உயிர் பானம் ( தொடர் )

[subscribe2]

ஒரு பரிணாம விபத்தில் மனித இனம் தோன்றியது. வந்தநாள் முதல் மனித இனம் தனது அறிவு வழிநடத்தும் பாதையில் பயணித்து, எல்லாவற்றிலும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த மாற்றங்களுக்குக் கல்வியும், கலாசாரமும் அடிப்படையாக இருக்கின்றன.

கல்வியின் மூலம் கிடைக்கும் அறிவு எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் கலாசாரம்… அது ஒரேமாதிரியாக இருக்காமல் காலப்போக்கில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறுவிதமாக மாறிக்கொண்டே இருக்கிறது. குழப்பம் இதனால்தான் வருகிறது. ஒரு இடத்தில் சரியாகப் படுகிற விஷயம், இன்னொரு இடத்தில் கிரிமினல் குற்றமாக கருதப்பட காரணம் இதுதான்! உதாரணமாக, காதலர்களின் தேசமான ஃபிரான்ஸில் பொது இடங்களில் முத்தமிடுவது குற்றமில்லை. சாலை ஓரங்களில், பூங்காக் களில், சுற்றுலாத் தலங்களில், ஓடும் ரயில்களில்… இப்படி அநேக பொது இடங் களில் காதலர்கள் இறுக அணைத்தபடி, உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கிறக்கத்தில் மூழ்கி இருப்பார்கள். பார்க்கிறவர்கள் அதை கேஷ§வலாக ரசித்தபடி போய் விடுவார்கள்.

நம்ம ஊரில் பிஸி யான ரோடுகளில் ஆடு, மாடுகள் சாவ தானமாக நடந்து டிராஃபிக் ஜாம் செய்வது மாதிரி அங்கே இது சகஜமான விஷயம். அது அவர்களின் கலாசாரம்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு பார்ட்டியில் தன் பாய்ஃபிரெண்டுக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது படம் பிடிக்கப்பட்டு, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இது அநாகரிகம்’ என கலாசாரப் பாது காவலர்கள் கண்டித்தனர்.

ஃபிரெஞ்சுக் காதலர்கள் இந்தியா வந்து இப்படி பொது இடத்தில் முத்த மிட்டுக் கொண்டால், நியூசென்ஸ் கேஸில் அவர்களை போலீஸ் உள்ளே தள்ளிவிடும்.

இரண்டு நாடுகளிலும் இருப்பவர்கள் மனிதர்கள்தான்… அதே உதடுகள்தான்… அதே முத்தம்தான்! ஆனால், ஒரு கலாசாரம் இதை நாகரிகம் என்கிறது. இன்னொன்று குற்றம் என்கிறது.

இதில் எது தப்பு… எது சரி… இதை விவாதம் செய்வது புத்திசாலித்தனம் இல்லை. இருக்கும் சூழ்நிலைக்கு எதுசரி என புரிந்துகொண்டு நடப்பதுதான் கற்றக் கல்விக்கு அர்த்தம்.

கலாசாரம் என்பதற்கு டிக் ஷனரி ஒரு அர்த்தம் தருகிறது. ‘ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெருவாரியான மக் களால் கடைபிடிக்கப்படும் சடங்குகளும், நம்பிக்கைகளும், பழக்கங்களுமே கலாசாரம்’ என்பது அந்த அர்த்தம். இதற்கு மொழியோ, இனமோ தடைபோட முடியாது. ஆந்திரத்தின் சித்தூர் பகுதிக்குப் போனால் தமிழக மக்கள் மத்தியில் புழங்கும் எல்லா நடைமுறைகளும் அங்கேயும் இருக்கும். கன்னியாகுமரி மாவட் டத்துக்குப் போனால் கேரள மணம் வீசும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கலாசாரத்தின் அடிப்படை விஷயங்கள் இரண்டு. ஸ்ருதி, ஸ்மிருதி என சமஸ்கிருதத்தில் இதை சொல் வார்கள். ஸ்ருதி என்பது அறிவு சார்ந்தது. மனித இனம் உருவாகி நீண்டகாலம் கழித்தே மொழிகள் தோன்றின. ஆனால் அதற்கு முன்பே வேட்டையாடக் கற்ற மனிதன், குழுக்களாக வாழும் முறையையும் உருவாக்கினான். குழுவுக்கென்று ஒரு தலைமை… அதற்கென சில கட்டுப்பாடுகள்… இப்படி சட்டங்கள் தோன்றின. இந்த சட்டங்களைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமே! அப்போது கூச்சல், முனகல், ஆரவாரம் என சத்தங்களால் மனிதன் பேசினான். காலப்போக்கில் அவை மொழிகள் ஆகின.

