வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?

வெயிலில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் என்றால் எல்லோருக் கும் தெரியும் அது ‘வைட்டமின் டி’ என்று. எலும்பு உறுதி, மூட்டுவலி என எலும்பு தொடர்பான பிரச்னைக்கு மட்டும் அல்ல, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி மிகவும் அவசியம்.

இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின். இதனால், உடலில் சேமித்துவைக்கப்பட்டு, தேவையானபோது பயன்படுத்தப்படும். மற்ற வைட்டமின்களைவிட ‘டி’ மிகவும் ஸ்பெஷலானது. இது ஒரு ப்ரோ ஹார்மோனாகவும் செயல்படுகிறது. பல்வேறு நோய்களுக்கான அடிப்படைக் காரணங்களில் வைட்டமின் டி குறைபாடும் ஒன்றாக இருக்குமா என உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.

நம் உடலில் உள்ள எலும்புகளில் பல கோடி புது செல்கள் தினமும் அழிந்து,  புது செல்கள் பிறக்கின்றன. குழந்தைப் பருவத்தில், சிறியதாக இருக்கும் எலும்புகள், வயது அதிகரிக்கும்போது பெரிதாகிறது. எலும்பின் இந்த வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. கால்சியத்தை எலும்புகள் கிரகிக்க வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி இல்லை என்றால், கால்சியம் கிரகிக்கப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால், எலும்புகள் பலவீனம் அடையும்.

வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்?

எலும்பின் உறுதித்தன்மை குறையும். குழந்தைகளுக்கு, கால்சியம் சத்து கிடைக்காததால், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், எலும்பு முறையற்ற வகையில் வளரும். சில இடங்களில், விநோதமாக நீட்டிக்கொண்டும், சில இடங்களில் சுருங்கியும்  காணப்படலாம்.

குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் வரும் இந்த நோய்க்கு ‘ரிக்கெட்ஸ்’ என்று பெயர்.

பெரியவர்களுக்கு, எலும்புகள் முறையில்லாமல் வளரும் நோயான ஆஸ்டியோமலேசியா, எலும்பு அடர்த்திக் குறைதல் நோயான ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நோய்கள் வரும். எலும்பு மூட்டு இணைப்புகளில் கீல்வாத நோயான ஆர்த்ரைடிஸ் வர வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும் ஹார்மோன் இன்சுலின். இன்சுலின் சீராக சுரக்கக் காரணமான பான்கிரியாடிக்-பி எனும் செல், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால், இன்சுலின் சுரப்பில் பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது. கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் போன்றவை வருவதற்கும் வைட்டமின் டி குறைபாடு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

வைட்டமின் டி எவ்வளவு தேவை?

வைட்டமின் டி உடலில் அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது. அதனால், தினமும் சீரான அளவு வைட்டமின் டி பெறுவதே சிறந்தது. ஒரு நாளைக்குக் குழந்தைகளுக்கு 200 – 400 இன்டர்நேஷனல் யூனிட் (இ.யூ), வளர் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கு சுமார் 400 இ.யூ வரை தேவை.

வைட்டமின் டி பெறுவது எப்படி?

கோடையில் காலை 7.30 முதல் 9 மணி வரை மற்றும் மாலை 4.30 – 6 மணி வரை நிலவும் சூரிய வெளிச்சம் அரை மணி நேரம் வரை உடலில் பட்டால் போதும்.

மழைக்காலங்களில் காலை 11 முதல் மதியம் 3 மணி வரை நிலவும் வெயில் நேரத்தில் அரை மணி நேரம் உலவலாம். வைட்டமின் டி குறைபாட்டை, ரத்தப் பரிசோதனை மூலம் அறிய முடியும். நம் உடலில் வைட்டமின் டி 30  நேனோகிராம் /மி.லி என்ற அளவைவிட அதிகமாக இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால், மருத்துவர் பரிந்துரைப்படி, வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

எதில் எவ்வளவு?

1 கப் (250 மி.லி) பசும்  பால் – 103 – 105 இ.யூ.

1 கப் சோயா பால் – 88 இ.யூ.

முக்கால் கப் (175 கிராம்) யோகர்ட் –  58 – 71 இ.யூ.

முட்டையின் இரண்டு மஞ்சள்கரு  –  57 – 88 இ.யூ.

75 கிராம் சமைத்த மீன்  – 351- 497 இ.யூ.

எதில் கிடைக்கிறது?

வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து அதிக அளவிலும், சில வகை உணவில் இருந்து சிறிதளவும் கிடைக்கிறது. வைட்டமின் டி-யில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வைட்டமின் டி2, டி3-யில் இருந்துதான், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி பெறப்படுகிறது.

வைட்டமின் டி2

தாவர வகை உணவுகளில் இருந்து எர்கோஸ்டீரால் (Ergosterol) என்ற சத்து ப்ரோ வைட்டமின் டி2-வாகக் கிடைக்கிறது. இது உடலில் சென்று முதலில் எர்கோகால்சிஃபேரோல் (Ergocalciferol) எனும் நிலைக்குச் சென்று, வைட்டமின் டி2-வாக மாறுகிறது. பின்னர், இந்த டி2-வை நம்முடைய உடல் டி3-ஆக மாற்றி சேமித்துவைக்கிறது.

வைட்டமின் டி3

சூரிய ஒளியில் இருந்துவரும் புற ஊதாக் கதிர் – பி நம் சருமத்தில்படும். அந்தக் கதிரை சருமம் கல்லீரலுக்கு அனுப்பும். அங்கு சில ரசாயன மாற்றங்கள் நடந்து, சிறுநீரகத்துக்கு அனுப்பப்படும். அங்குதான், உடல் பயன்படுத்தக்கூடிய வகையில் 1,25 டைஹைட்ராக்சி வைட்டமின் டி-ஆக மாற்றப்பட்டு, பின்னர் உடல் பயன்படுத்தக்கூடிய வைட்டமின் டி-யாகச் செயல்படும்.