பிரபாகரன் சுவைத்த உணவு!

[wysija_form id=”1″]

கடந்த இரண்டு மாதங்களா​கவே ராகுல் காந்தியின் பிரதிநிதியும் தென் சென்னை காங்கிரஸ் வேட்பாளருமான எஸ்.வி.ரமணி, குஷ்புவை சந்தித்துக் கொண்டு இருந்தார். ராகுலின் தகவல்களை குஷ்புவிடம் வந்து பகிர்ந்து​கொண்டு இருந்தாராம் ரமணி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டுமானால் ஏதாவது ஒரு பிரபலம் இருந்தால்தான் நல்லது என்று நினைத்தார் ராகுல். ரஜினிக்கு பி.ஜே.பி. வலை வீசுகிறது, அதனால் காங்கிரஸுக்கு குஷ்புதான் சரியான சாய்ஸ் என்று சொன்னது எஸ்.வி.ரமணிதான். தென் சென்னையில் எஸ்.வி.ரமணி போட்டியிட்டபோது, பிரசாரத்துக்காக நடிகர் கார்த்திக்கை அழைத்து வந்தார். கார்த்திக்கும் ரமணியும் நெருக்கமான நண்பர்கள். ‘குஷ்புவை காங்கிரஸுக்கு அழைக்கலாமா?’ என்று கார்த்திக்குடன் பேசியிருக்கிறார் ரமணி. ‘குஷ்பு எனக்கு குடும்ப நண்பர்தான். ஆனால், அரசியல் பத்தியெல்லாம் நான் அவங்ககிட்ட பேச முடியாது. எனக்குத் தெரிஞ்சு காங்கிரஸ்ல முக்கியமானவங்க யாராவது அவங்ககிட்ட பேசுங்க. நல்லது நடக்கும்’ என்று மட்டும் சொல்லி அவர் ஒதுங்கிக்கொண்டாராம். அதற்கு ஒட்டுமொத்த ஆபரேஷனையும் கையில் எடுத்தது ரமணிதான்!

குஷ்புவின் பயோடேட்டா ஒன்றை தயார் செய்துகொண்டு டெல்லிக்கு கிளம்பியிருக்கிறார் ரமணி. அங்கே தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலமாக ராகுலிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ரமணிதான் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் என்பதால், ‘நீங்களே பேசுங்களேன்! அவங்க வந்தால் மேடம் தலைமையில் கட்சியில் சேர்த்துக்​கலாம். தேவைப்படும் பட்சத்தில் அவங்களுக்கு முக்கியப் பொறுப்பும் கொடுக்கலாம்!’ என்று ராகுல் கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். அதன் பிறகு சென்னைக்குத் திரும்பிய ரமணி, குஷ்புவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் குஷ்பு தயங்க… ரமணி தொடர்ந்து பேச எல்லாம் கனிந்து வந்திருக்கிறது. கடந்த வாரம் சாந்தோமில் உள்ள குஷ்புவின் வீட்டுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுடன் ரமணி சென்றிருக்கிறார். அப்போதுதான் இளங்கோவன் நேரடியாக குஷ்புவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்!’

‘அரசியலே வேண்டாம் என்றுதான் நான் ஒதுங்கியிருந்தேன். நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கிறது. எனக்கும் காங்கிரஸ் மிகுந்த மரியாதை உண்டு. எங்க வீட்டுக்காரர் வெளியில போயிருக்காரு. அவர் வந்ததும் பேசிட்டு நானே உங்களுக்குத் தகவல் சொல்கிறேன்!’ என்று குஷ்பு சொல்லியிருக்கிறார். உடனே, இளங்கோவன், ‘சுந்தருக்குப் போனைப் போடுங்க… இப்பவே பேசிடுவோம். நானும் அவர்கிட்டப் பேசணும்!’ என்று பரபரத்திருக்கிறார். குஷ்புவும் சுந்தருக்கு போன் செய்து கொடுத்திருக்கிறார். இளங்கோவனும் சுந்தரும் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் டெல்லி செல்லும் தேதி குறிக்கப்பட்டது! டெல்லியிலும், ‘உடனே வாங்க!’ என்று அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார்கள்.’

