பிசினஸ் கட்டமைப்பு முக்கியம்!

ரு பிசினஸ் வெற்றியடைய வேண்டுமெனில், சரியான ஸ்ட்ராட்டஜி மட்டும் இருந்தால் போதாது; சரியான ஸ்ட்ரக்சரும் இருக்க வேண்டும். ஸ்ட்ரக்சர் என்றால்..?

கட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு வீடு கட்டுகிறோம். நம் இஷ்டத்துக்கு அதை நாம் கட்டிவிடுவதில்லை. ஒரு மாடி வீடு எனில் அதற்கேற்ப அடித்தளம் அமைக்கிறோம். இரண்டு மாடி வீடு எனில் அடித்தளத்தை இன்னும் கூடுதல் வலிமையுடன் அமைக்கிறோம்.

மூன்று மாடி, நான்கு மாடி, எட்டு மாடி என்று அடுக்குகளின் எண்ணிக்கை உயர உயர, அடித்தளத்தை வலிமையாக அமைக்கிறோம் அல்லவா? அதுபோலத்தான் பிசினஸும்.

ஆரம்பத்தில் நீங்கள் ஒருவரே பிசினஸ் தொடங்கி செய்து வந்திருக்கலாம். அப்போது உங்கள் பிசினஸுக்கு பெரிய அளவில் கட்டமைக்க தேவை இருந்திருக்காது. எளிமையான கட்டமைப்பு (சிம்பிள் ஸ்ட்ரக்சர்) உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், உங்கள் பிசினஸை எப்போதும் நீங்கள் ஒருவர் மட்டுமே செய்யப்போவதில்லை. அதன் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் பல்வேறு கிளைகளைத் திறக்கப் போகிறீர்கள். பல நூறு ஆட்களை வேலைக்கு சேர்க்கப் போகிறீர்கள். அப்போது உங்கள் நிறுவனம் ‘காம்பவுன்ட் ஸ்ட்ரக்சர்’ என்கிற சிக்கலான அமைப்பைப் பெறும். அப்போது பிரச்னை எதுவும் உருவாகாமல், உற்பத்தியைப் பெருக்கவும்  லாபத்தை அதிகரிக்க வழிசெய்து தருவதே இந்த ஸ்ட்ரக்சர்.

உங்கள் பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சர் இல்லை என்றால் என்ன ஆகும்?

ஒரே டிபார்ட்மென்ட்டில் பல பேர் இருப்பார்கள். இருக்கிற வேலையை ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக் கொண்டு செய்துவிட்டு, மீதமுள்ள நேரத்தை கதை பேசிக் கழிப்பார்கள். ஆனால், சில டிபார்ட்மென்ட்டில் போதுமான ஆட்களே இருக்க மாட்டார்கள். இதனால் அதிக வேலையை ஒரு சில நபர்களே மாய்ந்து மாய்ந்து செய்ய வேண்டியிருக்கும்.

இதனால் உற்பத்தி பெருகாது. உற்பத்தி பெருகாதபோது நாம் அடைய நினைத்த இலக்கையும் அடைய முடியாது. அப்போது லாபமும் வராது. இதனால் நம் பிசினஸ் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்குப் பதிலாகத் தேயத் தொடங்கிவிடும்.

எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு உற்பத்தி நிறுவனத்தை எடுத்துக் கொள் வோம். உற்பத்தி என்று வரும் போது ஒரு புரடக்‌ஷன் மேனேஜர்,  உற்பத்தி செய்ய நினைக்கும் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை வாங்க ஒரு பர்ச்சேஸ் மேனேஜர், மூலப்பொருட்களை வாங்கிய பின் அவற்றை ஸ்டோரில் வைத்து தேவைப்படும்போது தர ஒரு ஸ்டோர் மேனேஜர், தயாரான பொருட்களை  சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு  மார்க்கெட்டிங் மேனேஜர், விற்ற பொருட்களுக்கான பணம் திரும்ப வந்தவுடன் அதைக் கணக்கில் வைக்கிற அக்கவுன்ட்ஸ் மேனேஜர்,  எல்லா ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் ஹெச்.ஆர்.  மேனேஜர்… இப்படி ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற நபரை நன்கு ஆராய்ந்து தேடி நியமித்தால், நம்  இலக்கை நம்மால் எளிதாக அடைய முடியும்.

சிலர் காலை ஆறு மணி முதல் இரவு 12 வரை கஷ்டப்பட்டு தொழில் செய்வார்கள். தூங்கக் கூட அவர்களுக்கு  போதிய நேரம் இருக்காது. ‘நான் ஒரு நிமிடம் இல்லாவிட்டால்கூட பிசினஸ் நடக்காது’ என்பார்கள்.  அவர்கள் தங்களது  பிசினஸில் சரியான ஸ்ட்ரக்சரை உருவாக்காமல் போனதினால் தான் இந்த நிலை.

இந்த கட்டமைப்பு எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, ஒரு ஸ்டார் ஹோட்டலை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் ஸ்ட்ரக்சர் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், ஒரு சாதாரண ஹோட்டலில் அது மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படாது. அங்கு வேறு மாதிரியான ஸ்ட்ரக்சர் தேவைப்படும். எனவே, நம் பிசினஸுக்கேற்ற ஸ்ட்ரக்சரை நாம் உருவாக்கிக் கொண்டால்தான், நாம் அடைய நினைக்கும் இலக்கை எளிதில் எட்ட முடியும்.

பல நிறுவனங்களில் இந்த ஸ்ட்ரக்சர் சரியாக வடிவமைக்கப் படாமல் போவதால்தான், அந்த பிசினஸ் தோல்வி அடையும் நிலைக்குச் செல்கிறது. உங்கள் பிசினஸில் நீங்கள் எப்படிப்பட்ட ஸ்ட்ரக்சரை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்து நீங்கள் செய்யவேண்டியதை அடுத்த இதழில் சொல்கிறேன்…

FOR BUSINESS BOOKS : http://tamilagamtimes.com/shop/?swoof=1&product_cat=marketing-sales