NEWS ALL

[wysija_form id=”1″]

மும்பை புறநகர் பகுதிகள், அதன் சுகாதாரமற்ற தன்மைக்கு மிகப் பிரபலம். ஆனால், அதை மாற்றி ஒரே நாளில் பல பகுதிகளை அழகுப்படுத்தி அசத்தியுள்ளனர் ஸ்ட்ரீட் ஆர்ட் கலைஞர்கள். ‘ஸ்டார்ட் இந்தியா’ அமைப்பினர், இந்தியாவின் முன்னணி சுவர் ஓவியக் கலைஞர்கள் 20 பேரைக்கொண்டு மும்பையின் சுவர்களை அழகுபடுத்தியிருக்கின்றனர். ஓவியர்கள், ஒவ்வொரு சுவரையும் வித்தியாசமான தீமில் அழகுபடுத்த, அசந்துபோன மும்பைவாலாக்கள் அந்த முயற்சிக்கும் கலைஞர்களுக்கும் பாராட்டுக்களைக் குவிக்கிறார்கள். கிளீன் இந்தியா டீம்… நோட் பண்ணுங்கப்பா!

 சூதாட்டப் புகார் தடை காரணமாக கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இப்போது சினிமா ஸ்டார். 31 வயதில் அவ்வப்போது மலையாளப் படங்களில் தலைகாட்டி வந்தவர், இப்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். ‘என் சொந்த வாழ்க்கைக்கு நெருக்கமான கதை. அதான் ஓ.கே சொல்லிட்டேன். மத்தபடி வழக்கமான சினிமாக்களில் நான் நடிக்க மாட்டேன்’ என்கிறார் ஸ்ரீ. தம்பி விளையாடினதும் வழக்கமான கிரிக்கெட் இல்லையே!

 இந்த வருட இறுதி நெருக்கத்தில் உலக பேட்மிட்டன் தரவரிசைப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியதில் ‘க்ளவுட் நைன்’ உற்சாகத்தில் இருக்கிறார் சாய்னா நெய்வால். தன் ஆரம்ப கால பயிற்சியாளர் கோபிசந்திடம் இருந்து சாய்னா விலகியபோது பெரும் விவாதம் கிளப்பியது. ஆனால், இப்போது அதற்கு கைமேல் பலன்! அடுத்தடுத்து மூன்று பட்டங்களை வென்றிருக்கிறார் சாய்னா. அதில் ஒன்று மிகக் கடினமான சீன ஓப்பன் பட்டம். ஆனாலும் அவர் உற்சாகத்தை வெளிப்படுத்தவில்லை. ‘டாப் 5-க்குள் வந்தது ஹேப்பி. ஆனா, முதல் இடம்தானே எப்பவும் என் இலக்கு. அடுத்து துபாய் ஓப்பன், ஒலிம்பிக்லயும் இந்த ஃபார்மைத் தக்கவெச்சுக்கணும். ஆனா, அது அவ்வளவு சுலபம் அல்ல. இருந்தாலும் முடியாதது எதுவும் இல்லையே!’ என்கிறார் நம்பிக்கையுடன். எவ்வளவோ பண்ணிட்டீங்க… இதைப் பண்ண மாட்டீங்களா!

 குறும்புக் குற்றாலம் ஜெனிலியா, இப்போ அன்புள்ள அம்மா! ஜெனிலியா-ரிதேஷ் தேஷ்முக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரிதேஷ், ‘வாவ்… எங்களுக்கு பையன்’ எனப் பூரிப்பு காட்ட, ‘வெல்கம் டு பேரன்ட்ஸ் கிளப்’ என அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் வாழ்த்துகள்!

 ‘என் வாழ்க்கையை யாரும் சினிமாவாக எடுக்க வேண்டாம்!’ எனக் கண்டிப்பாகக் கூறிவந்தார் சானியா மிர்சா. பல நிறுவனங்கள் பல கோடி ஆஃபருடன் முன்வந்தபோதும் மறுத்தே வந்தவர், திடீரென, ‘ஒருவேளை என் வாழ்க்கை படமானால், அதில் என் கேரக்டரில் தீபிகா படுகோனும் என் கணவர் சோயப் மாலிக் கேரக்டரில் சல்மான் கானும் நடித்தால் நன்றாக இருக்கும். தீபிகாவைவிட யாரும் என் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்க முடியாது. சல்மான் கான் எனக்குப் பிடிக்கும்!’ என அறிவித்திருக்கிறார். ‘அடியாத்தீ… அப்போ அது 100 கோடி பட்ஜெட் படமாச்சே’ என திக்கடித்துக்கிடக்கிறார்கள் பாலிவுட் தயாரிப்பாளர்கள். செமத்தியா இருக்கும்ல!

ஒரு படம் வெளியாகி 1,000 வாரம் கழித்து அந்தப் படத்துக்கு டிரெய்லர் வெளியிடுவார்களா? ஆனால், வெளியிட்டிருக்கிறார்கள். ஷாரூக் கான்- கஜோல் நடிப்பில் 1995-ல் வெளியான இந்தி படம் ‘தில்வாலே துல்ஹனியா லீ ஜாயங்கே’ வரும் டிசம்பர் மாதம் தனது 1,000-வது வாரத்தைக் கொண்டாட உள்ளது. இந்தியாவின் பிளாக்பஸ்டர் சினிமாக்களுள் ஒன்றான அந்தப் படம், இன்றும் மும்பையின் ஒரு தியேட்டரில் திரையிடப்படுகிறது. பார்ட்டி உண்டா!

