ஹெல்தி ஸ்வீட்ஸ்

தினை அல்வா

தேவையானவை:
தினை மாவு – ஒரு கப்
சர்க்கரை இல்லாத கோவா – அரை கப்
நெய் – கால் கப்
வெல்லம் – ஒரு கப்
முந்திரி, திராட்சை –
தேவையான அளவு
காய்ச்சிய பால் – கால் கப்

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் தினை மாவையும் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து தனியாக வைக்கவும்். வெல்லத்தைக் கரைத்துத், வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி கம்பிப் பாகு போல வரும் வரை காய்ச்சவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வறுத்த மாவு, பால், சர்க்கரை இல்லாத கோவா சேர்த்துக் கிளறவும். வெல்லப் பாகைச் சேர்த்துக் கிளறவும். இதில் சிறிது, சிறிதாக நெய் சேர்த்து, வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறி, முந்திரி, திராட்சை தூவி இறக்கிப் பரிமாறவும்.

தினை பாதாம் பர்பி

தேவையானவை:
தினை மாவு – ஒரு கப்
பாதாம் பவுடர் – கால் கப்
சர்க்கரை இல்லாத கோவா – கால் கப்
சர்க்கரை – ஒன்றேகால் கப்
நெய் – கால் கப்

செய்முறை:
தினை மாவை ஒரு மேசைக்கரண்டி நெய்விட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி கம்பிப்பாகு வரும்வரை காய்ச்சவும். அதனுடன் தினைமாவு, பாதாம் பவுடர், சர்க்கரை இல்லாத கோவா சேர்த்துக் விடாமல் கிளறவும். இத்துடன் நெய் சேர்த்துக் கிளறி, வாணலியில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டு, விருப்பமான வடிவில் சிறு சிறு துண்டுகளாகப் போட்டால், தினை பாதாம் பர்பி தயார்.

குறிப்பு:
பாதாம் பவுடருக்குப் பதில், ஊறவைத்து அரைத்த பாதாம் விழுதைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

வரகு தேங்காய் பர்பி

தேவையானவை:
வரகு மாவு – அரை கப்
சர்க்கரை – 2 கப்
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
நெய் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
முந்திரி – கால் கப்

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் வரகு மாவு, தேங்காய்த்துருவலைத் தனித்தனியே வறுத்து தனியாக வைக்கவும். சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சவும். பாகு நன்கு கொதித்து வரும்போது, தேங்காய்ப்பூ, வரகு மாவு சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். தேய்ங்காய்த்துருவல் ஒட்டாமல் வரும்போது முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிட்டு சிறு சிறு வில்லைகளாக துண்டுகள் போட்டால் வரகு, தேங்காய் பர்பி தயார்.

ராகி அல்வா

தேவையானவை:
ராகி மாவு – ஒரு கப்
பால் பவுடர் – 4 டேபிள்ஸ்பூன்
தூளாக்கிய கருப்பட்டி – ஒன்றரை கப்
முந்திரி பாதியாக உடைத்தது – கால் கப்
நெய் – கால் கப்

செய்முறை:
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி, ராகி மாவை நன்கு வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில், சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும். கருப்பட்டியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் ராகி மாவு, பால் பவுடர் சேர்க்கவும். அதனுடன் கருப்பட்டிப் பாகு சேர்த்து விடாமல் கிளறவும். மாவு பாதி வெந்ததும், மீதமிருக்கும் நெய் சேர்த்துக் கிளறவும். இத்துடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி, அல்வா ஒட்டாமல் வரும்போது இறக்கிவிடவும். சூடான சுவையான சத்தான ராகி அல்வா ரெடி.

தினை டைமண்ட் கட்ஸ்

தேவையானவை:
கோதுமை மாவு – கால் கப்
தினை மாவு – அரை கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
காய்ச்சிய பால் – 4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத்
தேவையான அளவு

செய்முறை:
சர்க்கரையும், நெய்யையும் சேர்த்து நன்கு நுரைக்கக், கலக்கவும். தினை மாவை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை, வறுத்து ஆறவிட்டு, சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கோதுமை மாவு, சர்க்கரை கலவை சேர்த்து, பால் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து, உருண்டை அளவு மாவு எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டிக் கொள்ளவும். அதை டைமண்ட் வடிவத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் தினை டைமண்ட் கட்ஸ் ரெடி. மைக்ரோஅவன் வைத்துள்ளோர்
180 டிகிரியில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