ஒவ்வொரு பொருளையும் கண்களால் பார்த்து, தொட்டு, வாசனை பிடித்து, ருசித்து, ரசித்து அவற்றை வர்ணித்து நூல்களை உருவாக்கினர் நம் மூதாதையர்கள். அவை ஆரம்பத்தில் எழுத்து வடிவம் பெறவில்லை. மொழிகளுக்கு அப்போது பேச்சுவடிவம் மட்டுமே இருந்தது! செவிவழியாகவே இவை குருவிடமிருந்து சீடர் களுக்குத் தலைமுறை தலைமுறையாகப் பரவின. இதில் ஒலிக்குறிப்புகள் முக்கியமானவை. உச்சரிப்பில் சின்ன பிழை இருந்தாலும் அர்த் தம் மாறிவிடும் (இன்றைக்கும் ஒரிஸ்ஸாவில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு யாராவது அடையாளம் தெரியாத சாமியார் போனால், அவ்வளவுதான்! அவரை மடக்கிக் கல்லால் அடித்து மேல்வரிசை முன்பற்கள் இரண்டை உடைத்துப் பிடுங்கி விடுவார்கள். மந்திரஜாலம் செய்து பிள்ளைகளைப் பிடிக்க வந்திருக்கும் சண்டாளர்களாக இவர்களைக் கருதுகிறார்கள் பழங்குடிகள். ‘முன்பற்கள் இல்லாவிட்டால் மந்திரங்களைத் தெளிவாக சொல்ல முடியாது… அர்த்தம் மாறிவிடுவதால் அவை பலிக்காமல் போய்விடும்’ என்பது அவர்கள் நம்பிக்கை!).

நூல்களே அறிவுப் பெட்டகங்களாகவும், சட்டங்களாகவும் ஆகின. இதைதான் ஸ்ருதி என்கிறார்கள்.

அறிவு அப்படியே இருந்தால்என்ன புண்ணியம்? அதைப் பயன்படுத்தி னால்தானே மனிதகுலம் அறியும்! இப்படி பயன்படுத்துவதையே ஸ்மிருதி என்கிறார்கள். அறிவு சார்ந்த ஸ்ருதி மாறுவதில்லை. ஆனால், ஸ்மிருதி எனப்படும் பயன்பாடு காலப்போக்கில் மாற்றங்களைச் சந்திக்கிறது.

அணுசக்தியை ஆரம்பத்தில் கண்டு பிடித்தபோது மக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. அமெரிக்கா, ‘அணுகுண்டு போடுவேன்’ என மிரட்டியபோது ஜப்பான் மசியவில்லை. ஆனால், ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களை அணுகுண்டு நிர்மூலமாக்கிய பிறகு உலகத்துக்கே அதன் குணம் தெரிந்துவிட்டது. அழிக்கப் பயன்படுத்திய அதே அணுசக்தியில் இப்போது மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

அறிவின் பயன்பாடு இப்படி மாறுவதைத்தான் கலாசார மாறுதல் என்கிறோம். ஓர் இடத்தில் இருக்கும் பழக்கம் இன்னோர் இடத்தில் மாறுகிறது. ஒரே இடத்திலேயே ஐம்பது வருஷங்களுக்கு முன்பு இருந்த பழக்கம் இப்போது மாறிவிடுகிறது. முன்பு இருந்ததுதான் சரி, இப்போது இருக்கும் பழக்கம் தப்பு என நினைக்கக் கூடாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், எந்த ஒரு இனமும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும்.

முன்னோர்கள் சொன்ன பல விஷயங்கள் இப்போது நமக்கு முரண்பட்டதாகத் தெரியலாம். ‘நிதானமே பிரதானம்’ என ஒரு பழமொழி இருக்கிறது. ‘எந்த ஒரு விஷயத்தையும் ஆறஅமர யோசித்து, அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும்’ என்பது இந்தப் பழமொழி உணர்த்தும் நீதி. அதேசமயம், ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என இன்னொரு பழமொழியும் உண்டு. ‘எதையும் சீக்கிரமாக செய். இல்லாவிட்டால், அது எதிர்பார்த்த மாதிரி நடக்காது’ என்று இதற்கு அர்த்தம் வருகிறது.

இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இப்படி குழப்பமாகப் பழமொழி சொன்னால் எதைப் பின்பற்றுவது? எந்த ஒரு விஷயத்தையும் சூழ்நிலையை அனுசரித்து செய்ய வேண்டும் என்பது பழமொழியின் பின்பக்கம் ஒளிந்திருக்கும் உண்மை.

