ஸ்ட்ராபொரி மற்றும் கேக் ரெசிப்பிக்கள்

ஸ்ட்ராபெரி சாண்டா

தேவையானவை:
 ஸ்ட்ராபெரி – 5
வைப்டு க்ரீம் – 1 கப் (whipped cream)
மினி சாக்லேட் சிப்ஸ்
– சிறிதளவு

செய்முறை:
ஸ்ட்ராபெரியின் தலைப்பகுதியில் உள்ள காம்பைக் கிள்ளி எடுக்கவும். இந்த இடைவெளியில் வைப்டு க்ரீமை நிரப்பவும். ஸ்ட்ராபெர்ரியை குறுக்காக நறுக்கி இரண்டு துண்டுகளாக்கவும். அவற்றின் இடையில், படத்தில் காட்டியுள்ளது போல வைப்பிங் க்ரீமை வைக்கவும். இரண்டு பாகங்களையும் இணைத்து சாக்லேட் சிப்ஸ்களை ஒட்டி கண்கள் செய்யவும். ஸ்ட்ராபெர்ரியின் அடிப்பாகத்தை தரையில் நிற்க வைப்பதற்கு ஏதுவாக, சமமாக சிறிது நறுக்கிக் கொள்ளவும். சாண்டா க்ளாஸ் தாத்தா உருவில் உள்ள ஸ்ட்ராபெர்ரி சாண்டா ரெடி. இதை குழந்தைகள் ரசித்துச் சாப்பிடுவார்கள்.

பைனாப்பிள் அப் சைட் டவுன் கேக்

தேவையானவை:
அன்னாசிப்பழம் – 1
(தோல் நீக்கி வட்டமாக நறுக்கவும்)
ஸ்வீட் இல்லாத செர்ரிப்பழம் – 6

கேரமல் சாஸ் செய்ய
பழுப்புச் சர்க்கரை – 1 கப்
வெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்

கேக் செய்ய:
மைதா மாவு – ஒன்றரை கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – அரை கப்
+ சிறிதளவு (பேனில் தடவ)
சர்க்கரை – 1 கப்
தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – அரை கப்
பைனாப்பிள் எசன்ஸ் – 2 டிராப்
அன்னாசிப்பழ ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அடுப்பில் ஒரு பேனை வைத்து பழுப்புச் சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கிளறி, லேசாக கொதிக்க ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைக்கவும். இதுதான் கேரமல் சாஸ். இதை வெண்ணெய் தடவிய கேக் பேனில் ஊற்றவும். இதன் மேல் அன்னாசிப் பழத்துண்டுகளை, உங்கள் விருப்பம் போல வட்டமாக வைக்கவும். அன்னாசிப்பழத் துண்டுகள் நடுவிலும், மற்றும் ஒவ்வொரு துண்டுக்கு இடையிலும், செர்ரி பழங்களை வைக்கவும்.
ஒரு பவுலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து வைக்கவும். மற்றொரு பவுலில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கேக் செய்ய கொடுத்தவற்றில் மீதம் இருக்கும் அனைத்தையும் இதனுடன் சேர்க்கவும். இதனை சலித்த வைத்துள்ள மாவுக் கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி விழாமல் கலக்கவும்.
இதை ஏற்கெனவே அலங்கரித்து வைத்துள்ள  அன்னாசித் துண்டுகள் மேலே  ஊற்றவும். பேக்கிங் அவனை 40 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து அதன் உள்ளே கேக் டிரேவை வைத்து மூடி, 45 நிமிடம் 350 டிகிரிக்கு வைத்து வேக விடவும். இடையே டூத் பிக்கால் கேக்கை குத்தி பார்த்து மாவு ஒட்டாமல் வந்தால் ரெஸ்டிங் மோல்டில் சிறிது நேரம் விட்டு பின் வெளியே எடுத்து ஆறவிடவும்.

எக்லெஸ் ஜீப்ரா கேக்

தேவையானவை:
மைதா மாவு – ஒன்றரை கப் + சிறிது (தூவ)
கெட்டியான தயிர் – 1 கப்
சர்க்கரை பவுடர் – 1 கப்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்
வெனிலா எசன்ஸ் – 2 டிராப்
கோக்கோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – அரை கப் (அல்லது தேவையான அளவு)
வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை:
பேக்கிங் அவனை 350 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யவும். 6 இஞ்ச் கேக் பேனில் வெண்ணெய் தடவி, சிறிது மைதா மாவை இதன் மேல் தூவவும்.
ஒரு பவுலில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து வைக்கவும். மற்றொரு பவுலில் தயிர், வெனிலா எசன்ஸ், சர்க்கரை பவுடர், எண்ணெய், பால் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். இதை இரண்டு பவுலில் தனித்தனியாக ஊற்றவும். இதில் ஒரு பவுலில் கோக்கோ பவுடரை சேர்த்து நன்கு கலக்கவும். இனி, கேக் பேனில் முதலில் ப்ளைன் மாவை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து ஊற்றவும். இதன் மேல் கோக்கோபவுடர் கலந்த மாவை இரண்டு டேபிள்ஸ்பூன் ஊற்றவும். இப்படி இரண்டு மாவையும் ஒன்றின் மேல் ஒன்றாக ஊற்றிக்கொண்டே வரவும். இதனை ப்ரீ ஹீட் செய்த அவனில் 45 நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும். கேக் வெந்ததும் ரெஸ்ட்டிங் மோடில் பத்து நிமிட வைத்து வெளியே எடுத்து ஆற விட்டுப் பரிமாறவும்.