வெஜ் மற்றும் நான் வெஜ் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை:
 கறிவேப்பிலை – 2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8 (இரண்டாக உடைத்து போடவும்)
கடலைப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, புளிக்கரைசல் ஊற்றி உப்புகளோடு, பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் மஞ்சள் தூள் சேர்த்து  மிதமான தீயில் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன்பு கறிவேப்பிலைப் பொடி தூவி, இறக்கி மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துப் பரிமாறவும். இந்தக் குழம்பு தொக்கு பதத்தில் இருக்கும். எனவே, அளவோடுப் பரிமாறவும்.

பாகற்காய் வேர்க்கடலைக் குழம்பு

தேவையானவை:
 பாகற்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 10 பல் (முழுவதுமாகப் போடவும்)
பெருங்காயம் – 1 சிட்டிகை
தேங்காய் – அரை மூடி (அரைத்து வைக்கவும்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை வேர்க்கடலை – 100 கிராம்
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் முழு வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். வேர்க்கடலையை இத்துடன் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பாதி வேக்காட்டில் பாகற்காயைச் சேர்த்து வேக விட்டு, புளிக்கரைசல் ஊற்றி பச்சை வாசனை போனதும், அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

காய்கறி கோலா உருண்டை

தேவையானவை:
 கேரட் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பீன்ஸ் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு – 100 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கவும்)
முட்டைகோஸ் – 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 25 கிராம்
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கவும்)
பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன் லவங்கப்பட்டை,
கிராம்பு, ஏலக்காய் – தலா 2
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – அரை டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
தேங்காய்த்துருவல் – அரை மூடி (அரைத்துக் கொள்ளவும்)
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குடன், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிட்டு இறக்குவதற்கு முன், மற்ற காய்களைச் சேர்த்து 2 நிமிடம் கழித்து வடித்து வைக்கவும். இதில் தலா ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள், சோம்புத்தூள், பாதியளவு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இதை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளித்து மீதம் இருக்கும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். இத்துடன், மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், கரம்மசாலாத் தூள், சேர்க்கவும். பிறகு, அரைத்த தேங்காய் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கலவையின் பச்சை வாசனை போனதும், பொரித்த காய்கறி உருண்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பாண்டிச்சேரி இறால் குழம்பு

தேவையானவை:
 இறால் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 6 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்) + 2 (தாளிக்க)
தேங்காய் – கால் மூடி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 50 கிராம் (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1 மீடியம் சைஸ்

செய்முறை:
காய்ந்த மிளகாய், தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகத்தை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மீதம் இருக்கும் சீரகம், காய்ந்த மிளகாய்  சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மஞ்சள் தூள், இறால், தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு சிம்மில் வைத்து வேக விடவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கி, மூடி வைத்து பிறகு பரிமாறவும்.

கத்திரிக்காய்-கருவாட்டுக் குழம்பு

தேவையானவை:
 நெத்திலி கருவாடு – கால் கிலோ
கத்திரிக்காய் – கால் கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் (உரிக்கவும்) – 50 கிராம்
தக்காளி – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
தேங்காய் – கால் மூடி (துருவிக் கொள்ளவும்)
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, முழு வெங்காயம், முழுப் பூண்டு, கறிவேப்பிலை சிறிது, மல்லித்தூள் (தனியாத்தூள்), தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைக்கவும். கருவாட்டை சுடுதண்ணீரில் இரண்டு முறை கழுவி எடுத்து வைக்கவும். வாணலியில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, கத்திரிக்காய் உப்பு, சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, போட்டு, பச்சை வாசனை போக சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். புளிக்கரைசலை ஊற்றி, கருவாடு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து கொதிக்கவிட்டு இறக்கினால், சூப்பர் கருவாட்டுக் குழம்பு ரெடி.

மட்டன் எலும்புக் குழம்பு

தேவையானவை:
 மட்டன் எலும்பு – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம் (இரண்டாக நறுக்கவும்)
தக்காளி – 3 (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (இரண்டாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
கசகசா- 1 டேபிள்ஸ்பூன்
லவங்கப்பட்டை- 4
கிராம்பு- 4
மிளகு – அரை டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 2
சோம்பு – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய் இல்லாமல் தலா 2 லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, கசகசா, சோம்பு முழுவதும், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைக்கவும். அதே  வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன வதக்கவும். இதில் மட்டன் எலும்புகளைப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இத்துடன் அரைத்த கலவையைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் மீடியம் தீயில் மூடி போட்டு வேக வைக்கவும். இறக்கும் போது கொத்தமல்லித்தழைச் சேர்த்துப் பரிமாறவும்.

நண்டுக் குழம்பு

தேவையானவை:
 நண்டு – 4
வெங்காயம் பெரியது – 3 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
சோம்பு – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
தேங்காய், சோம்பு பாதியளவு, பச்சை மிளகாய், பாதியளவு கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மீதம் இருக்கும் சோம்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். இதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள், நன்கு சுத்தம் செய்த நண்டு சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி, குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வேக விடவும். ஐந்து நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலா சேர்த்து சிம்மில் பத்து நிமிடம் மூடி போட்டு வேக வைத்தால் நண்டுக் குழம்பு ரெடி.