வீழ்த்துமா லாட்ஜி ?

30 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் முதல் எம்பிவி காரை வெளியிட்ட நிறுவனம், ரெனோ. எஸ்பேஸ் (பிரெஞ்ச் மொழியில் இடம் என்று அர்த்தம்) எனும் எம்பிவி காரை அப்போது வெளியிட்டது ரெனோ. இப்போது இந்தியாவில், எம்பிவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்துக்கொண்டே வரும்போது, ரெனோ சும்மா இருக்குமா என்ன?

டஸ்ட்டருக்கு அடுத்தபடியாக, ரெனோ இந்தியாவில் மார்க்கெட் ஷேரை உயர்த்தப் போகும் காராக வெளிவருகிறது லாட்ஜி. டஸ்ட்டர், 5 சீட்டர் பட்ஜெட் எஸ்யுவி கார் மார்க்கெட்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க, இப்போது 7 சீட்டர் பட்ஜெட் எம்யுவி கார் மார்க்கெட்டில் அந்த இடத்தைப் பிடிக்கத் தயாராகிறது லாட்ஜி. எப்படி இருக்கிறது ரெனோவின் புதிய எம்பிவி? இந்தியச் சாலைகளில் தனி ராஜாங்கம் நடத்திவரும் ஜப்பான் இனோவாவுக்கு, பிரான்ஸின் லாட்ஜி போட்டியை ஏற்படுத்துமா? இரண்டு கார்களில் சிறந்த கார் எது?

டிஸைன்

தற்போது விற்பனையில் இருக்கும் எந்த பட்ஜெட் எம்பிவி காருடனும் லாட்ஜியை ஒப்பிட முடியாது. காரணம், கிட்டத்தட்ட 4.5 மீட்டர் நீளம்கொண்டது லாட்ஜி. இனோவாவைவிட நீளத்தில் வெறும் 87 மிமீ-தான் குறைவான கார் லாட்ஜி. ஆனால், வீல்பேஸ் இனோவாவிடை 60 மிமீ அதிகம். ஒரு பக்கா ஃபேமிலி காருக்கான நீள, அகல, உயர, வீல்பேஸ் அளவுகளுடன் இருப்பதுதான், ரெனோவின் முதல் பலம். டேஸியா லாட்ஜி என வெளிநாடுகளில் விற்பனையாகும் இந்த காரை, எவ்வளவு ஸ்டைலாக மாற்ற முடியுமோ, அந்த அளவுக்கு ஸ்டைல் அம்சங்களைச் சேர்த்து இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது ரெனோ. இருந்தாலும் பெரிய பாக்ஸ் போன்ற காரின் அடிப்படை டிஸைனை மறைக்க முடியவில்லை. மேலும், காரின் பின்பக்கம் வேன்போல இருக்கிறது.

உள்ளே…

எம்பிவி கார்களைப் பொறுத்தவரை, காரின் உள்ளே இடவசதியும், சிறப்பம்சங்களும் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். லாட்ஜிக்கு உள்ளே தலையைக் குனிந்தெல்லாம் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. காரணம், ரூஃப்லைன் அவ்வளவு உயரமாக இருக்கிறது. லாட்ஜியின் டேஷ்போர்டு புதிதுபோல இருந்தாலும், இது டஸ்ட்டரின் ரீ-பிரின்ட்தான் என்பது உற்று நோக்கும்போது தெரிந்துவிடுகிறது. ஏ.சி கன்ட்ரோல் மற்றும் வென்ட்டுகள், கியர் லீவர், ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோஸ் சுவிட்ச்சுகள் அனைத்தும் சமீபத்தில் வெளிவந்த டஸ்ட்டரின் ஆல் வீல் மாடலில் இருந்து இங்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன் பக்க இருக்கைகளும் டஸ்ட்டரில் இருப்பதுபோலவே இருந்தாலும், லாட்ஜியில் குஷனிங் நன்றாக இருக்கிறது. இரட்டை வண்ண டேஷ்போர்டு, கறுப்பு வண்ண சென்டர் கன்ஸோல், ஆங்காங்கே வெள்ளி வண்ணப் பட்டைகள் என டஸ்ட்டரைவிட லாட்ஜியின் டேஷ்போர்டு கொஞ்சம் ஸ்டைலிஷாக இருக்கிறது. முக்கிய மாற்றமாக, டஸ்ட்டரில் ஹேண்ட் பிரேக்குக்கு அடியில் இருந்து ரியர் வியூ கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்யும் வசதியை, டேஷ்போர்டுக்கே கொண்டு சென்றுவிட்டது ரெனோ. வரவேற்கத்தக்க மாற்றம் இது. மூன்று வரிசை இருக்கைகளிலுமே 2 தண்ணீர் பாட்டில் ஹோல்டர்கள், 12 வோல்ட் பவர் சாக்கெட் வைக்கப்பட்டுள்ளன. இதனால், காருக்குள் ஆட்களைவிட ஸ்மார்ட்போன்கள் அதிகம் இருக்கும் இந்த காலகட்டத்தில், சார்ஜ் செய்வதில் அடிதடி பிரச்னை வராது. விமானங்களில் இருப்பது போல முன்பக்க சீட்டுகளுக்குப் பின்னால் ட்ரே டேபிள்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசை பயணிகள் எதாவது சாப்பிட வேண்டும் அல்லது லேப்டாப்பில் வேலை செய்ய வேண்டும் எனும்போது, இந்த ட்ரே டேபிளை விரித்துப் பயன்படுத்தலாம். டேஷ்போர்டில் இருக்கும் க்ளோவ்பாக்ஸில் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி குறைவுதான். மூட முடியாத, பொருட்கள் வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு க்ளோவ்பாக்ஸுக்கும் மேலே தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்பக்கம் இருக்கும் கப் ஹோல்டர்கள் மிகச் சிறிதாக இருக்கின்றன.


