வேலை மாறுகிறீர்களா? முதலில் நிதி சார்ந்து திட்டமிடுங்கள்!

கேஷ், தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் திறமையான பணியாளன். அனைத்து விஷயங்களிலும் தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்வான். வேலையில் படுசுட்டியாக இருந்தாலும், குடும்பப் பொருளாதாரத்தில் கோட்டைவிட்டுவிடுவான்.

சேமிப்பதில் கொஞ்சம்கூட அக்கறை கிடையாது அவனுக்கு. சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்துக்குக் கொடுத்தது போக, மீதியுள்ள பணத்தையெல்லாம் செலவு செய்தே வீணடிப்பான்.

இப்படியே பல வருடங்கள் ஓடிவிட, மகேஷுக்கு திருமணமும் நடந்துமுடிந்தது. திருமணத்துக்குப் பிறகு முன்பு போல, அவனால் அதிகமாகச் செலவு செய்ய முடியவில்லை. இருப்பினும் பொறுப்புகளும் எதிர்காலத் தேவைகளும் அதிகரித்ததால் தற்போதைய வருமானம் போதவில்லை.

இந்த நிலையில் குடும்பப் பொருளாதார நிலையைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், 5,000 ரூபாய் சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காகச் சட்டென்று அடுத்த வேலைக்குத் தாவினான். புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடத்தில் ஒரு சில மாதங்களிலேயே ஏதோவொரு மனக்கசப்பு ஏற்பட, அந்த வேலையும் விடவேண்டிய சூழ்நிலை. இப்போது வேலையில்லை என்கிற வருத்தத்தைவிட, கையில் காசில்லை என்கிற கஷ்டம் அவனை வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

மகேஷை போலத்தான் நம்மில் பெரும்பாலானவர்களும் இருந்து வருகிறோம். வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, வேலை செய்யும் இடத்தில் சம்பளத்தைக் குறைந்த அளவே அதிகரிக்கிறார்கள் என்கிற மாதிரியான பல காரணங்களால் வேலையை மாற்றுவதென்பது சர்வசாதாரணமாக நடக்கும் விஷயமாக மாறிவிட்டது. ஆனால், அப்படி வேலையை மாற்றுவதற்கு முன்பு, குடும்பப் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதையும் கவனிப்பது அவசியம். அப்படிக் கவனிக்கும்போது, குடும்பப் பொருளாதாரம் வலுவிழந்து காணப்பட்டால், வேலையை மாற்றுவதற்கு முன்னர் அதைச் சரி செய்துவிட்டு மாற்றுவது அவசியம். வேலை மாற்றுவதற்கு முன்னர் நிதி சார்ந்து எப்படித் திட்டமிடுவது என்பது பற்றி விரிவாகச் சொல்கிறார் நிதி ஆலோசகர் ஆர்.ராதாகிருஷ்ணன்.

“இன்றைய மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் சம்பளத்துக்காக வேலை மாறுவதென்பது அவசியமானதுதான். ஒரு தனிநபரின் தேவை, சூழ்நிலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எதிர்காலத் தேவை, குடும்பம் எனப் பல்வேறு காரணிகள் வேலை மாறுவதற்குக் காரணமாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், வேலை மாற்றம் என்பது வேலை செய்பவருக்கு மட்டுமல்லாது அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது. மேலும், வேலை மாற்றத்தினால் வேறு ஊர்களுக்குச் செல்லும் நிலை வந்தால் குழந்தைகள் நலனில், அவர்களுக்கான தேவைகளில் பொருளாதார ரீதியாக ஏற்படும் மாற்றங்களும் அதிகமே. அதனால் ஒருவர் வேலை மாறும்போது பொருளாதார ரீதியாகத் திட்டமிடுவது அவசியம்.

9 மாத தொகை கையிருப்பு அவசியம்!

வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்திருந்து பயன்படுத்துவது போல, ஆறு மாதம் முதல் ஒன்பது மாதத்துக்குத் தேவையான செலவுத் தொகையை வங்கியில் இருப்பு வைத்துக் கொள்வது அவசியம். இப்படித் திட்டமிட்டுச் சேமித்திருக்கும் பட்சத்தில் வேலை மாறும்போது கையில் காசில்லையே என்று கவலை படவேண்டிய அவசியம் இருக்காது. சில நேரங்களில் நமது எதிர்பார்ப்புக்கு மாறாக புதிய வேலை பிடிக்காமல், அந்த வேலையை உடனே விடவேண்டி வரலாம் அல்லது சரியான அடுத்த வேலை கிடைக்கச் சில மாதங்கள் தேவைப்படலாம். இதுபோன்ற சமயங்களில் வங்கி சேமிப்பு இருந்தால் வேலை கிடைப்பதில் சிக்கல் என்றாலும் நிம்மதியாக இருக்கலாம்.

இன்ஷூரன்ஸ் இல்லாமல் வேலை மாறாதீர்!

எது நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ, எல்லா நேரங்களிலும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் நம்மிடம் இருந்தேயாக வேண்டும். அதுவும் வேலை மாறும்போது, வேலையை இழக்கும்போது என்கிற சூழ்நிலைகளில் கட்டாயம் பாலிசிகள் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது, அந்த நிறுவனத்தின் குரூப் லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்கள் இருக்கலாம்; இல்லாமல் போகலாம். அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், தனியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் தனிநபர் ஹெல்த் பாலிசி ஒன்றை எடுத்துக் கொள்வது அவசியம். வேலை மாறுவதற்கு முன்பு போதுமான அளவுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொண்ட பாலிசி இல்லையென்றால், பாலிசியை எடுத்துக் கொண்டபிறகு வேலை மாறுவதே புத்திசாலித்தனம். ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்கிறபோது இன்னும் கொஞ்சம் அதிகமான அக்கறை தேவை. காரணம், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதைக் கவனித்து, இருக்கிறதென்றால் வேலைமாற்றத்தை நடைமுறைபடுத்துங்கள்.

குடும்பத்துடன் கலந்தாலோசித்தல்!

வேலை மாற்றம், ஊர் மாற்றம் என்பவை குடும்பத்திலுள்ள அனைவரையும் மாற்றத்துக்கு உள்ளாக்கும். வேலை மாற்றத்தின் காரணமாக ஊரை மாற்றிச் செல்லும் சூழ்நிலை உருவானால், நீங்கள் மட்டும் தனியாகச் செல்வீர்களா அல்லது குடும்பத்துடன் செல்வீர்களா என்ற முடிவுகள் எடுக்கவேண்டி வரலாம். தனியாகச் செல்கிறீர்கள் என்று முடிவானால், இரண்டு இடத்தில் உண்டான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படியிருக்கும்போது வேலை மாற்றம் இத்தகைய சூழலில் தேவையானதா என்பதைப் பொருளாதார அளவில் ஆய்வு செய்யவேண்டும். ஒருவேளை சம்பளம் அதிகம் கிடைத்து குடும்பத்துடன் இடம்பெயரும் வாய்ப்பு கிடைத்தால் நலம்.

இப்படித்தான் சென்னையில் வேலை செய்துவந்த என் நண்பன் ராஜாவுக்கு வேலை மாற்றம் காரணமாக வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. புதிய நிறுவனம் என்பதால், வெளியூருக்குச் சென்றால்தான் வேலை என்கிற நிபந்தனையை ஏற்கவேண்டி இருந்தது. ஆனாலும், அவனுக்கு நல்ல சம்பளத்தைக் கொடுத்தே வெளியூருக்கு அனுப்பி வைத்தது அவனது நிறுவனம். ஆரம்பத்தில் மும்பைக்குத் தனியாகச் சென்ற அவன், தனது திறமையை நிரூபித்து மூன்று மாதங்களில் சம்பள உயர்வை அதிகப்படுத்திக் கொண்டான். அதன்பிறகு சில மாதங்களில் மும்பையில் வாடகைக்கு வீடு பிடித்துக் குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக வாழ்ந்து வருகிறான். சமீபத்தில் அவனைச் சந்தித்துப் பேசியபோது, வேலையை மாற்றிய தருணத்தில் குடும்பத்தின் பொருளாதார நிலை குறித்து யோசித்து, அதைக் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததால்தான் இன்று என்னால் நிம்மதியாக வாழ்க்கையை வாழ முடிகிறது என்றான். ராஜா செய்ததை நாமும் தாராளமாகச் செய்யலாம்.