கட்சியில் சேரும் படலத்துக்கு முன்பாக சோனியாவை சந்தித்திருக்கிறார் குஷ்பு. ஆரம்பத்தில் சினிமாவுக்குள் நுழைந்தது தொடங்கி, குடும்பம் வரை அத்தனை விஷயங்களையும் குஷ்பு சொல்ல… கவனமாகக் கேட்டாராம் சோனியா. ‘நானும் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். இந்த நேரத்துல நீங்க காங்கிரஸ் கட்சிக்கு வந்தது எனக்கு சந்தோஷம். உங்களோட திறமை எங்களுக்குத் தெரியும். நிச்சயம் நாங்க உங்களைப் பயன்படுத்திக்கொள்வோம்’ என்று மட்டும் சொன்னாராம் சோனியா. கட்சிப் பொறுப்புகள் பற்றியோ, அல்லது தனக்கான முக்கியத்துவம் பற்றியோ குஷ்பு எதுவும் பேசவில்லை.’

‘கட்சியில் சேர்ந்த மறுநாள் காலை ராகுல் காந்தியை அவரது துக்ளக் ரோடு வீட்டில் சென்று சந்தித்தார். ‘காங்கிரஸ் கட்சி வளருவதற்கு இதுதான் தகுந்த நேரம். இந்த நேரத்தில் நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் பார்க்கப் போகிற காங்கிரஸ் வேறு மாதிரியாக இருக்கும். கட்சியை நான் மாற்றி வருகின்றேன். காங்கிரஸில் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. வெல்கம்!’ என்று ராகுல் சொல்ல… சிரித்தபடியே நன்றி சொல்லியிருக்கிறார் குஷ்பு. கூடிய சீக்கிரமே குஷ்புவுக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவர் சென்னையில் இருந்தபடியே இந்தப் பொறுப்புகளை கவனிக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள்’

‘சகாயம் விசாரணை கமிஷனுக்கு இப்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது. ‘தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் தன் தலைமையிலான குழு ஆய்வு நடத்த வேண்டுமா? அல்லது மதுரையில் அனைத்து குவாரிகளையும் ஆய்வுசெய்ய வேண்டுமா? அல்லது மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளை மட்டும் ஆய்வு செய்ய வேண்டுமா?’ என்பதைத் தெளிவுபடுத்தும்படி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் சகாயம். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ‘முதல்கட்டமாக மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளை மட்டும் ஆய்வு செய்யுங்கள். அதன் பிறகு, மற்ற மாவட்டங்கள் பற்றி முடிவெடுக்கலாம்’ என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தர​வால்தான் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரி அதிபர்களும் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற கனிமக் குவாரிகளின் அதிபர்களும், சகாயத்தின் பார்வை தற்போதைக்கு நம் பக்கம் விழாது என்று நிம்மதி அடைந்துள்ளனர்.”

மதுரையைப் பொறுத்தவரை அவர் இனிமேல் ஆய்வுசெய்ய வேண்டிய தேவைகள் நிறைய இருக்காது. ஏற்கெனவே அவர் அங்கு பணியில் இருந்தபோதே 75 சதவிகித வேலைகளை முடித்துவிட்டார். எனவே இந்த ஆய்வு அறிக்கை சீக்கிரமே வந்துவிடும் என்று சொல்கிறார்கள். ‘மதுரை கிரானைட் விவகாரத்தில் சகாயம், அன்சுல் மிஸ்ரா ஆகிய இருவரும் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டார்கள். மேல் நடவடிக்கையை இப்போதைய கலெக்டர் எடுத்து வருகிறார். எனவேதான் தைரியமாக மதுரைக்கு மட்டும் சகாயம் போனால் போதும்’ என்று நீதிமன்றம் சொன்னது ஆளும் கட்சிக்கு சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டது. சகாயம், ‘மதுரையில் இனி விசாரிக்க எதுவும் இல்லை’ என்று சகாயமும் சொல்லி வருகிறாராம்!”