இவ்வளவு பீடிகையும் எதற்காக என்றால், இனி நாம் பார்க்கப் போவது கொஞ்சம் நெருடலான சமாச்சாரங்கள். ‘செக்ஸ் விஷயத்தில் ஒவ்வொரு கலாசாரத்திலும் பழங்காலத்தில் என்னவிதமான நம்பிக்கை இருந்தது? அது காலப்போக்கில் எப்படி மாறியது?’ என்று பார்க்க, காலச்சக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கிப் பயணம் செய்து, திரும்பவும் நிகழ்காலத்துக்கு வரப் போகிறோம். நிறைய விஷயங்கள் அதிர்ச்சிதரும். சமயத்தில் கொஞ்சம் அருவருப்பாகக்கூட தோன்றலாம். இதில் ‘ஒரு சமுதாயம் செய்ததுதான் சரியானது… மற்றவர்கள் தப்பு செய்தார்கள்’ என நான் சொல்லப் போவதில்லை. நடந்த வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பார்த்து, அதை அறிவியல் கண்ணாடியால் அலசுகிறோம். இது தேவையா என்றால், ஆமாம். செக்ஸ் விஷயத்தில் அறிவியல் சொல்லும் உண்மைகளைப் புரிந்து கொண்டாலே மனிதவாழ்க்கை சுகமாக அமையும்.

அந்த அதிர்ச்சிப் பக்கங்களுக்குள் நுழைவோம், வாருங்கள்…

முல்லைப்பூ வைத்த மூதாட்டி!

கலாசாரம் மற்றும் கால ஓட்டத்தால் எத்தனையோ பழக்கவழக்கங்கள் நம்மை விட்டு மறைந்தும் ஒட்டிக்கொண்டும் இருக்கின் றன. அதற்கு உதாரணமாகப் பல விஷயங் களைப் பட்டியலிட முடியும். இங்கே ஒரே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரைகூட தமிழகத்தில் தென்மாவட்டங்கள் பலவற் றில் இருந்த விநோத பழக்கம் அது! இளவய சில் மனைவியைத் தவிக்கவிட்டு யாராவது இறந்து போனால், கணவனைப் பறிகொடுத்த மனைவியிடம் ஊர் மூதாட்டிகள் அழுகை யினூடே தனியாக ஒரு விஷயத்தை விசாரிப்பார் கள். ‘இப்போது அவள் கர்ப்பமாக இருக் கிறாளா?’ என அறிந்து கொள்ள அந்த விசா ரணை. விசாரணையின் முடிவில் அவள் கர்ப்பமாக இருப்பது உறுதியானால், தூரம் தள்ளிய நாட்களை வைத்து, குழந்தை வயிற்றில் கருவாகி எத்தனை மாதம் ஆகிறது’ என்பது உறுதி செய்யப்படும்.

பிறகு ஒரு கையில் தண்ணீர் செம்பும், இன்னொரு கையில் உதிரி முல்லைப் பூக்களும் எடுத்துக்கொண்டு ஒரு மூதாட்டி இழவு வீட்டிலிருந்து வெளியில் வருவார். அவர் வந்ததும் மேளச்சத்தம் ஓயும். தெருவில் ஊர்க்கார ஆண்கள் துக்கம் விசாரிக்கக் குவிந்திருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் செம்பை வைக்கும் மூதாட்டி, தன் கையில் இருக்கும் உதிரிப் பூக்களை ஒவ்வொன்றாக அந்த செம்புத் தண்ணீரில் போடுவார். அவர் எத்தனை பூக்கள் போடுகிறாரோ… இறந்தவரின் மனைவி அத்தனை மாத கர்ப்பம்.

‘பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணை இப்படித் தவிக்க விட்டு போயிட்டாரே’ என அனுதாபத்தைக் கூட்டுவதற்கு அல்ல, இந்த சடங்கு. அவன் இறந்து பல மாதங்கள் கழித்து விதவை மனைவி பிள்ளை பெறுவாள். அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என ஊரில் சந்தேகப் பேச்சு வந்துவிடக் கூடாது என்பதற் காகவே இப்படி ஊரறிய அறிவிக்கிறார்கள். பிறக்கும் குழந்தை அப்பா யார் என்ற கேள்வியோடு இந்த மண்ணைத் தொடக்கூடாது என்ற அக்கறையில் தோன்றிய சடங்கு இது. ஒரே ஒரு வார்த்தைப் பரிமாற்றம்கூட இல்லாமல் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் கர்ப்பத்தை உறுதி செய்யும் சோதனைகள் கடினமானவை. நகரங்களில் மட் டுமே அவை கிடைத் தன. இப்போது நிலைமை மாறிவிட் டது. மெடிக்கல் ஷாப்பில் விற்கும் சிம்பிளான சோத னைக் கருவியை வாங்கிவந்து, படிக்கத் தெரியாத பெண்கள்கூட வீட்டிலேயே சிறுநீர் பரிசோதனை செய்து கர்ப்பத்தை உறுதி செய்யலாம். இப்படி வசதிகள் வந்து விட்டதால் இந்த வழக்கம் மறைந் திருக்க வேண் டும்!

EDITOR

[email protected]