250 சிசி பெனெல்லி !

2.83 லட்சம் முதல் 11.81 லட்சம் வரை விலை கொண்ட 5 மோட்டார்சைக்கிள்களை, கடந்த மார்ச் மாதம் விற்பனைக்குக் கொண்டுவந்தது பெனெல்லி. ஏதோ மிஸ் ஆகுதே என்று பார்த்தால், பெனெல்லி TNT 25 பைக்கைக் காணோம். ஏன் என்று விசாரித்தால், தீபாவளிப் பண்டிகையை ஒட்டித்தான் இந்த பைக்கைக் கொண்டுவருகிறதாம் பெனெல்லி. 250 சிசி செக்மென்ட்டில் டயர் பதிக்க இருக்கும் TNT 25 பைக்கின் டார்கெட் விலை 1.5 லட்சம்.
பெனெல்லி TNT 25 போட்டி போட விரும்புவது, சிங்கிள் சிலிண்டர் சிங்கங்களான ஹோண்டா சிபிஆர்250ஆர், கேடிஎம் 200 டியூக் போன்ற பைக்குகளுடன்தான். TNT 300 பைக்கைவிட 30 கிலோ எடை குறைவாக, நல்ல கட்டுமானத் தரம் கொண்ட பைக்காக இருக்கிறது TNT 25. பைக்கின் ஸ்டைலிங்கிலும் சிறப்புக் கவனம் செலுத்தியிருக்கிறது பெனெல்லி. வெள்ளை வண்ண மாடலில் சிவப்பு வண்ண கிராஃபிக்ஸுடன் செம ஸ்டைலாக இருக்கிறது. TNT 300 பைக்கில் இருக்கும் அதே ஹெட்லைட்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்தான் இதிலும்.

16.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் டிஸைன், செம ஷார்ப். அகலமான ஸ்ப்ளிட் சீட்ஸ், ஸ்டைலான ரியர் பேனல், கறுப்பு வண்ண கிராப் ஹேண்டில், சிம்பிளான LED டெயில் லைட்ஸ் என ஆர்ப்பாட்டம் இல்லாமல் வசீகரிக்கிறது TNT 25.

249.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் 24.1 bhp சக்தியை 9,000 ஆர்பிஎம்மிலும், 2.1 kgm டார்க்கை 7,000 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. முன்பக்கம் தடிமனான அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. முன்னும் பின்னும் சிங்கிள் டிஸ்க் பிரேக்குகள்தான். ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லை என்பது பெரிய மைனஸ்.

விலை மட்டுமே TNT 25 பைக்கின் வெற்றியைத் தீர்மானிக்கும்!