லாட்ஜியின் விலை உயர்ந்த வேரியன்ட்டில், பல முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளன. டஸ்ட்டரில் இருந்த டச் ஸ்கிரீன் லாட்ஜியிலும் இடம் பிடித்திருப்பதோடு, யுஎஸ்பி போர்ட், ப்ளூ-டூத் வசதிகள் உள்ளன. வழியைக் கண்டுபிடிக்க ஜிபிஎஸ் வசதி உண்டு. ரியர்வியூ கேமரா மட்டும் அல்லாது, பார்க்கிங் சென்ஸார்களும் உள்ளன. நீளமான இந்த காரை எந்த இடியும் இல்லாமல் பார்க் செய்ய, இந்த இரண்டு வசதிகளுமே இருப்பது செம ப்ளஸ். ஆனால், சிடி ப்ளேயர் ஆப்ஷன் ஏனோ லாட்ஜியில் இல்லை. நீளமான இந்த காரில் ஏ.சி சிறப்பாக வேலை செய்ய வேண்டியது அவசியம். மூன்று வரிசைக்கும் தனித்தனி ஏ.சி வென்ட்டுகள் இருக்கின்றன. இனோவா, லாட்ஜியைத் தவிர, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்த காரிலும் மூன்று வரிசையிலும் தனித் தனி ஏ.சி வென்ட்டுகள் இல்லை.

இடவசதி

7 சீட்டர் காரின் முக்கிய அம்சமான இட வசதியில், லாட்ஜி எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம். இரண்டாவது வரிசை இருக்கைகளில் மூன்று பேர் உட்கார்ந்து செல்லக் கூடிய பெஞ்ச் சீட் வசதியும் உண்டு. இரண்டு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய தனித் தனி சீட் வசதியும் உண்டு. இரண்டாவது வரிசை இருக்கைகள் முதல் வரிசை இருக்கைகள் அளவுக்கு சொகுசாக இல்லை. ஆனால், இடவசதியுடன் இருக்கின்றன. இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கிவிட்டால், மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கும் இடம் பெயரலாம். ஆனால், லாட்ஜியில், மொபிலியோவில் இருப்பது போல, இரண்டாவது வரிசை இருக்கைகளை முன்னும் பின்னும் தள்ளி அட்ஜஸ்ட் செய்ய முடியாது.

7 சீட்டர் கார் என்று விளம்பரப்படுத்திவிட்டு, ஷோரூமுக்குச் சென்று நேரில் பார்த்தவுடன், ‘இதுல எப்படி 7 பேர் உட்கார முடியும்’ என யோசிக்க வைக்கவில்லை லாட்ஜி. கடைசி வரிசை இருக்கைகளில் தாராளமான இடவசதி இருக்கிறது. ஹெட்ரூம் அதிகம் இருப்பதோடு, கால்களை நீட்டி மடக்கி உட்காருவதற்கான இடவசதியும் அதிகமாக இருக்கிறது. சிறுவர்கள் அல்ல… நல்ல உயரமான, திடகாத்திரமான பெரியவர்கள் இரண்டு பேரே இந்த கடைசி வரிசையில் வசதியாக உட்கார முடியும். சிறுவர்கள் என்றால், மூன்று பேரை கடைசி வரிசையில் வசதியாக உட்காரவைக்க முடியும்.

