட்டுக்கே மாவு கெட்டியாகிவிடும். ஆறியவுடன் மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


கொண்டைக்கடலை சுண்டல்

தேவையானவை: கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க: கொத்தமல்லி விதை (தனியா) – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முதல் நாள் இரவே கொண்டைக்கடலையைத் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அதை குக்கரில் போட்டு, ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி, தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்த்து, பொரிந்தவுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து…  வேகவைத்த  கொண்டைக்கடலையைப் போட்டு சில நிமிடங்கள் கிளறி, அடுப்பை அணைத்து விடவும். வறுத்து அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுத்து, ஆறியதும் பொடித்து, செய்து வைத்திருக்கும் சுண்டலில் போட்டு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.


வரகரிசி  பிடிகொழுக்கட்டை

தேவையானவை: வரகரிசி – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – 10, துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – 2 கப், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வரகரிசி, மிளகு, சீரகம், வெந்தயம், துவரம்பருப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டுப் பிசிறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து அதை மிக்ஸியில் போட்டு ரவையாக உடைத்து வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி… கடுகு, உளுத்தம்பருப்பை சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் கடலைப்பருப்பை சேர்த்து, பிறகு பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி… தண்ணீர், உப்பு சேர்க்கவும். கொதி வரும்போது செய்து வைத்திருக்கும் ரவையைப் போட்டுக் கட்டி இல்லாமல் கிளறவும். தீயைக் குறைத்து வைத்து வாணலியை மூடி வைக்கவும். 2, 3 நிமிடங்கள் கழித்துத் திறந்து பார்த்தால் தண்ணீர் வற்றிக் கெட்டியாகி இருக்கும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறி மூடி வைக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து கட்டி இல்லாமல் பிசைந்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


சத்துமாவுக் கொழுக்கட்டை

தேவையானவை: சத்துமாவு (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கிறது) – ஒரு கப், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த் துருவல் – அரை கப்.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கரையவிட்டு, வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதித்தவுடன் சத்துமாவு, அரிசி மாவைப் போட்டுக் கிளறவும். கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும். அதில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கலந்து, ஆறியவுடன் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


வாழை இலை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், தேங்காய்த் துருவல் – முக்கால் கப், வெல்லத்தூள் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வாழை இலை துண்டுகள் – 12.

செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து, இட்லி மாவுப் பதத்துக்கு நைஸாக அரைத்து, சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி… தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்துக் கிளறவும். சேர்ந்தாற்போல் வந்தவுடன் அடுப்பை அணைத்து, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலந்து வைக்கவும். ஒரு வாழை இலைத் துண்டை எடுத்து அதன் மீது எண்ணெய் தடவி, அரைத்து வைத்த மாவை இலை முழுவதும் தடவவும். நடுவில் பூரணத்தை வைத்து இலையைச் சரிபாதியாக மடித்து இட்லித் தட்டில் வைக்கவும். இப்படி எல்லா மாவையும் செய்யவும். ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


பச்சரிசி – தேங்காய் பாயசம் 

தேவையானவை: பச்சரிசி, தேங்காய்த் துருவல் – தலா கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6 (நெய்யில் வறுக்கவும்), நெய் – ஒரு டீஸ்பூன், பால் – 2 கப்.

செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசியுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்த விழுதைப் போட்டு கட்டி இல்லாமல் கிளறிவிடவும் (தீயைக் குறைத்து வைக்கவும்). நன்றாக வெந்தவுடன் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கொதித்தவுடன் பாலை ஊற்றிக் கலந்து இறக்கி, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை சேர்க்கவும்.


உளுந்து வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப், பச்சை மிளகாய் – 3,  கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஊறவைத்து பத்து நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்து வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு அதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தண்ணீர் விடாமல் நன்றாக மசியும்படி அரைத்து எடுத்து, பெருங்காயத்தூளைச் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.


துவரம்பருப்பு பூரணக் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – முக்கால் கப், தேங்காய்த் துருவல் – கால் கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – 2 சிட்டிகை, தண்ணீர் – 2 கப்.

செய்முறை: துவரம்பருப்பை அரைவேக்காடாக வேகவிட்டு,  மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, அரைத்த பருப்பு, பொடித்த வெல்லம், தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கினால் பூரணம் ரெடி. இதில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.மற்றொரு வாணலியில் 2 கப் தண்ணீர், நெய், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்தவுடன் பச்சரிசி மாவைப் போட்டுக் கிளறி, கெட்டியானவுடன் இறக்கவும். ஆறியதும் மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, ஒரு சிறு உருண்டை எடுத்து கைகளால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் கொழுக்கட்டையாக செய்யவும். இப்படி எல்லாவற்றையும் செய்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சைப் பயறு – அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் (பூரணத்துக்கு) – 2 டீஸ்பூன், பச்சரிசி மாவு – ஒரு கப், எண்ணெய் (மேல் மாவுக்கு) – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தண்ணீர் – 2 கப்.

செய்முறை: பச்சைப் பயறை ஒரு மணி நேரம்  ஊறவைக்கவும். குக்கரில் பயறைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும்.  வாணலியில் உப்பு, தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடவும். இன்னொரு  வாணலியில்  2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை சேர்க்கவும். பொரிந்தவுடன் வேகவைத்திருக்கும் பச்சைப் பயறைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும்.

வெந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து, கைகளால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் பச்சைப் பயறு பூரணத்தை வைத்து மூடி கொழுக்கட்டைகளாக செய்யவும். இப்படி எல்லாவற்றையும் செய்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


மைதா அப்பம்

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், ரவை – 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், வாழைப்பழம் – ஒன்று, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மீதி எல்லாப் பொருட்களையும் போட்டுக் கலந்து, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து அப்படியே மூடி வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு சிறு கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.