பிரபாகரனின் 60வது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாட வைகோ அறிக்கைவிட்டார். அதன் பிறகு அனைத்து தமிழ் அமைப்புகளும் அதில் மும்முரம் ஆகியது. நவம்பர் 26ம் தேதி பிறந்தநாளின் நினைவாக ஈரோட்டில் வைகோ, கேக் வெட்டி கொண்டாடினார். காது கேளாதோர் வாய் பேசாதோர் இல்லத்தில் கேக் வெட்டினார் தொல்.திருமாவளவன். பழ.நெடுமாறன், சீமான் ஆகியோரும் இந்த விழாக்களை நடத்தினார்கள். இவற்றில் வித்தியாசமானது திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடந்தது.

‘முருகனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. அதே கார்த்திகையில்தான் பிரபாகரனும் பிறந்தார். 01.10.1984 அன்று பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருப்போரூர் கோயிலில்தான் திருமணம் நடந்தது. அதனால் 60ம் கல்யாணத்தையும் இங்கு நடத்துகிறோம்” என்று பேசியிருக்கிறார்

ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. கோயிலில் பிரபாகரனின் பெயரைச் சொல்லி அர்ச்சனையும் அன்னதானமும் தங்கத் தேரும் இழுத்துள்ளார்கள் இவர்கள்!

142 அம்மா உணவகங்கள் அம்பேல்?

மாநகராட்சிகளைப்போல நகராட்சி மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள் அனைத்திலும் மொத்தம் 142 இடங்களில் அம்மா உணவகம் தொடங்க திட்டமிடப்பட்டு, நகராட்சி பொது நிதியில் இருந்து அவசர நிதி ஒதுக்கி ஒவ்வொரு இடத்திலும் ரூ.40 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டி முடிக்கப்பட்டது. சமையல் பாத்திரங்களை வாங்கி உணவு சமைத்தும் பார்த்துவிட்டனர். தமிழக அரசிடம் உணவு தரத்துக்கு ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. இதெல்லாம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் அம்மா உணவகத்தைத் திறக்க தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லையாம். வேலைக்கு எடுத்த 1,500 பேருக்கும் பதில் சொல்ல முடியலை. அம்மா உணவகம் கட்ட கொடுத்த பொது நிதியில் இருந்து பணத்தை கொடுத்துவிட்டதால், பொது நிதியில் பணம் இல்லாமல் மழைக்கால அவசர வேலைகள் நிறைய பெண்டிங் இருக்குதாம்!

அன்புமணிக்கு தயக்கம்!

சென்னையில் நடைபெற்ற பா.ம.க மாநில செயற்குழுவில் அனைத்து நிர்வாகிகளும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் டாக்டர் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்று வலியுறுத்தி பேசினர். மறுநாள் நடந்த பொதுக்குழுவில், ”வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பா.ம.க தலைமையில் புதிய அணியை உருவாக்குவது என்று தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. ”கூட்டணிக் கட்சிகளை முடிவு செய்து அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் என்று என்னை அறிவியுங்கள். அதற்கு முன்னர் இத்தகைய அறிவிப்புகள் வேண்டாம். தீர்மானமும் வேண்டாம் என்று டாக்டர் அன்புமணி சொல்லிவிட்டார்’ என்கிறார்கள் பா.ம.கவினர்.

பிரபாகரன் சுவைத்த உணவு!

தி.மு.க செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மனைவி சரளா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர், 24ம் தேதி காலமானார். இவர்கள் இருவருக்கும் 1986ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. கருணாநிதி தலைமையில் நடந்த அந்தத் திருமணத்துக்கு ஈழ அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். பிரபாகரனும் அந்தக் கூட்டத்தில் இருந்துள்ளார். அப்போது வைகோவும், ராதாகிருஷ்ணனும் சேர்ந்து, பிரபாகரனை கருணாநிதிக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளனர். காலில் குண்டு தாங்கி நடக்க முடியாமல் இருந்த தளபதி கிட்டுவும் இவர்களது வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது அவரைப் பார்க்க அடிக்கடி பிரபாகரன் வந்து சென்றுள்ளார். சரளாவின் சமையலை ருசித்துச் சாப்பிடுவாராம் பிரபாகரன். எனவே சரளாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், புலி ஆதரவாளர்கள் போன் மூலம் ராதாகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்

[wysija_form id=”1″]