குதிரைவாலி சாக்லேட் கேக்

தேவையானவை:
குதிரைவாலி மாவு – ஒரு கப்
கோக்கோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – கால் கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – அரை கப்

செய்முறை:
குதிரைவாலி மாவை ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, வாசனை வரும் வரை வறுத்துத் தனியாக வைக்கவும். கோக்கோ பவுடர், பால் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதில் பால், சர்க்கரையைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியில் குதிரைவாலி மாவு மற்றும் பால் கலவையை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இதில் சர்க்கரைப் பாகைச் சேர்த்து சிறிதுசிறிதாக நெய் ஊற்றி, வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் சின்னச்சின்ன வில்லைகளாக வெட்டினால் சாக்லேட் கேக் தயார்.
தினை குலோப்ஜாமூன்

தேவையானவை:
சர்க்கரை இல்லாத கோவா – 200 கிராம்
தினை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – ஒன்றரை கப்
ரோஸ் எசன்ஸ் – 2 சொட்டுகள் அல்லது ஏலக்காய்த்தூள் சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:
கோவாவை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் தினைமாவு சேர்த்து, கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். அழுத்தி பிசைய வேண்டாம். தேவைப்பட்டால், சிறிது பால் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். சர்க்கரையை பாகாக காய்ச்சி வைத்து கொள்ளவும். பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்தெடுத்து ஜீராவில் போட்டு எடுத்தால், குலோப்ஜாமூன் ரெடி. ஜீராவில் ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.

கம்பு ரவா லட்டு

தேவையானவை:
கம்பு ரவை – ஒரு கப்
பொட்டுக்கடலை – அரை கப்
நாட்டுச் சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – கால் கப்
முந்திரி – தேவையான அளவு

செய்முறை:
சுத்தம் செய்த கம்பு ரவையை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும். மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையையும் மாவாக அரைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் பொடித்த கம்பு ரவை, பொட்டுக்கடலை மாவு, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 சுழற்று சுழற்றி எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி, தயார் செய்து வைத்துள்ள மாவில், சிறிது சிறிதாக சேர்த்துக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். கம்பு ரவை லட்டு தயார்.

வரகு மில்க் சாக்லேட்

தேவையானவை:
வரகு மாவு – 4 டேபிள்ஸ்பூன்
துருவிய மில்க் சாக்லேட் – ஒரு கப்
பொடித்த பாதாம்  –
2 டீஸ்பூன்
வெண்ணெய் –
2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – 2 டீஸ்பூன்

செய்முறை:
வரகு மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். அதன்மேல் ஒரு பாத்திரம் வைத்து மில்க் சாக்லேட் துருவல் போட்டு உருக விடவும். இத்துடன் வரகு மாவு, பொடித்து வைத்துள்ள பாதாம், வெண்ணெய் சேர்த்து, நன்கு கிளறவும். இதில் பால் சேர்த்துக் கிளறி, சாக்லேட் அச்சில் ஊற்றி, ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிர விடவும். பிறகு, அச்சில் இருந்து எடுத்தால், வரகு மில்க் சாக்லேட் தயார்.

சாமை – மோத்தி சூர் லட்டு

தேவையானவை:
சாமை மாவு – அரை கப்
கடலை மாவு – அரை கப்
சர்க்கரை – ஒரு கப்
முந்திரி பொடித்தது – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சோடா உப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
சாமை மாவு, கடலை மாவு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும். அதனுடன் சோடா உப்பு சேர்த்து, மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியின் நடுவில் சற்று தூக்கி பிடித்து மாவை ஜல்லிக்கரண்டியில் விடவும். துவாரங்கள் வழியாக மாவு எண்ணெயில் விழுந்ததும் பொரித்து எடுத்து கொள்ளவும். பொரித்த பூந்திகள் மீது நீர் தெளித்து வைக்கவும். சர்க்கரையை பிசுக்குப் பதத்திற்கு காய்ச்சி, அதனுடன் ஏலப்பொடி, முந்திரி சேர்த்து பொரித்து வைத்துள்ள பூந்திகளைப்  போட்டுக் கிளறி, உருண்டைகள் பிடிக்கவும். சாமை மோத்தி சூர் லட்டு தயார்.