டிக்கி இடவசதியைப் பொறுத்தவரை மூன்று வரிசையில் ஆட்கள் உட்கார்ந்த பிறகும் பொருட்கள் வைக்க 210 லிட்டர் கொள்ளளவு இடம் இருக்கிறது. இது மாருதி எர்டிகா, மஹிந்திரா ஸைலோவைவிட அதிகம். மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கிவிட்டு பொருட்களை வைத்துக்கொள்ள முடியும் என்பதோடு, மூன்றாவது வரிசையில் பயணிகள் இல்லை; பொருட்கள் வைக்க இடம் வேண்டும் என்றால், மூன்றாவது வரிசை இருக்கையை தனியாகக் கழற்றி வெளியே எடுத்துவிடவும் முடியும். ஆனால், இதைக் கழற்ற நான்கு கைகள் வேண்டும்!

இன்ஜின்

ரெனோவின் K9K, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் 12-வது கார், லாட்ஜி.  இந்த செக்மென்ட்டில் டீசல் கார்கள்தான் அதிகம் விற்பனையாகும் என்பதால், டீசல் இன்ஜினுடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது லாட்ஜி. டஸ்ட்டரைப்போலவே லாட்ஜியும் இரண்டு பவர் மாடல்களுடன் விற்பனைக்கு வருகிறது. 85bhp மற்றும் 110bhp என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. 110bhp சக்திகொண்ட மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உண்டு. இதன் மூலம் இந்தியாவின் அதிக சக்திகொண்ட எம்பிவி கார் என்கிற பெருமையைப் பெறுகிறது லாட்ஜி. 2.5 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட இனோவாவின் பவர் 102bhp மட்டுமே!
பவர் அதிகம் இருப்பது பெர்ஃபாமென்ஸில் தெரிகிறது. மிகவும் வேகமாக இருக்கிறது லாட்ஜி. டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘டி4 ஆர்க்கிடெக்சர்’ எலெக்ட்ரானிக் அப்கிரேடு லாட்ஜியிலும் உண்டு. இதனால், காரின் பவர் டெலிவரி மிகவும் சீராக இருக்கிறது.

டஸ்ட்டரைப் போலவே லாட்ஜியிலும் டர்போ லேக் உண்டு. மேலும், கிளட்ச்சும் கொஞ்சம் ஹெவியாக இருப்பதால், நகருக்குள் ஓட்டும்போது சோர்வை ஏற்படுத்துகிறது லாட்ஜி. ஆனால், டிராஃபிக் இல்லாத சாலைகளில் ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், சீறிக்கொண்டு பறக்கிறது. நீளமான, பெரிய எம்பிவி கார் போல இல்லாமல், பவர்ஃபுல் காரை ஓட்டுவது போன்ற உணர்வைத் தருகிறது லாட்ஜி. மேலும், அதிர்வுகள் அற்ற, சத்தம் அதிகம் இல்லாத இன்ஜினாகவும் இருக்கிறது.

கையாளுமை

பல்ஸ், ஸ்காலா தவிர்த்து ரெனோவின் கார்கள் பொதுவாக ஓட்டுதல் தரத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும். வேன் போன்ற இந்தப் பெரிய எம்பிவியில் கார் போன்ற ஓட்டுதல் தரத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஆச்சரியப்படுத்துகிறது லாட்ஜி. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அதிர்வுகளும், ஆட்டமும் காருக்குள் அவ்வளவாகத் தெரியவில்லை என்பதோடு, வீல்பேஸ் அதிகம் என்பதால், ஸ்டெபிளிட்டியிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது. வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் இந்தியாவின் சிறந்த எம்பிவி கார், லாட்ஜி என்று சொல்லலாம்.

முதல் தீர்ப்பு

இனோவாவின் தனியாட்சிக்கு முட்டுக்கட்டை போடும் காராக வந்திருக்கிறது ரெனோ லாட்ஜி. டிஸைனில் இனோவா அளவுக்கு ஸ்மார்ட் இல்லை என்றாலும் இடவசதி, பெர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் மிகச் சிறந்த காராக இருக்கிறது லாட்ஜி. இனோவாவின் விற்பனை உயர உயர… விலையையும் உயர்த்திக்கொண்டே போனது டொயோட்டா. 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த இனோவா, எந்தப் பெரிய மாற்றமும் இல்லாமல் இப்போது 18 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், லாட்ஜி 9 – 13 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வரவிருக்கிறது. குறைந்த விலை ஒன்றே போதும். லாட்ஜியை மாஸ் காராக மாற்றிவிடும்!