3 லட்ச ரூபாய்க்கு லீனியா !

உங்களுடைய பட்ஜெட் 3 லட்சம் ரூபாய். ஸ்டைலான, அதிக இடவசதிகொண்ட செடான் கார்தான் உங்கள் சாய்ஸ் என்றால், அதற்கு லீனியா பர்ஃபெக்ட் சாய்ஸ். பில்டு குவாலிட்டியில் மிகச் சிறந்த கார்களில் ஒன்றான ஃபியட் லீனியா, இப்போது பழைய கார் மார்க்கெட்டில் 3 லட்ச ரூபாய்க்குக் கிடைக்கிறது.

லீனியா – ஒரு முன்னோட்டம்!

லீனியா என்ற பெயரில், மிக அழகான செடான் காரை 2007-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்தது ஃபியட். எட்டு ஆண்டுகள் ஆன பிறகும், இப்போதைய செடான் கார்களுடன் ஒப்பிடும்போது, இன்னமும் அழகாகவும், மாடர்னாகவும் இருப்பதுதான் லீனியாவின் மிகப் பெரிய பலம். ஓட்டுதல் தரம், கையாளுமை, ஸ்டெபிளிட்டியில் லீனியா – சூப்பர்! 3 லட்ச ரூபாய்க்கு லீனியா விற்பனைக்குக் கிடைக்கிறது என்றாலும், கார் அவ்வளவு எளிதாக மார்க்கெட்டில் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. காரணம், லீனியாவின் உரிமையாளர்கள் யாரும், அவ்வளவு சீக்கிரத்தில் காரை விற்பதற்குத் தயாராக இல்லை. மேலும், மெயின்டனன்ஸ் செலவுகளும் குறைவு என்பதும் இதற்கான டிமாண்ட் அதிகம் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று. இப்போது டாடாவிடம் இருந்து பிரிந்து, முழுக்க முழுக்கத் தனியாகவே இந்தியாவில் ஃபியட் வந்து விட்டதால், சர்வீஸ் வேகமும் சிறப்பாக இருக்கிறது.

இன்ஜின்

ஸ்விஃப்ட், இண்டிகா, செயில் உள்ளிட்ட பல கார்களில் இருக்கும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின்தான் லீனியாவிலும் இருக்கிறது. இன்ஜினின் நம்பகத் தன்மையைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியாது. பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் இரண்டும்தான் இன்ஜினின் பலம். ஆனால், 2000 ஆர்பிஎம்-க்குப் பிறகுதான் இன்ஜினில் பவர் அதிகரிப்பதால், நகருக்குள் ஓட்டும்போது டர்போ லேக் அதிகமாக இருப்பதுதான் இந்த இன்ஜினின் மைனஸ். அதேசமயம், நெடுஞ்சாலையில் வேகம் பிடிக்கும்போது, இதுவே பலமாக மாறுகிறது. மிட் ரேஞ்சில் பவர் டெலிவரி நன்றாக இருப்பதால், மற்ற கார்களை ஓவர்டேக் செய்வது ஈஸி. மேடு பள்ளங்களில் செல்லும்போது காருக்குள் அதிகமாக அலுங்கல் குலுங்கல்கள் தெரியாது. ஸ்டெபிளிட்டி மிகவும் சிறப்பாக இருப்பதால், திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்ட ஈஸியாக இருக்கிறது லீனியா.

மைலேஜ்

ஃபியட் லீனியாவின் எடை அதிகம். அதனால், மற்ற மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின்களைவிட கொஞ்சம் குறைவாகவே மைலேஜ் தரும். இது, நகருக்குள் லிட்டருக்கு 12.9 கி.மீ, நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 17.5 கி.மீ மைலேஜ் தருகிறது.

என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

லீனியாவின் ஏ.சி கூலிங் காயிலில் பிரச்னைகள் இருப்பதாகப் புகார்கள் உள்ளன. ஏ.சி-யை ஆன் செய்து இரண்டு நிமிடங்கள் ஆன பிறகும் காருக்குள் கூலிங் இல்லை என்றால், கூலிங் காயிலில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். இதைச் சரிசெய்ய 5,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், ஏ.சி கம்ப்ரஸரிலேயே பிரச்னை என்றால், 25,000 ரூபாய் வரை செலவாகும். அதனால், ஏ.சியைக் கவனமாக செக் செய்யுங்கள்.

60,000 கி.மீ-க்கு மேல் ஓடிய கார் என்றால், சஸ்பென்ஷனைப் பாருங்கள். இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு ஸ்டீயரிங்கை வலதுபக்கமாகவும், இடதுபக்கமாகவும் திருப்பிப் பாருங்கள். காரின் முன் பக்கமோ அல்லது பின்பக்கத்தில் இருந்தோ அரைப்பதுபோல ஏதாவது சத்தம் வருகிறதா என்று கவனியுங்கள். அதேபோல், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, ஸ்டீயரிங்கில் இருந்து கலகலவென ஏதாவது சத்தம் வருகிறதா என்று பாருங்கள். இந்த அறிகுறிகள் இருந்தால், சஸ்பென்ஷன் ஸ்ட்ரட் பேடில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஸ்ட்ரட் பேடுகளை மாற்ற 7,000 ரூபாய் வரை செலவாகும்.

ஃபியட்டின் பரிந்துரைப்படி டைமிங் செயினை ஒவ்வொரு 60,000 கி.மீ-க்கும் ஒருமுறை மாற்ற வேண்டும். அதனால், சர்வீஸ் ஹிஸ்டரியில் டைமிங் செயின் மாற்றப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். டைமிங் செயினை மாற்ற பெரிதாக ஒன்றும் செலவாகாது. 1,100 ரூபாய்தான் டைமிங் செயினின் விலை. ஆனால், இதைச் சரியான இடைவெளியில் மாற்றவில்லை என்றால், ஒரு கட்டத்தில் செயின் தளர்ந்து அது ஆயில் பம்ப்பை வீக் ஆக்கிவிடும். இதனால், ஒரு கட்டத்தில் இன்ஜினே சீஸ் ஆகிவிடும். அதனால், டைமிங் செயின் மாற்றம் மிகவும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

காரை ஸ்டார்ட் செய்துவிட்டு ஸ்டீயரிங் வீல், கியர் லீவர்களில் ஏதும் ஆட்டம் அதிகமாக இருக்கிறதா என்று பாருங்கள். ஆட்டம் இருந்தால், இன்ஜின் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் போல்ட், நட்டுகள் உட்பட இன்ஜின் மவுன்ட் லூஸாகி இருக்கிறது என்று அர்த்தம். இதைச் சரிசெய்ய 3,000 ரூபாய் வரை செலவாகும்.

லீனியாவை 15,000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் மாற்றம் உள்பட ரெகுலர் சர்வீஸுக்கு 5,500 ரூபாய் வரை செலவாகும். மூன்று ஆண்டுகள் பழைய லீனியா காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க 12 – 15 ஆயிரம் ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.