செலவுகளில் சங்கடம் வராமலிருக்க!

நமது வேலை மாற்றம் குழந்தைகளைப் பாதிக்காதவாறும், இவர்களின் நிதி சார்ந்த தேவைகளுக்கு இடையூறு இல்லாதவாறும் பார்த்துக் கொள்வது அவசியம். உதாரணத்துக்கு, வேலை காரணமாக குழந்தைகளுக்கான பள்ளியையும் மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். அப்போது கூடுதல் கல்விக் கட்டணத்தைக் கட்டவேண்டிய நிலையும் உண்டாகலாம். அதனால் வேலை மாறுவதற்கு முன்னர் குழந்தைகளுக்கான கல்வி கட்டண விஷயத்திலும் கச்சிதமான திட்டம் அவசியம். அதேபோல ஏரியா அல்லது ஊர் மாறும்போது வீட்டுச் சாமான்களை மாற்றுவதற்கான செலவுகளும் இருக்கத்தான் செய்யும் அதற்கான நிதியும் முன்னமே சேமித்திருக்க வேண்டியது அவசியம். ஒரு சில நிறுவனங்கள் இந்தச் செலவுகளைத் தனது ஊழியர்களுக்காக ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கான தொகையை வழங்காது.

வேலை மாறியதும்!

வேலைக்குச் சேர்ந்தவுடன் முதல் நாளிலிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள். கையில் உள்ள சேமிப்பானது வேலையில் சந்திக்க இருக்கும் சவால்களை, தைரியமாக எதிர்கொள்ள உதவும்.

பெரும்பாலானவர்கள் வேலை மாறுவது அதிகச் சம்பளத்துக்காகத்தான். ஆனால், சில நிறுவனங்கள் வழங்கும் ஆஃபர்களில் உண்மையான சம்பள உயர்வானது இருக்காது. அதனால் ஆஃபர் லெட்டரை வாங்கியதும் அதைப் படியுங்கள். உங்கள் மாத வருமானம், ஆண்டு வருமானம் எந்த வகையில் அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயுங்கள். அவை, தற்போதுள்ள வருமானத்தைவிட எந்த அளவுக்கு  மாறியுள்ளது என்பதை ஆராயுங்கள். ஏனென்றால் வருமானப் பிரிவுகள் கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும்.’’

இனியாவது வேலை மாறுகிறவர்கள் இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை செக் லிஸ்ட்-ஆக வைத்து செயல்படுவது நல்லது!


கலகல ட்விட்டர் சம்வாத்!

ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரி டிக் கோஸ்டொலோ, பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வாரம் சந்தித்து ‘ட்விட்டர் சம்வாத்’ என்கிற புதிய சேவையைத் தொடங்கியிருக்கிறார். இந்த சேவையின் மூலம் இந்தியாவின் முக்கிய துறைகள், அமைச்சகங்கள், பிரதமர் உட்பட இந்திய  தலைவர்கள் 16 பேர் நேரடியாக மக்களுடனும், அமைச்சகங்களுடனும் தங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளலாம். மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக இந்த ட்விட்டர் சம்வாத் தொடங்கப்பட்டுள்ளதாக கோஸ்டொலோ தெரிவித்திருக்கிறார். தலைவர்களே, நல்ல தகவல்களை எதிர்பார்க்கிறோம்!