உயிரைத் தவிர அனைத்தையும் மீண்டும் தருவேன்: தமிழர்களிடம் உருகிய ராஜபக்சே!

[wysija_form id=”1″]

கொழும்பு: போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தருவதாக அதிபர் ராஜபக்சே தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, ராஜபக்சே தலைமையில் அதிபர் மாளிகையில் நடைபெற்றது.

வடக்கின் பல பகுதிகளில் இருந்து ரயில் மூலம் அழைத்து வரப்பட்ட தமிழ் மக்களிடம் தங்க நகைகளை ராஜபக்சே வழங்கினார்.

அப்போது பேசிய ராஜபக்சே, முப்பதாண்டு கால யுத்தத்தில் மிக மோசமாக  பாதிக்கப்பட்டவர்கள் நீங்களே. மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

முப்பது வருட துரதிஷ்டமான சூழ்நிலையை முடிவுக்குக்கொண்டு வருவதற்காக நாம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தோம். அந்தப் பிரயத்தனம் தோல்வியுற்ற நிலையிலேயே அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய நேரிட்டது.

எனினும், இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தம். புலிகள் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டிருந்தனர். அந்த நிலையிலிருந்து நாம் உங்களை மீட்டுள்ளோம்.

நீண்டகாலத்திற்குப் பின் யாழ் தேவி ரயில் சேவையை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதனை நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். யுத்தம் முடிவுற்ற பின் குறுகிய நான்கு வருடங்களுக்குள் நீங்கள் இழந்தவற்றை நாங்கள் பெற்றுக்கொடுத்துள்ளோம். மின்சாரம், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை மீண்டும் அமைத்து தந்துள்ளோம்.

நீங்கள் யுத்தத்தில் இழந்தவற்றை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்வேன். வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின்போது வெளிநாட்டு நிபுணர்கள் அச்செயற்பாடுகளை நிறைவு செய்துவிட்டு, சுமார் 14 வருடங்கள் எடுக்கும் என்று தெரிவித்தனர். எனினும், நாம் ராணுவத்தின் உதவியை நாடினோம். அதனால் குறுகிய நான்கு வருட காலத்துக்குள் கண்ணிவெடிகளை முழுமையாக எம்மால் அகற்ற முடிந்தது.

நாம் வடக்கை பெரிய அளவில் அபிவிருத்திக்குள்ளாக்கி வருகின்றோம். 30 வருட அபிவிருத்தியின் பின்னடைவை சமப்படுத்தவே நாம் துரித அபிவிருத்தியை மேற்கொள்கின்றோம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திலும் நாம் உரிய கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களுக்கான கல்வி பாடசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், வடக்கில் மாத்திரம் 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் மட்டுமன்றி உலகளவில் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

தங்கத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுறும் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தங்கம் போன்ற தேசமொன்றை உருவாக்கித் தருவேன். புலிகள் உங்களிடம் ஏமாற்றிப்பெற்றுக் கொண்ட தங்கத்தை நாம் அரசுடமையாக்கிக் கொண்டிருக்க முடியும். எனினும் நாம் அப்படிச் செய்யவில்லை. உங்கள் சொத்துக்களை மீள உங்களிடமே ஒப்படைத்துள்ளோம். அது உங்களுக்கு மகிழ்ச்சி தருவது போன்றே எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

[wysija_form id=”1″]