சீயம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – முக்கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறி, கெட்டியானதும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெயை காயவைத்து,  பூரண உருண்டையை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.


முளைகட்டிய பயறு இனிப்பு சுண்டல்

தேவையானவை: பச்சைப் பயறு – ஒரு கப், பொடித்த வெல்லம் – அரை கப், தேங்காய்த் துருவல் – கால் கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சைப் பயறை முதல் நாள் இரவே தண்ணீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை எடுத்து ஒரு காட்டன் துணியில் கட்டித் தொங்கவிட்டால், அடுத்த நாள் முளைவிட்டிருக்கும். இப்போது இதை எடுத்து குக்கரில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் போனவுடன் வெந்த பயறை எடுத்து ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, அதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து, நெய் விட்டு நன்றாகக் கிளறிவிடவும். சேர்ந்தாற்போல வந்தவுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: ரெடிமேடாக பாக்கெட்டு களில் கிடைக்கும் முளைகட்டிய பச்சைப் பயறை பயன்படுத்தியும் இதை செய்யலாம்.


அவல் பாயசம்

தேவையானவை: அவல் – அரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், முந்திரிப்பருப்பு – 6, பால் – இரண்டரை கப்.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் அவலைப் போட்டு நன்றாகப் பொரியும் வரை வறுத்து, பாலை ஊற்றி வேகவிடவும். வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்து, எல்லாம் சேர்ந்தாற்போல் வரும்போது ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.


பூம்பருப்பு சுண்டல்

தேவையானவை: கடலைப் பருப்பு – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறி தளவு, தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கொத்த மல்லி விதை (தனியா) – 2 டீஸ்பூன், எள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: குக்கரில் கடலைப்பருப்பைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை சேர்க்கவும். பொரிந்தவுடன் வேகவைத்த கடலைப்பருப்பு, தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு தேங்காய்த் துருவல், பொடித்து வைத்திருக்கும் பொடி இரண்டையும் தூவிக் கிளறி இறக்கவும்.


வாழைப்பழ அப்பம்

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் – முக்கால் கப், கனிந்த வாழைப்பழம் – ஒன்று, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டுக் கலந்து, தண்ணீர் விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைக் கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.


அன்னாசிப்பழ கேசரி கொழுக்கட்டை

தேவையானவை: ரவை – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – கால் கப், தண்ணீர் – ஒன்றரை கப், முந்திரிப்பருப்பு – 3, கேசரி கலர் பவுடர் – சிறிதளவு, அன்னாசிப்பழ எசென்ஸ் – சில துளிகள், பச்சரிசி மாவு – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – 2 கப்.

செய்முறை: வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு சூடாக்கி, முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் ரவையைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும். வாணலியில் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடியை சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் ரவையைப் போட்டுக் கிளறவும். கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து, கெட்டியாகும் பதம் வரும்போது மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்துவிடவும். இதனுடன் வறுத்த முந்திரிப்பருப்பு, அன்னாசிப்பழ எசென்ஸ் விட்டுக் கலந்து வைக்கவும்.

இன்னொரு வாணலியில் தண்ணீர், எண்ணெய், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வரும்போது பச்சரிசி மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு மாவை எடுத்து நன்றாகப் பிசையவும். மாவிலிருந்து ஒரு சிறு உருண்டை எடுத்து, கைகளால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் கேசரி கொஞ்சம் வைத்து கொழுக்கட்டைகளாக செய்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


பால் பாயசம்

தேவையானவை: பாஸ்மதி அரிசி (அ) பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி – 10, குங்குமப்பூ – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடான தும் அரிசியைப் போட்டுப் பொரியும் வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை போல் உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயைக் குறைத்து வைத்து, உடைத்த ரவையைப் போட்டு வேகவிடவும். நன்றாக வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப் பூ சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைச் சேர்த்தும் செய்யலாம்.


பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கப், பால் – 4 கப், சர்க்கரை – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை: ஒரு வாணலியில் தண்ணீர், உப்பு, எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது பச்சரிசி மாவைப் போட்டுக் கிளறவும். கெட்டியானவுடன் அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும் மாவைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பாத்திரத்தில் பாலை விட்டு அடுப்பில் வைக்கவும். கொதிக்கும்போது உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போடவும். வெந்தவுடன் அந்த உருண்டைகள் மேல் எழும்பி வரும். இப்போது சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.


அவல் – பொரிகடலை – பேரீச்சை லட்டு

தேவையானவை: அவல் – அரை கப், பொரிகடலை (பொட்டுக்கடலை) – அரை கப், பேரீச்சம்பழம் – 100 கிராம், ஏலக்காய் – 2, நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி,  அவலைப் போட்டு நன்கு பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் அவல், பொரிகடலை, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து… உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


இனிப்பு அவல்

தேவையானவை: அவல், பொடித்த வெல்லம் – தலா அரை கப், தேங்காய்த் துருவல் – கால் கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கரைந்ததும் எடுத்து வடிகட்டி, களைந்து வைத்திருக்கும் அவலில் விட்டு ஊறவைக்கவும். அப்படியே அரை மணி நேரம் மூடி வைக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரிப்பருப்பை வறுக்கவும். அதனுடன் ஊறிய அவலை சேர்த்துக் கிளறவும். சேர்ந்தாற்போல் வந்தவுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.