ஷேக்ஸ்பியர் படைப்புகளின் முதல் தொகுப்பு ஒன்றை, பிரான்ஸில் நூலகம் ஒன்றில் எதேச்சையாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘Mr William Shakespeare’s Comedies, Histories and Tragedies’  எனக் குறிப்பிடப்படும் அந்தப் புத்தகம் 400 வருடங்கள் பழமையானது. உலகம் முழுக்கவே 230 பிரதிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் அந்தப் புத்தகம், பிரான்ஸில் இருக்கும் இரண்டே இரண்டு பிரதிகளில் ஒன்றாம். புராதன மதிப்பு காரணமாக ஏலம் விட்டால் நான்கு மில்லியன் பவுண்டு வரை விலைபோகுமாம். 1623-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்தத் தொகுப்பில், மொத்தம் 36 தனி நாடகங்கள் இடம் பெற்றுள்ளனவாம். ‘உலகமே ஒரு நாடக மேடை’னு அவர் சொன்னதுக்கு இன்னோர் ஆதாரம்!

 ‘வெள்ளாவியில் போட்டு வெளுத்தாய்ங்களா?’ ரேஞ்சுக்கு சந்தேகம் கிளப்பிக்கொண்டிருந்த ஜெனிஃபர் லோபஸின் அழகு ரகசிய மர்மத்தை, அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். பாப் பாடகியான ஜெனிஃபர் குளிக்கும்போது சருமத்தைத் தேய்த்துக்கொள்ளப் பயன்படுத்துவது வைரத் துகள்களால் ஆன ஸ்க்ரப்பர். அதுவும் தனது உடல் மற்றும் சருமத்தின் தன்மைக்கு ஏற்ப பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ஸ்ப்ரே மூலம் தனது கால்களைப் பராமரிக்கிறாராம். இங்கேல்லாம் அரப்புத் தூளும் தேங்காய் நாரும்தான்!

ஏழு வயது சிறுமி நினைத்தால் என்ன செய்ய முடியும்? பன்னாட்டு பொம்மை நிறுவனத்தின் கொள்கையை மாற்றவைக்க முடியும்! இங்கிலாந்து சிறுமி மேகி ‘சூப்பர் ஹீரோ கேரக்டர்’களின் காதலி. ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் என சூப்பர் ஹீரோக்களின் பொம்மைகளை வாங்கிக் குவிப்பாள். சமீபத்தில் அப்படி மேகி வாங்கிய ‘டெஸ்கோ’ நிறுவன பொம்மை ஒன்றில், Fun gifts for boys (சிறுவர்களுக்கான வேடிக்கை பரிசு) என லோகோ அச்சடிக்கப்பட்டிருக்கிறது. கடுப்பான மேகி அந்தப் பரிசு பார்சலை கையில் வைத்துக்கொண்டு முறைத்தபடி போட்டோ எடுத்து, தனது அம்மாவின் ட்விட்டரில் பதிவிட்டார். ஒரே நாளில் லட்சங்களில் ரி-ட்வீட் அடித்து ‘டெஸ்கோ’ நிறுவனத்துக்கும் தகவல் போயிருக்கிறது. தங்கள் தவறை உணர்ந்த பொம்மை நிறுவனம் ‘சிறுவர்களுக்கான பொம்மை’ என்பதை நீக்கிவிட்டு ‘சிறுவர் மற்றும் சிறுமியர்’ என இருபாலருக்கும் பொதுவான லோகோவை அச்சடிப்போம் என அறிவித்துள்ளது. மேகி ஹேப்பி அண்ணாச்சி!

பாகிஸ்தானின் சர்ச்சை நாயகி வீணா மாலிக்… மீண்டும் புது சர்ச்சையில்! ஆனால், இந்தச் சர்ச்சையால் அவருக்கு 26 வருட சிறைத் தண்டனை. பாகிஸ்தான் சேனல் ஒன்றில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கணவர் பஷீர் கானுடன் பங்கேற்ற வீணா, இஸ்லாமிய மதப் பாடலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் ஆடிப் பாடி கேலி செய்தார் என்பது குற்றச்சாட்டு. ‘மதம் தொடர்பான விஷயங்களை அசிங்கப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என, வீணா, அவரது கணவர் மற்றும் சேனல் நிர்வாகத்தினருக்கு 26 வருட சிறைத் தண்டனையும் சுமார் எட்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது பாகிஸ்தான் நீதிமன்றம். ’26 வருடங்கள் என்பது என் மொத்த வாழ்நாள். மேல்முறையீட்டில் என் பக்க நியாயத்தை நிரூபிப்பேன்’ என பதில் கூறி அமைதியாகிவிட்டார் வீணா. வீண் சர்ச்சை தேவையா?

 ‘ஒரு நட்சத்திரமாக இருப்பதன் வலி உங்களுக்குத் தெரியாது’ என முதன்முறையாக ஆதங்கத்துடன் மனம் திறந்திருக்கிறார் இந்தி நடிகை அலியா பட். ‘இன்னைக்கு இருக்கிற போட்டியில் நம்மளை பெஸ்ட்டா காட்டிக்க, ஒவ்வொரு நிமிஷமும் மெனக்கெட வேண்டியிருக்கு. எனக்கு இது பிடிச்சிருக்கு. அதனால நான் ஓடிட்டே இருக்கேன். ஓடுறது அலுத்துப்போறப்ப ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதான். நான் ஓடுற வேகம் முன்னபின்ன இருக்கலாம். ஆனா, நான் ஓடுறதே தப்புனு குத்தம் சொல்ற உரிமை யாருக்கும் இல்லை’ எனப் பொடிவைத்துப் பேசியிருக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராணி!